ஜானி – விமர்சனம்


சாகசம் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜானி. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தந்தை தயாரித்துள்ள இந்தப்படத்தை ஆர்.வெற்றிச்செல்வன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஜீவா சங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஐவர் கோஷ்டியில் பிரதான நபர் பிரபு.. இதற்காகவே இவருடன் நட்பு கூட்டணி அமைத்தவர்கள் பிரசாந்த், ஆனந்தராஜ், அஷுதோஷ் ராணா மற்றும் ஆத்மா ஆகிய நால்வரும். இதில் அஷுதோஷ் ராணாவின் பிடியில் சூழ்நிலை கைதியாக மனைவி போல சிக்கியிருக்கும் சஞ்சிதா ஷெட்டிக்கும் பிரசாந்துக்கும் தனியாக ஒரு லவ் ட்ராக் ஓடுகிறது.

இந்த சமயத்தில் பிரபுவுடன் பிசினஸ் டீலிங் செய்துவரும் கேரளாவில் உள்ள போலீஸ் அதிகாரி சாயாஜி ஷிண்டேவிடம் போதைப்பொருளை வாங்கி வருவதற்காக இரண்டரை கோடி ரூபாயுடன் ஆத்மாவை அனுப்பி வைக்கிறார்கள். அந்த மொத்தப்பணத்தையும் அபேஸ் செய்து காதலியுடன் வெளிநாட்டு செல்ல திட்டமிடுகிறார் பிரசாந்த்.

ஆனால் திட்டத்தில் ஏற்படும் எதிர்பாராத குளறுபடிகள் மிகப்பெரிய அசம்பாவிதத்துக்கு வித்திடுகின்றன. அதன்பின் என்ன நிகழ்கின்றன என்பது மீதிக்கதை.

பணம் நட்பைக்கூட கண்ணை மறைக்கும் என்கிற பழைய பாணி கதைதான். ஆனால் அதில் அவ்வப்போது கொஞ்சம் திக் திக் கலந்து படமாக்கி இருக்கிறார்கள். குறிப்பாக பிரசாந்த் பணத்தை கொள்ளையடிக்க முயலும் காட்சி, சஞ்சனாவுடனான கள்ளக்காதல் காட்சி, பிரபுவின் விசாரணை காட்சியில் எல்லாம் நமக்கும் பகீரென்று தான் இருக்கிறது. பிரசாந்த் இதில் பெரும்பாலும் கூட்டணி ஆட்களுடனும் கதையுடனும் சேர்ந்து மொத்தமாக நகர்வதால் அவர் நடிப்பில் குறைகாண ஏதும் இல்லை.

சஞ்சிதாவுக்கு என்ன இந்த மாதிரி போஸ்டிங் கொடுத்துட்டாங்க.. அட பாவமே.. பிரபு வழக்கம்போல அதே கெத்து.. இருந்தாலும் பிரசாந்த்தை கிடுக்கிப்பிடி போடும் காட்சிகளில் மனிதர் மிரட்டுகிறார். ஆனந்தராஜ் சங்கு சக்கரமாக சுழல்வார் என பார்த்தால் சங்கு ஊதுவது போல குறைவான வேலையைத்தான் கொடுத்திருக்கிறார்கள்.

ஆத்மாவுக்கு இது ஆத்ம திருப்தியான வாய்ப்பு.. அஷுதோஷ் ராணா, சாயாஜி ஷிண்டே என கதைக்கு வலுவூட்டும் பாத்திரங்களும் சபாஷ் ரகம் தான். தேவதர்ஷிநிகும் புது கேரக்டர் தான்.. கதையில் லாஜிக்குகளையும் ஓட்டைகளையும் இறங்கி ஆராய்வதற்கு பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் அதை ஏன் ஆராயவேண்டும்..? ஒரு சராசரி ரசிகனுக்கேற்ற விறுவிறுப்பான பொழுதுபோக்கு அம்சம் இதில் நிறையவே இருகிறதே.. அது போதும் இந்தப்படத்தை பார்க்க