ஹீரோ – விமர்சனம்


1990களில் பிறந்தவர்களுக்கு சக்திமான் என்ற கதாபாத்திரத்தை மறந்திருக்க முடியாது. நாயகன் சிவகார்த்திகேயனும் தன்னுடைய சிறுவயதில் பார்த்து ரசித்த சக்திமான் போன்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களைப் போன்று தானும் எதிர்காலத்தில் ஒரு சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்று எண்ணுகிறார்.

சக்திமான் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று அறியாமல் தன்னை சக்திமான் காப்பாற்றுவார் என்று எண்ணி விபரீதமான முடிவு எடுக்கிறார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரிடம் சக்திமான் என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் தான். நாம் தான் நம்முடைய பிரச்சினைகளை சந்தித்து அதிலிருந்து மீள வேண்டும் என்று சிறுவயது சிவகார்த்திகேயனிடம் அறிவுரை கூறி புரிய வைக்கிறார் அவருடைய தந்தை.

நாயகன் சிவகார்த்திகேயன் வளர்ந்து பெரியவன் ஆகிறார். பிரிண்டிங் பிரஸ் ஒன்றை நடத்தி வாழ்க்கை நடத்துகிறார்.

இது ஒரு புறமிருக்க, அர்ஜீன் யாரும் அறியாமல் மறைமுகமாக ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். திறமை இருந்தும் பெயில் ஆன மாணவர்களை எல்லாம் ஒன்று திரட்டி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளியுலகிற்கு கொண்டு வருவதே அர்ஜுனின் நோக்கம். அதற்காகவே அந்தப் பள்ளியை நடத்தி வருகிறார் அர்ஜீன்.

அந்தப்பள்ளியில் நாயகன் சிவகார்த்திகேயன் இருக்கும் பகுதியில் வசித்து வரும் இவானா என்னும் பெண் படித்து வருகிறார். இவனாவிறக்கு ஏரோநாட்டிக்கல் படிப்பை படிக்க வேண்டும் என்பது ஆசை. இவானாவின் ஆசையை அர்ஜீனுக்கு தெரியாமலேயே நாயகன் சிவகார்த்திகேயன் நிறைவேற்றி விடுகிறார்.

இந்நிலையில் இவானா புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். இவானாவின் கண்டுபிடிப்பு வெளியுலகிற்கு தெரிய வந்தால் அது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வில்லன் அபி தியோல், சில சூழ்ச்சி வேலைகள் செய்கிறார். இதனால் மனமுடையும் இவானா ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்.

இதுபோன்ற செயல்களை தடுக்க ஒரு ஹீரோ வேண்டும் என அர்ஜுன் சிவகார்த்திகேயனிடம் கூறுகிறார். இதன் பின்னர் சூப்பர் ஹீரோவாக மாறும் சிவகார்த்திகேயன் என்ன செய்கிறார்? அர்ஜுன் மறைந்து வாழ்வது ஏன்? என்பதே மீதிக்கதை.

நாயகன் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய நடிப்பில் மெருகேறிக் கொண்டே வருகிறார். காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.

நாயகி இயக்குநர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

படத்தின் மற்றொரு நாயகன் அர்ஜுன் தான், தனது அனுபவ நடிப்பால் மனதில் நிற்கிறார். அபி தியோல் தனது வில்லத்தனதால் மிரள வைக்கிறார். மேலும் இவானா, ரோபோ சங்கர் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளனர்.

நம் நாட்டின் கல்விமுறை வேலையாட்களை தான் உருவாக்குகிறதே தவிர அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்குவது இல்லை. குழந்தைகளின் மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர், அவர்களது திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லிய விதத்திற்காக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலமாக இருப்பது வசனங்கள். நாயகன் சிவகார்த்திகேயன், அர்ஜீன், மற்றும் வில்லன் அபிதியோல் ஆகியோர் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ’ஹீரோ’ படத்தின் மூலம் சூப்பர் ஹீரோவாக உருவாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.