இந்திரஜித் – விமர்சனம்


விண்கல், ஆராய்ச்சி என ஒரு பேண்டசி படமாக வெளியாகி இருக்கும் படம் தான் இந்த இந்திரஜித்.

பல நூறு வருடங்களுக்கு முன் பூமியில் விழுந்த விண்கல் குறித்த ஆராய்ச்சி நடத்தி அந்த கல்லை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் விஞ்ஞானி சச்சின் கண்டேகேர்.. அந்த ஆராய்ச்சிக்கு உதவியாக துறுதுறு இளைஞரான கௌதம் கார்த்திக்கையும் இணைத்துக்கொள்கிறார். நானூறு வருடங்களுக்கு நோயே வராமல் தடுக்கும் சக்தியுள்ள அந்தக்கல் அருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகளின் கைப்பிடியில் சிக்கியுள்ள காட்டுப்பகுதியில் இருப்பதாக ஒரு மேப் மூலம் தெரிய வருகிறது.

அங்கே புறப்படும் கௌதம் கார்த்திக் குழுவினரை அவர்களை அறியாமலேயே பின் தொடர்ந்து அந்த கல்லை கைப்பற்ற நினைக்கிறார் தொல்லியல் துறை அதிகாரி சுதன்ஷு பாண்டே.. கௌதம் கார்த்திக்கால் அந்த கல்லை கண்டுபிடிக்க முடிந்ததா..? அந்தக்கல் யாரிடம் சென்று சேர்ந்தது என்பது க்ளைமாக்ஸ்.

ரசிகர்களுக்கு எப்போதுமே சுவாரஸ்யம் தருபவைதான் சாகச பயணக்கதைகள்.. அதில் பேண்டசி அம்சங்களும் சேர்ந்துகொண்டால் கேட்கவே வேண்டாம். ஆனால் இந்த இந்திரஜித் அதி சரியாக கொடுத்திருக்கிறதா என்றால் இல்லையென்றே சொல்லவேண்டும்.

தந்தையை போலவே துறுதுறு கேரக்டரில் ஜமாய்க்கிறார் கௌதம் கார்த்திக். அதனாலேயே படத்தின் சீரியஸ்னஸ் குறைந்துவிடுவதை இயக்குனர் கவினிக்க தவறிவிட்டார். மலைமேல் ஏறுவது, சறுக்குவது, மலைப்பகுதியில் ஜீப் ஓட்டுவது என நிறைய சாகசங்கள் செய்திருக்கிறார். அவரது கடின உழைப்புக்கான பாராட்டை நாம் கொடுத்தே ஆகவேண்டும்.

படத்தில் சோனாரிகா, அர்ஷிதா என இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் காதல் காட்சிகள் எதுவும் இல்லை.. ஆராய்ச்சி அதிகாரிகளாக வரும் சச்சின் கண்டேகர் மற்றும் சுதன்ஷு பாண்டே இருவருமே அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தி இருக்கிறார்கள். பூச்சாண்டி காட்டும் உதார் வீரராக எம்.எஸ்.பாஸ்கர் சில இடங்களில் (மட்டுமே) கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

படத்தின் மிக முக்கிய பலம் ராசாமதியின் ஒளிப்பதிவு.. மலைப்பகுதியில் நாமும் ஒரு சாகச பயணம் சென்றுவந்ததை போன்ற உணர்வு ஏற்படுகிறது. கேபியின் பின்னணி இசை அதிரவைக்கிறது. போரடிக்காத சாகச கதையை எடுத்த கலாபிரபுவின் யோசனை பாராட்டுக்குரியதுதான்.. ஆனால் அதில் மாவோயிஸ்ட்டுகள், யார் சுட்டாலும் ஹீரோவை துளைக்காத குண்டுகள் என சில கிளிஷே காட்சிகளை வேறுவிதமாக மாற்றி இருக்கலாம்..

படத்தில் ஹீரோவுக்கு தேவையான இடத்தில் தேவையானவை எல்லாம் டக் டக்கென கிடைப்பது எப்படி..? இப்படி பல பதிலில்லாத கேள்விகள் படத்தில் நிறைய இருக்கின்றன. அதேபோல அந்த விண்கல்லின் முக்கியத்துவத்தை இன்னும் எளிதாக விளக்கி இருந்தால் நம்மால் படத்துடன் இன்னும் இயல்பாக ஒன்ற முடிந்திருக்கும்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *