இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்


அடல்ட் காமெடிப்படம் எடுப்பது என தீர்மானித்தே இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள்.

விமலும் சிங்கம்புலியும் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்ப்பவர்கள்.. குறைவான சம்பளமே என்பதால் பார்ட் டைமாக பூட்டிய வீடுகளில் சில்லறை திருட்டுகளை நடத்துகிறார்கள். பணத்தை திருடக்கூடாது என்பது அவர்கள் கொள்கை. இதில் சிங்கம்புலிக்கு மனைவி ஓடிப்போன சோக கதையும், விமலுக்கு லண்டனில் இருந்து ஓடிவந்த சோக கதையும் உண்டு.. இருந்தாலும் விமலின் வாழ்க்கை எதிர்வீட்டு ஆண்ட்டியுடன் உல்லாசம், ஆண்ட்டி வீட்டுக்கு வந்த உறவுப்பெண் ஆஷ்னா சாவேரியுடன் சல்லாபம் என ஒரு பக்கம் குஜாலாகவே போகிறது.

இந்த நிலையில் திருடப்போன இடத்தில் ஒரே நேரத்தில் இவர்கள் இருவருக்குமே ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் பணம் கிடைக்கிறது. விஷயத்தை மறைக்கும் இருவரும் மறுநாள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாமல் கூட, ஊரைவிட்டே ஓடுகின்றனர்.

ஒரு பக்கம் போலீஸ் அதிகாரி மன்சூர் அலிகான், எஸ்.ஐ பூர்ணாவின் உதவியுடன் வலைவீசி இவர்களை தேடுகிறார். இன்னொரு பக்கம் ஆனந்தராஜ் தனது அடியாட்களுடன் சேர்ந்து இவர்களை சல்லடை போட்டு தேடுகிறார். மூன்றாவதாக லண்டனில் இருந்து ஒரு பெண் தலைமையில் ஒரு துப்பாக்கி கும்பலும் வந்து இவர்களை வளைக்கிறது. இதில் ட்விஸ்ட்டாக நாலாவதாக ஒரு கும்பலும் இந்த துரத்தலில் சேர்ந்துகொள்கிறது.

இந்த மூன்று குரூப்பிடமும் சிக்கிக்கொண்டு விமல், சிங்கம்புலி இருவரும் அவஸ்தையுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமும். மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், லண்டன் பெண் இவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் அவர்களை துரத்தவேண்டிய அவசியம் என்ன என்பதும் மீதிக்கதை

முதல் பாதி முழுதும் காம(நெ)டி, இரண்டாவது பாதியில் காமெடி என பிரித்துக்கொண்டு ரசிகர்களை தக்கவைக்க கதையை(!?) உருவாக்கி இருக்கிறார்கள். அப்பாவியாக இருந்துகொண்டே அடப்பாவி என சொல்லும்படியான வேலைகளை செய்யும் கேரக்டர் விமலுக்கு.. பேசாமல் இவருக்கு ‘காமக்கிளி’ என பட்டமே கொடுக்கலாம்.

விமல் இழுத்த இழுப்புக்கெல்லாம் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் மைதாமாவு போல வளையும் ஆஷ்னா சவேரியும் அவர் அணிந்து வரும் பாவடை தாவணி காஸ்ட்யூமும் தான் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு காயகல்பம். போலீஸ் அதிகாரியாக பாப் கட்டிங் ஹேர்ஸ்டைலுடன் பூர்ணா, வந்த வரைக்கும் சிறப்பு.

இன்னொரு ஹீரோ என சொல்லும் அளவுக்கு படம் முழுவதுமே வரும் சிங்கம்புலி அதகளம் பண்ணுகிறார். இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுத்தாலும் மன்சூர் அலிகானும் ஆனந்தராஜும் சிங்கிள், டபுள் மீனிங்கில் பேசி கிச்சுகிச்சு மூட்டி சோர்வை போக்குகிறார்கள். அதிலும் அந்த லண்டன் பெண் மியா ராய் எபிசோட், காமெடிக்கு காமெடி, கிளுகிளுப்புக்கு கிளுகிளுப்புக்கு என ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. ஆஷ்னாவின் ஆண்ட்டி ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ்.

ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்றால் மெசேஜ் எதிர்பார்க்கலாம். ஆனால் ஏ.ஆர்.முகேஷிடம் மஸாஜ் தான் கிடைக்கும். டைட்டிலை பார்த்துவிட்டு என்ன எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு வருவார்களோ அதை ஓரளவுக்கு நிறைவு செய்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *