இருமுகன் – விமர்சனம்


ஆஸ்துமா நோயாளிகள் உபயோகப்படுத்தும் ஒரு இன்ஹேலர். ஆனால் அதில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதோ மோசமான வாயு. அதை ஒரு சாதாரண மனிதன் முகர்ந்தால் கூட, அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவன் யானை பலம் கொண்டவனாக மாறிவிடுவான் இதை தயாரிக்கும் கொடியவன் ஒருவன், இதை பரிசோதித்து பார்த்து, இதற்கு மார்க்கெட்டில் டிமாண்ட் ஏற்படுத்தும் விதமாக, இதனை பயன்படுத்தி மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் திடீர் தாக்குதல் நடத்துகிறான்..

இது தொடர்பாக பழைய குற்றவாளி ஒருவரை சந்தேகிக்கும் டில்லியில் உள்ள உளவுத்துறை அதிகாரி நாசர், அதை கண்டுபிடிப்பதற்காக ரா ஏஜென்ட்டான விக்ரம் மற்றும் நித்யா மேனன் இருவரையும் மலேசியா அனுப்பி வைக்கிறார். ஏற்கனவே விக்ரமின் மனைவி நயன்தாராவின் மரணத்துக்கு காரணமான, அதனாலேயே விக்ரமால் அழிக்கப்பட்டதாக கருதப்பட்ட லவ் என பெயர் கொண்ட அந்த வில்லன் (அவரும் இன்னொரு விக்ரம்) தான் இந்த தாக்குதலின் சூத்திரதாரி என தெரிந்தே தனது தேடுதல் வேட்டையை துவங்குகிறார் விக்ரம்..

சில பல அதிரடிகளுக்குப்பின் லவ்வை நெருங்குகிறார்.. அங்கே தனது மனைவி நயன்தாரா உயிரோடு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார். ஒருவழியாக நயன்தாராவின் உதவியுடன் லவ்வை சிறைபிடித்து போலீஸில் ஒப்படைக்க, விசாரணையின்போது இன்னொரு ஏஜென்டான நித்யா மேனனை தாக்கிவிட்டு தப்புகிறான் லவ்.. அதுமட்டுமல்ல, தான் கண்டுபிடித்துள்ள மிக ஆபத்தான இன்ஹேலர்களை எதிரி நாடுகளுக்கு கைமாற்றும் முயற்சியில் இறங்குகிறான் லவ். லவ்வின் முயற்சியை விக்ரம் முறியடித்தாரா, என்பதுதான் க்ளைமாக்ஸ்..

கதை 99 சதவீதம் மலேசியாவில் தான் நடக்கிறது. விக்ரமுக்கு இதில் இரண்டு கதாபாத்திரங்கள்… ரா ஏஜென்ட்டான விக்ரம் விறைப்பும் முறைப்புமாக அந்த கேரக்டரில் கச்சிதமாக பொருந்துகிறார். ஆனால் லவ் என்கிற அந்த பெண் தன்மை கொண்ட ஆண் வேடத்திற்கு, விக்ரம் எதற்கு என்று புரியவில்லை.. சொல்லப்போனால் அந்த பெண் தன்மை கொண்ட ஆண் கேரக்டரே படத்தில் எதற்கு என்று தெரியவில்லை.. அதனால் அந்த கேரக்டரை ஏற்று நடித்தற்காக விக்ரமை பாராட்ட முடியாது.. பாராட்டவும் கூடாது.. இனி வித்தியாசம் காட்டுகிறேன் என்கிற பெயரில் விக்ரம் இதுபோன்று தத்து பித்துவென ஏதாவது பண்ணாமல் இருந்தால் போதும் சாமி.

நயன்தாரா.. கொஞ்சம் கிளாமர் உடையில் வந்து கிளுகிளுப்பு காட்ட முயன்றாலும் அவரது முதிர்கன்னி தோற்றம் அதற்கு தடா போட்டு விடுகிறது. நயன்தாராவை வைத்து பின்னப்பட்ட சஸ்பென்ஸ் உண்மையிலே பாராட்டவேண்டிய ஒன்றுதான். அதேபோல பழைய நினைவுகளை மறந்துபோயிருந்த நயன்தாராவுக்கு அந்த இன்ஹேலர் மருந்தே அதை மீட்டுக்கொடுப்பதும் சரியான யுக்தி தான்.

நித்யா மேனன், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ரித்விகா என இன்னும் பிற பாத்திரங்களும் தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.. மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்காமல் விட்டது போல ஹாலிவுட் தரத்தில் படம் எடுப்பதாக சொல்லிவிட்டு, அப்புறம் எதற்கைய்யா பாடல்கள்..? ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் சுமார் என்பதும் அதுவே படத்திற்கு வேகத்தடை என்பதும் சோகம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு தேவையான அளவுக்கு மலேசியாவை பயன்படுத்தி இருக்கிறது.

