தர்மபிரபு – விமர்சனம்


முதன்முறையாக யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள முழு நீள காமெடி படம். மொத்த படத்திலும் காமெடி ஒர்க் அவுட் ஆகி உள்ளதா..? பார்க்கலாம்..

எமதர்மராஜன் ராதாரவிக்கு வயதாவதால் தனது வாரிசு யோகிபாபுவுக்கு பட்டம் சூட்ட நினைக்கிறார். ஆரம்பத்தில் பதவி வேண்டாம் என்று மறுத்தாலும் ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி தர்மராஜா பொறுப்பை ஏற்கிறார் யோகிபாபு. ராதாரவிக்கு பின்னால் எமதர்மன் ஆகிவிடலாம் என கணக்குப் போடும் சித்திரகுப்தன் ரமேஷ் திலக்கிற்கு இது அதிர்ச்சி அளிக்கிறது. எப்படியாவது யோகிபாபுவை அந்த பதவியில் இருந்து இறக்கிவிட்டு, தானே முடிசூட்டிக் கொள்ளலாம் என திட்டம் தீட்டும் ரமேஷ் திலக், யோகிபாபுவை தந்திரமாக பூலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கே விபத்தில் சிக்க இருக்கும் ஒரு குழந்தையின் உயிரை எதிர்பாராமல் யோகிபாபு காப்பாற்றுகிறார். ஆனால் அந்த விபத்தால் ஜாதிக்கட்சித் தலைவர் அழகம் பெருமாள் உள்ளிட்ட சில கயவர்களின் விதியை முடிக்க நினைத்திருந்த சிவபெருமான் திட்டத்தில் பிசகு ஆஎற்பாட்டு அவர்கள் மரணத்தில் இருந்து தப்பிக்கின்றனர். இதை அறிந்த சிவபெருமான் கொதித்துப் போய் ஒரு வாரத்திற்குள் இந்த தவறை சரி செய்யாவிட்டால் உங்களையெல்லாம் பதவியிலிருந்து தூக்கி விட்டு புதிய யமலோகத்தை படைத்து விடுவேன் என எச்சரிக்கை விடுத்து செல்கிறார்.

யோகிபாபுவால் தான் செய்த தவறை அந்த ஒரு வார கெடுவுக்குள் சரி செய்ய முடிந்ததா,,? விதி மாறிப்போனதால் மீண்டும் அழகம் பெருமாளை அழிக்க முடிந்ததா..? எமதர்மராஜா பதவியை தக்க வைத்துக்கொள்ள முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.

யோகிபாபு என்ட்ரி கொடுத்ததிலிருந்து இறுதிவரை படத்தை கலகலப்பாக கொண்டு செல்ல முயற்சித்து அதில் ஓரளவு ஒப்பேற்றி இருக்கிறார்கள். மொத்த படத்தையும் யோகிபாபுவே தாங்க வேண்டிய கட்டாயம் என்பதால் ஆயிரம் வாலா சரவெடியில் ஐநூறு வெடிகள் வெடிக்காமல் போவது போல ஒரு பல காமெடி கவுண்டர்கள் மட்டும் மிஸ் ஆகி விடுகின்றன. மற்றபடி படம் கலகலப்பாகவே செல்கிறது. எமதர்மராஜா கதாபாத்திரத்திற்கும் அந்த கதாபாத்திரத்தை வைத்து இன்றைய அரசியல் சமூக நிகழ்வுகளை நையாண்டி செய்வதற்கும் பொருத்தமான ஆளாக யோகிபாபு அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியுள்ளார்.

எமதர்மன் பதவிக்கு ஆசைப்படும் ரமேஷ் திலக் இந்த கதாபாத்திரத்தில் கனம் தாங்காமல் தடுமாறுகிறார் அவரால் பெரிய அளவில் காமெடியில் சோபிக்க முடியவில்லை. யோகிபாபுவின் தந்தையாக சீனியர் எமதர்மராஜனாக வரும் ராதாரவிக்கு இன்னும் அதிக காட்சிகளையும் அரசியல் நையாண்டி வசனங்களையும் கொடுத்திருக்கலாம்.. ஏனோ தெரியவில்லை, அடக்கி வாசிக்க வைத்து விட்டார்கள். யோகிபாபுவின் தாயாக வரும் ரேகா கூட தன் பங்கிற்கு காமெடியில் கலக்கி எடுத்திருக்கிறார். சிவபெருமான் கெட்டப்பில் மொட்ட ராஜேந்திரன் செம பர்பாமென்ஸ் பண்ணுகிறார். காமெடி களேபரங்கள் சூறாவளியாக சுழன்று அடிக்கும்போது அதில் ஜனனி ஐயர் அவரது அம்மாஞ்சி காதலர் எல்லாம் காணாமல் போய் விடுகின்றனர்.

எமலோகத்தில் நடைபெறும் விசாரணைகளில் தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் சில சமூக அக்கிரமங்களுக்கு சாட்டையடி கொடுக்க நினைத்திருப்பது சரிதான்.. எமதர்மன் கதையை எடுத்துக்கொண்டவர்கள் அரசியலை நையாண்டி செய்தது ஒகே.. ஆனால் எதிர்க்கட்சியை மட்டும் கலாய்க்காமல் டீசண்டாக ஒதுங்கியது ஏன்..? வட மாவட்ட ஜாதிக்கட்சி தலைவரை அசிங்கப்படுத்தும் நோக்கத்துடன் வில்லனையும் அவர் தொடர்பான காட்சிகளையும் சித்திரித்து இருப்பதில் உள் நோக்கம் இருப்பது நன்றாகவே தெரிகிறது… தவிர அந்தஸ்து பேதம் எல்லா தரப்பு மக்களிடம் தான் இருக்கிறது. இப்படி படத்துக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் நிறைய இருக்கின்றன. மற்றபடி காமெடி என்கிற பெயரில் ஏதோ ஒப்பேற்றி இருக்கிறார்கள். யோகிபாபு அனேகமாக இனிமேல் கதாநாயகனாக நடிக்க மாட்டார் என நம்பலாம்.