கடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம்


ஐந்து சகோதரிகளுக்கு இளைய தம்பியாக பிறந்த ஒருவன், குடும்பத்துக்காக, பாசத்துக்காக, காதலுக்காக என்னவெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை விவசாய பின்னணியில் உணர்வுப்பூர்வமாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

கிராமத்து பெரிய மனிதர் சத்யராஜுக்கு வரிசையாக பெண் பிள்ளைகளாக பிறக்க, கடைக்குட்டியாக வந்து பிறக்கிறார் கார்த்தி. அக்கா மகள்களான அர்த்தனாவும் பிரியா பவானி சங்கரும் மாமனைத்தான் காட்டுவேன் என உரிமை கொண்டாட, கார்த்திக்கோ சோடா கம்பெனி ஓனரான பொன்வண்ணன் மகள் சாயிஷா மீது காதல் மலர்கிறது.

சாயிஷாவின் மாமன்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பாக முறுக்கிக்கொண்டு நிற்க, இன்னொரு பக்கம் கார்த்தியின் குடும்பத்திலும் சூறாவளியை வீச செய்கிறது இந்த காதல். அனைவரையும் சம்மதிக்க வைத்து கார்த்தியால் சாயிஷாவை கைப்பிடிக்க முடிந்ததா..? பிரிந்துபோக துடிக்கும் சொந்தங்களை ஒன்று சேர்க்க முடிந்ததா..? இதற்காக கார்த்தி கொடுத்த விலை என்ன.? இதுதான் க்ளைமாக்ஸ்.

எப்போதும் மாறா புன்னகையுடன் மிகவும் பக்குவப்பட்ட, பண்பட்ட நடிப்பை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்தியுள்ளார் கார்த்தி. குறிப்பாக க்ளைமாக்சில் தன் அக்காக்களிடம் தனது உள்ளக்குமுறலை கொட்டி கதறும் இடத்தில் ஆண்களுக்கே கண்ணீர் வருகிறது.

தான் விவசாயி என சொல்லிக்கொள்வதில் அவர் காட்டும் கெத்து, நாகரிக இளைஞர்கள் பலரையும் இனி விவசாயத்திற்கு அழைத்து வரும். அதுமட்டுமல்ல ஜாதியை வைத்து அரசியல் செய்ப்வர்களையும் விவசாயிகளிடம் பாராமுகம் காட்டும் அரசையும் தைரியமாக விமர்சித்துள்ள கார்த்தி, ஒரு நடிகராக அடுத்த தளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். அதற்கு இந்த கதை நன்றாகவே உதவியிருக்கிறது.

ஒன்றுக்கு மூன்றாக கதாநாயகிகள்.. மூவருக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல சாயிஷாவின் அழகு பிரமிக்க வைக்கிறது என்றால்,குறும்புத்தனமான நடிப்பில் அர்த்தனா பின்னியெடுக்கிறார். இந்த இரண்டும் கலந்த கலவையாக பிரியா பவானி சங்கர் செம க்யூட்.. இடைவேளைக்குப்பின் சாயிஷாவையே ஓவர்டேக் செய்யும் விதமாக பிரியா, அர்த்தனா நடிப்பில் பக்குவமான போட்டி நிலவுகிறது.

இந்த கூட்டுக்குடும்பத்தை கட்டிக்காக்கும் தலைவராக சத்யராஜ். ஆண்வாரிசு வேண்டுமென அடுத்தடுத்து திருமணம் செய்ய முனைப்பு காட்டுவதிலும் ஐந்து பெண்களை பெற்ற தகப்பனாக ஒவ்வொருவருக்கும் எந்த மனத்தாங்கலும் வராதவாறு தனது கடமைகளை நிறைவேற்றுதிலும் சத்யராஜை விட வேறு ஒருவரால் இந்த கேரக்டரை அவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியும் என தோன்றவில்லை.

நீண்டநாளைக்கு பிறகு ‘அட.. நம்ம சூரி திரும்பி வந்துட்டாருடா’ என சொல்லவைக்கும் விதமாக காமெடி, குணச்சித்திரம் என இரண்டும் கலந்த சமவிகித நடிப்பால் மீண்டும் பார்முக்கு திரும்பி இருக்கிறார் சூரி. சத்யராஜின் மனைவிகளாக விஜி மற்றும் பானுப்ரியா. இதில் பானுப்ரியா அடக்கி வாசிக்க விஜிக்கு அதிக வாய்ப்பு.. சூப்பராக ஸ்கோர் செய்கிறார்.

கார்த்தியின் அக்காக்களாக நடித்துள்ள மௌனிகா, யுவராணி, தீபா, இந்துமதி மணிகண்டன், ஜீவிதா கிருஷ்ணன் என யாருமே குறைவைக்காத நடிப்பில் அசத்துகிறார்கள். கார்த்தியின் மாமன்களாக இளவரசு, சரவணன், மாரிமுத்து என அந்த கதாபாத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர்களால் படத்தின் இயல்புத்தன்மை கெடாமல் கதை நகர்கிறது. வில்லனாக சந்துரு, பேச்சில் மட்டும் ஆக்ரோஷம் காட்டி செயலில் கோட்டை விட்டுவிடுகிறார். சவுந்தர்ராஜாவும் தன பங்கிற்கு துள்ளியிருக்கிறார்.

இமானின் இசையில் பாடல்களும், காட்சிகளின் மூடுக்கேற்ப பயணிக்கும் பின்னணி இசையும் சுகம்.. அக்மார்க் கிராமத்துப்படம் என சொல்வார்களே, அது இந்தப்படத்தில் வேல்ராஜின் ஒளிப்பதிவால் தான் சாத்தியமாகி இருக்கிறது என்றே சொல்லலாம்.

நாம் நம்முடைய வாழ்க்கையில் இழந்துகொண்டு இருப்பது என்ன, மீட்க வேண்டியது என்ன, இருப்பதில் விட்டுவிடவே கூடாதது என்ன ஒவ்வொன்றையும் மனதில் தைக்கிற மாதிரி படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். குறிப்பாக இளைஞர்களை விவசாயம் சார்ந்த சிந்தனையை நோக்கி இந்தப்படத்தின் மூலம் திருப்பிவிட்டுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்..

ஹேட்ஸ் ஆப் பாண்டிராஜ்..