ரா ஏஜெண்ட் என்கிற ஏ-கிளாஸ் ஆடியன்சுக்கான கதையை படமாக இயக்கியதற்காக இயக்குனர் ஆனந்த் சங்கரை பாராட்டலாம். ஆனால் அதை சி செண்டர் ஆடியன்ஸ் வரைக்கும் ரீச்சாகும் விதமாக கொண்டு சென்றிருக்கிறாரா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும் குறிப்பாக இடைவேளை வரைக்கும் தொய்வில்லாமல் கதையை நகர்த்தி இருக்கும் ஆனந்த் ஷங்கர், இடைவேளைக்குப்பின் நிறையவே தடுமாறி இருக்கிறார்..

இன்ஹேலரில் உள்ள மருந்தை சுவாசித்தால் ஐந்து நிமிடத்திற்கு பலசாலி ஆகிவிடுவதுபோல அதன்பிறகு இரண்டு மணி நேரத்திற்கு அவர்கள் மயக்கமாக இருப்பார்கள் என்று புது விஷயம் ஒன்றை உள்ளே புகுத்தியிருக்கும் இயக்குனர், நிறைய இடங்களில் தனக்கு வசதியாக அந்த லாஜிக்கை தானே கன்னா பின்னாவென மீறியிருக்கிறார்.

அந்த மருந்தை சுவாசிக்கும் வில்லன் விக்ரம் மட்டும் ஐந்து நிமிடம் கழித்தும் கூட மயக்கமடையாமல் மலேசியாவுக்குள் சுற்றுவது எப்படி..? கிளைமாக்ஸில் அந்த மருந்தால் ஐந்து நிமிடம் கழித்து மயக்கமடைந்த நல்ல விக்ரமும் நயன்தாரா குரல் கேட்டு, அதிலும் மைக் மூலமாக கேட்டு உடனே விழிப்பது எப்படி..?

பயங்கரவாதத்துக்கு துணைபோக கூடிய ஒரு சாதனத்தைத்தான் வில்லன் விக்ரம் கண்டுபிடித்திருக்கிறார் என்பது மலேசிய போலீசுக்கு தெரியாதா என்ன.? பின் எப்படி லாக்கப்பில் அடைபட்டுள்ள வில்லன் விக்ரம் சுவாசிக்க திணறுவதுபோல நடித்து, தன்னுடைய இன்ஹேலரை எடுத்து தர சொல்ல, போலீசும் கொஞ்சம் கூட யோசிக்காமல் எடுத்து தருவதையும் அதை வைத்து விக்ரம் தப்பிப்பதையும் பார்க்கும்போது மலேசிய போலீஸ் அவ்வளவு முட்டாளா என்ன என்றுதான் நினைக்க தோன்றுகிறது. அந்த இன்ஹேலர் வைத்திருக்கும் பேக் திடீரென எங்கிருந்து முளைத்தது.?

அதேபோல போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கும் வில்லன் விக்ரம், மலேசிய மந்திரி சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குள் சாதாரணமாக உலாவுவது, தனக்கு தேவைப்பட்ட கெமிக்கலை எல்லாம் அங்கிருந்து எடுத்து பயன்படுத்துவது, போலீஸாரின் காமெரா சர்க்யூட்டை டிஸ்கனெக்ட் பண்ணுவது எல்லாமே வழக்கமான சத்யராஜ்-கவுண்டமணி காம்பினேஷன் படங்களிலேயே நாம் காமெடியாக பார்த்து சிரித்திருக்கோமே பாஸ்.. கொஞ்சம் புதுசா யோசிக்க கூடாதா..?

லவ் விக்ரம், மந்திரியை கொன்று, அந்தப்பழியை ரா ஏஜெண்ட் விக்ரம் மேல் வரும்படி செய்துவிட்டு தப்பிப்பதும், அதை தெரியாத மலேசிய போலீஸ் அவரை குற்றவாளியாக்குவதும் உடனே அந்த விக்ரமும் போலீசிடம் இருந்து தப்பிப்பதும் கண்ணை கட்டுகிறது சாமி.. வயிற்றில் குண்டடிபட்ட ரித்விகா உடனே செத்துப்போகிறாராம், நெற்றியில் குண்டடிபட்ட நயன்தாரா அதன்பின்னர் மலையில் இருந்து கீழே விழுந்தும் கூட பிழைத்து விடுகிறாராம்…. அப்புறம்…

நாங்களே செகண்ட் ஹாப் தொடங்கின முதல் படத்தை பார்க்க முடியாமல் கலாய்த்து கொண்டு படம் பார்க்கிறோம்.. சார் .. படத்தை கலாய்க்க இன்னும் இருக்கு என கிளைமஸ்ல வச்சீங்க பாருங்க ஒரு “மேட்டர்”.. 24 மணிநேரத்தில் முடிக்கிறேன் பாருன்னு.. நல்ல படம் எடுக்கிறவங்க வைக்கிற சீனா இது?

போதுமய்யா.. இனி உங்கள் பாடு.. விக்ரம் பாடு.. இத்தனையும் கேட்டுவிட்டு, இல்லை.. நான் விக்ரம் ரசிகன்.. நான் லாஜிக் லாம் பார்க்க மாட்டேன் என்பவர்கள் தாராளமாக சென்று வாருங்கள்..

Rating: 2.5/5

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *