ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம்


தனது முன்னாள் காதலிகள் மூவருக்கு தனது திருமண அழைப்பிதழை கொடுக்க அதர்வா மதுரைக்கு வருவதாக கதை துவங்குகிறது. மதுரையில் சூரியை துணைக்கு அழைத்துக்கொண்டு அவரிடம் சொல்லும் பிளாஸ்பேக்குடன் முழு படத்தையும் நகர்த்தி செல்கிறார் அதர்வா.. எதனால் அந்த மூன்று பெண்களும் அதர்வாவை விட்டு விலகினார்கள், அல்லது அதர்வா அவர்களை விட்டு ஒதுங்கினார், இந்த நான்காவது பெண் எப்படி அதர்வாவுக்கு செட்டானார் என்பதை காதல் இல்லையில்லை, காமெடி மணக்க மணக்க சொல்லியிருக்கிறார்கள்.

ஜெமினி கணேசன் ரோலில் காதல் மன்னனாக அதர்வாவும் சுருளிராஜன் ரோலில் சூரியும் செம பிட்டாக பொருந்தி இருக்கிறார்கள். அதர்வாவிற்கு ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இந்த படம் செம்ம தீனி. அடிதடி என்றில்லாமல் படம் முழுவதும் காதல் இளவரசனாகவே வலம் வருகின்றார். அதர்வாவுக்கு காதலும் சரி, காமெடியும் சரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. சூரியின் அடக்கி வாசித்துள்ள காமெடி ரசிக்கும்படியாக இருக்கிறது. அதிலும் அவரது மனைவி கேரக்டரில் வரும் ட்விஸ்ட் செம.

ஒன்றுக்கு நான்காக கதாநாயகிகள் சுவாரஸ்யப்படுத்துகிறார்கள்.. ரெஜினா, பிரணீதா, அதிதி போஹன்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் என நாலுபேரும் நான்குவிதமான நடிப்பில் நம்மை கவர்கிறார்கள். சுல்தான் கட்டப்பாவாக நான் கடவுள் ராஜேந்திரனும் செம லந்து பண்ணுகிறார். இமானின் இசையில் பாடல்கள் இனிமையாக இருந்தாலும் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் கொஞ்சம் போரடிக்கவும் செய்கிறது..

கலகலப்பாக படத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சில சிக் ஜாக் வேலைகளை அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு செய்திருக்கிறார். சில இடங்களில் கொஞ்சம் ஓவராக தெரிந்தாலும் பெரும்பாலும் ரசிக்கும்படியாகவே காட்சிகளை நகர்த்தியுள்ளார்.. படத்தின் முதல் அரை மணி நேரம், கதைக்குள்ளே படம் வராமல், காமெடி என்ற பெயரில் பில்டப் கொடுத்து சோதிப்பதை கவனித்து தவிர்த்திருக்கலாம்.