எங்கிட்ட மோதாதே – விமர்சனம்


ரஜினி ரசிகரான நட்டியும் கமல் ரசிகரான ராஜாஜியும் கட் அவுட் படம் வரைபவர்கள்.. நட்டியின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்து ஜானி ஆர்ட்ஸ், குரு ஆர்ட்ஸ் என அவரவர் தலைவர்கள் பெயரில் தனியாக ஆளுக்கொரு ஆர்ட்ஸ் கம்பெனி ஆரம்பிக்கிறார்கள்..

கொஞ்ச நாள் கழித்து ராஜாஜி தனது தங்கை சஞ்சிதா ஷெட்டி மற்றும் அம்மாவை அழைத்து வந்து தனி வீடு பார்த்து தங்கவைக்கிறார்.. இன்னொரு பக்கம் ஊருக்குள் மாவரைத்து தரும் பார்வதி நாயரையும் டாவடிக்கிறார்.. சஞ்சிதாவுக்கும் நட்டிக்கும் என இன்னொரு காதல் ரூட்டும் ஒருபக்கம் ஓடுகிறது.

தியேட்டர்களில் கட் அவுட் வைக்கும் பிரச்சனையில் உள்ளூர் அரசியல்வாதி ராதாரவியின் வலதுகையாக கேண்டீன் காண்ட்ராக்ட் நடத்தும் விஜய்முருகனை ஒரு தருணத்தில் நட்டி அடித்துவிடுகிறார். இதனால் அவரை பழிதீர்க்க தருணம் பார்த்து கறுவிக்கொண்டு இருக்கிறார் விஜய் முருகன்..

இந்நிலையில் சஞ்சிதா–நட்டி காதல் விவகாரம் ராஜாஜிக்கு தெரியவர, அன்றுமுதல் நட்பில் விரிசல் விழுந்து இருவரும் எதிரிகளாகின்றனர்.. நட்டி விஜய் முருகனை பகைத்துக்கொள்ள, ராஜாஜியோ அவரிடம் சரண்டர் ஆகின்றார்.. பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா. இல்லை அரசியல் சூழ்ச்சிக்கு பலியானார்களா என்பது க்ளைமாக்ஸ்.

எண்பதுகளில் இருந்த கட் அவுட் கலாச்சாரத்தையும், ரஜினி-கமல் ரசிகர்களுக்கு இடையே நிலவி வந்த மோதலையும், இதற்குள் நுழைய பார்க்கும் அரசியலையும் வைத்து சுவாரஸ்யமாக கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ராமு செல்லப்பா. ரஜினி-கமல் ரசிகர்களாக நட்டியும் ராஜாஜியும் ஏக பொருத்தமான தேர்வு…

தான் அறிமுகமான ‘நாளை’ படத்தில் இருந்தே தனது நடை உடை பாவனைகளில் ரஜினியை பிரதிபலித்து வந்துகொண்டிருப்பதால் நட்டியை சுலபமாக ரஜினி ரசிகனாக ஏற்றுக்கொள்ள நம்மால் முடிகிறது.. ரசிகர் மன்ற, கட் அவுட் விவகாரங்களில் விட்டுக்கொடுக்காமல் சீறுவது, அடாவடி பண்ணும் விஜய் முருகனை போட்டு பொளந்து எடுப்பது,. ராதாரவியையே தங்களது ரசிகர் மன்ற அரசியல் கணக்கை சொல்லி அசர வைப்பது என படம் முழுக்க கெத்து காட்டியிருக்கிறார் நட்டி..

அதேபோல ராஜாஜியும் கமல் ரசிகனுக்குன்டான இலக்கணத்துடனேயே படம் முழுக்க வளைய வருகிறார். அரசியல்வாதியாக ராதாவியின் நடிப்பு எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாத ஒன்று.. வில்லத்தனத்துக்கு சரியான தோற்றத்துடன் கூடிய ஆளாக (ஆர்ட் டைரக்டர்) விஜயமுருகன் அம்சமான தேர்வு..

கதாநாயகிகள் சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் இருவரும் நாயகர்களை காதலிக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.. இருந்தாலும் நேட்டிவிட்டி என்கிற பெயரில் இருவருக்குமான டல் மேக்கப்பெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். படம் முழுக்க முருகானந்தம் மற்றும் வெற்றிவேல் ராஜா இருவரின் காமெடியும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

எம்.சி.கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு கதை நிகழும் காலகட்டத்துக்கே நம்மை அழைத்து செல்கிறது.. குறிப்பாக தியேட்டர்களின் ரிலீஸ் நேர நிகழ்வுகளை அற்புதமாக படமாக்கி இருக்கிறார்.. நடராசன் சங்கரன் இசையில் காலகட்டத்தை மீறிய நவீன இசை தென்படுவதை தவிர்த்திருக்கலாம். அவை படத்தின் தேவைப்படாத இடங்களில் வருவதையும் தவிர்த்திருக்கலாம்.

கோல்டு ஸ்பாட், நேசமணி போக்குவரத்து கழகம் என பல விஷயங்களில் பார்த்து பார்த்து செய்து எண்பதுகளை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறார் கலை இயக்குனர் ஆறுச்சாமி. ரஜினி-கமல் ரசிகர்கள், கட் வுட் கலாச்சாரம் என சுவையான ஏரியாவில் கதை பின்னியிருக்கும் இயக்குனர் ராமு செல்லப்பா, அதற்குள் அழகாக அரசியலை நுழைத்து காமெடியில் இருந்து ஆக்சன் மூடுக்கு நம்மை மாட்டை மாற்றும் வேலையை ஓரளவு சரியாகவே செய்திருக்கிறார்..

அன்றைய ரஜினி-கமல் ரசிகர்களுக்கு தங்களது கடந்தகால ஞாபகங்களை தூண்டுவதோடு, இன்றைய அஜித்-விஜய் ரசிகர்களுக்கு ரஜினி-கமல் ரசிகர்களின் மவுசையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்தப்படம்.. கலகலப்பான பொழுபோக்கு படம் என்பதால் நம்பி இந்தப்படத்திற்கு செல்லலாம்.