இலை – விமர்சனம்


இலை நன்றாக படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி. தம்பி, கைக்குழந்தையாய் தங்கை என இருக்கும் இலையின் குடும்பத்தில் அம்மா படிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்.. தனது தம்பிக்கு இலையை திருமணம் செய்துகொடுத்து விட துடிக்கிறாள்.. ஆனால் இலையின் அப்பாவுக்கோ தனது மகளை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என ஆசை. அவர் மட்டுமே அவளது படிப்புக்கு ஊக்கம் தருகிறார்.

இலையின் சக மாணவி ஒருத்தி இலை முதல் மதிப்பெண் வாங்குவதை பார்த்து பொறுமுகிறாள்.. இதைக்கண்ட அவளது பண்ணையார் தந்தை, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இலையை கடைசி தேர்வு எழுதவிடாமல் தடுக்க, இலையின் அப்பாவுக்கு விபத்தை ஏற்படுத்துகிறார்..

அப்பா மருத்துவமனையில் உயிருக்கு போராட, அவரது கனவான தனது படிப்பை நல்லபடியாக நிறைவேற்ற தேர்வு எழுத போகவேண்டுமென்று தவியாய் தவிக்கிறாள் இலை.. அவளது தந்தையின் ஆபத்தான நிலைமை தெரிந்தும், பண்ணையாரின் சூழ்ச்சியை மீறியும், இலையால் தேர்வெழுத முடிந்ததா என்பதுதான் மீதிப்படம்..

சாலை, பேருந்து வசதி இல்லாத, பெண்களுக்கு படிப்பு எதற்கு என நினைக்கின்ற ஒரு மலை கிராமத்தில் இருந்து ஒரு பத்தாம் வகுப்பு மாணவி, தனது படிப்பை தொடரவும், தேர்வுகளை எழுதவும் என்ன பாடுபடுகிறாள் என்பதை மனம் வலிக்க சொல்லியிருக்கும் படம் தான் இந்த ‘இலை’..

தொன்னூறுகளில் நடப்பது போன்ற கதை.. அழகான மலை கிராமத்தை தேர்ந்தெடுத்ததற்காக இயக்குனருக்கு முதல் பாராட்டு.. பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியதற்காக இரண்டாவது பாராட்டு.. இலையாக நடித்துள்ள ஸ்வாதி நாராயணன் தனது உயிரை கொடுத்து நடித்துள்ளார்.. மொத்தப்படத்தையும் தாங்கி பிடிப்பதும் அவரே தான்..

அதிகாலையில் ஒரு மோசமான விடியல் பொழுதில் ஆரம்பித்து அவர் தேர்வெழுத செல்வதற்குள் அவர் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே, நமக்கே ஒரு கட்டத்தில் கண்ணீர் எட்டிப்பார்க்கிறது.. அதிலும் குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு வீடு வீடாக பார்த்துக்கொள்ள சொல்லி அவர் அலையும்போது, வெகு இயல்பாக நேர்த்தியான நடிப்பால் அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார் ஸ்வாதி..

படத்தில் நடித்துள்ள மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் பொருத்தமான தேர்வு.. கிடைத்த வசதிகளை கொண்டு ஒரு எளிய பட்ஜெட்டில் தரமான படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் பினீஷ் ராஜ்.