இப்படை வெல்லும் – விமர்சனம்


சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்ப்பவர் உதயநிதி.. வேலைபோன விபரத்தை, அரசு பஸ் ஓட்டுனரான அம்மா ராதிகாவுக்கு தெரிவிக்காமல், காதலி மஞ்சிமாவின் உதவியுடன் பிரச்சனைகளை சமாளிக்கிறார். மஞ்சிமாவின் போலீஸ் அண்ணன் ஆர்.கே.சுரேஷ் இவர்கள் காதலை தீவிரமாக எதிர்க்கவே, இருவரும் பதிவு திருமணம் செய்ய தயாராகிறார்கள்.

திருமணத்திற்கு முதல்நாள், தனது காரில் எதிர்பாராமல் அடிபட்ட டேனியல் பாலாஜியை, அவர்தான் போலீஸ் தேடிவரும் தீவிரவாதி என தெரியாமல் மருத்துவமனையில் சேர்த்து உதவுகிறார் உதயநிதி. அதேபோல டேனியல் விபத்தில் சிக்குவதற்கு முன்பே அவருக்கு பைக்கில் லிப்ட் கொடுத்து உதவுகிறார் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சூரி..

ஹைதராபாத்தில் தாங்கள் தேடிக்கொண்டு இருக்கும் டேனியல் பாலாஜி சென்னையில் குண்டுவெடிப்பை நிகழ்த்த வந்துவிட்டதை அறிந்த போலீஸ், அதற்கு உதயநிதியும் சூரியும் உதவியாக இருப்பதாக தவறாக புரிந்துகொண்டு அவர்களையும் துரத்துகிறது.. இதை சாக்காக வைத்து, உதயநிதியை என்கவுன்டரில் போட்டுத்தள்ள முடிவு செய்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

உதயநிதியும் சூரியும் இத்தனை களேபரங்களை தாண்டி தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை எப்படி நிரூபிக்கிறார்கள் என்பதும் டேனியல் பாலாஜியின் சதிச்செயல் முறியடிக்கப்பட்டதா என்பதும் மீதிக்கதை.

குண்டு வைக்க நினைக்கும் டேனியல் பாலாஜி, காதலியுடன் திருமணம் செய்துகொள்ளப் புறப்படும் உதயநிதி, மனைவியின் பிரவசத்திற்காகப் புறப்படும் சூரி என ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத மூன்று பேரின் வாழ்க்கையை இணைத்து, ஒரு ஆக்ஷன் த்ரில்லரை உருவாக்குவது சவாலான காரியம்தான். அதற்கென பொருத்தமான கதையையும் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் கௌரவ் நாராயணன்

இந்த வருடம் வெளிவந்த தன் படங்களில், உதயநிதிக்கு இதில் வித்தியாசமான கதைக்களம். நடிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். ஆனாலும், அவரிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆனது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. .

காமெடி, குணச்சித்திரம் என்ற இரட்டைக்குதிரைச் சவாரி செய்திருக்கிறார் சூரி. அவரை வழக்கம்போல கதாநாயகனின் நண்பராக வைத்து, நகைச்சுவைக்குப் பயன்படுத்தாமல் அழுத்தமான பாத்திரத்தை அவருக்கு அளித்திருப்பது ஒரு மாறுபட்ட முயற்சி. கவர்ச்சி, பாடல்களுக்கு மட்டுமே கதாநாயகிகள் பெரிதும் பயன்படுத்தப்படும் நிலையில் கதையோடு ஒன்றிப் பயணிக்கும் பாத்திரம் மஞ்சிமாவுக்குக் கிடைத்திருக்கிறது. நடிப்பில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

மஞ்சிமாவின் கோபக்கார அண்ணனாக கோபமுகம் காட்டும் ஆர்.கே.சுரேஷ் பொருத்தமான தேர்வு. படம் முழுதும் தனது இருப்பை அழுத்தமாக பதிய வைக்கிறார். பெண் பேருந்து ஓட்டுநராக நிஜமாகவே பயணிகளை வைத்துக்கொண்டு பஸ் ஓட்டி ‘அடடே’ என ஆச்சர்யப்பட வைக்கிறார் ராதிகா. டேனியல் பாலாஜி வசனம் அதிகமாக இல்லாமல் செயல்களாலேயே மிரட்டுகிறார். அவரை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

இமான் இசை என்றாலும், படத்தின் கதைக்கு ஏற்ப பாடல்கள் அதிகம் இல்லாதது படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம்.. பரபர சேசிங் காட்சிகளால் நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கிறது ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு.. கதையின் முடிச்சுகளை சுவாரஸ்யமாகப் போட்டுள்ள இயக்குநர், பொருத்தமான திரைக்கதையின் மூலம் அவற்றை இயல்பாக அவிழ்க்கிறார்.

வெவ்வேறு பின்னணிகளும் நோக்கங்களும் கொண்டவர்கள் ஒரு புள்ளியில் இணைவதையும் பொருத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். என்றாலும், திரைக்கதை பல இடங்களில் மிக மெதுவாக நகர்வது சோர்வை உண்டாக்குகிறது. இருந்தாலும் சில காட்சிகளை புத்திசாலித்தனமாக வடிவமைத்திருப்பது, நிறைய இடங்களில் லாஜிக்காக காட்சிகளை நகர்த்தியிருப்பது என பாசிடிவான அம்சங்களும் படத்தில் இருக்கவே செய்கின்றன..

படம் பார்த்துவிட்டு வரும் யாரும் இது மோசமான படம் என்று சொல்ல மாட்டார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.