கடவுள் இருக்கான் குமாரு – விமர்சனம்


கதையே இல்லாமல் படம் எடுப்பாரே தவிர சந்தானம் இல்லாமல் படம் எடுக்கமாட்டார் என சொல்லும் அளவுக்கு காமெடி படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் முதன்முறையாக சந்தானம் இல்லாமல் இயக்கியுள்ள படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’

விளம்பரப்படம் எடுகிறேன் என ஊரை சுற்றுபவர்கள் தான் ஜி.வி.பிரகாசும், அவரது நண்பர் ஆர்.ஜே.பாலாஜியும்.. இந்தநிலையில் கிறிஸ்துவ பெண்ணான தனது தோழி ஆனந்தியை, ஜி.வி.பிரகாஷ் லவ் பண்ணுகிறார். ஆனால் ஆனந்தியின் தந்தை எம்.எஸ்.பாஸ்கரோ, திருமணத்திற்கு சம்மதித்தாலும் ஜி.வி.பிரகாஷை குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறச்சொல்கிறார்..

இதனால் காதல் பாதியிலேயே கட்டாக, நல்ல பையனாக மாறி பெற்றோர் பார்த்த பெண்ணான நிக்கி கல்ராணியை திருமணம் செய்ய முடிவு செய்கிறார் ஜி.வி.பிரகாஷ். நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் நிக்கியின் காரை வாங்கிக்கொண்டு பேச்சிலர் பார்ட்டிக்காக பாண்டிச்சேரி செல்கிறார்கள் ஜி.வியும் பாலாஜியும்..

திரும்பி வரும் வழியில் போலீஸ் அதிகாரியான பிரகாஷ்ராஜ் அவர்களை சோதனை செய்ய, தனக்கு கூட தெரியாமல் கார் டிக்கியில் நூற்றுக்கணக்கான மதுபாட்டில்களை பாலாஜி மறைத்து சென்னைக்கு கடத்த முயற்சிப்பது ஜி.வி.பிரகாஷுக்கும் தெரிய வருகிறது.. மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுவதாக பிரகாஷ்ராஜ் டீல் பேசுகிறார்..

தான் திருமணம் செய்யப்போகும் நிக்கியிடம் ஜி.வி.பிரகாஷ் உதவி கேட்க, அவரோ மறுத்து விடுகிறார்.. வேறு வழியின்றி பழைய காதலி ஆனந்தியின் உதவியை நாடுகிறார்.. அவர் உதவினாரா..? இந்த இக்கட்டில் இருந்து ஜி.வி தப்பினாரா..? சமயத்தில் உதவாத நிக்கியை அவர் என்ன செய்தார் என்பது க்ளைமாக்ஸ்..

நாயகன் ஜி.வி.பிரகாஷ் வழக்கம் போல கத்திப்பேசுவது, நீளமாக வசனம் பேசுவது, பெண்களை மட்டம் தட்டுவது என கொடுக்கப்பட வேலையை சரியாகத்தான் செய்திருக்கிறார்.. கொலு பொம்மைகள் போல அழகாக வரும் நிக்கி கல்ராணியும் ஆனந்தியும் கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார்கள்..

போலீஸ் அதிகாரியாக ஆரம்பத்தில் டெரர் காட்டும் பிரகாஷ்ராஜை போகப்போக காமெடியனாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். ஆனந்தியின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் இரண்டு காட்சிகளில் வந்தாலும் வெடிக்க வைக்கிறார்..

லட்சுமி ராமகிருஷ்ணனையும் அவரது நிகழ்ச்சியையும் விடவேமாட்டார்கள் போல.. இதிலும் ஊர்வசியை வைத்து ஒய் டிவி, பேசுவதெல்லாம் உண்மை என இறங்கி கலாய்த்திருக்கிறார்கள். டி..ஆர்.பி.ரேட்டிங்கை எகிறவைக்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளரை அசலாக பிரதிபலிக்கிறார் மனோபாலா.

படத்தின் காமெடிக்கான முக்கால்வாசி பொறுப்பும் ஆர்.ஜே.பாலாஜி தலையில் சுமத்தப்பட, அவரும் ஓரளவுக்கு முடிந்தவரை நன்றாகவே சமாளித்திருக்கிறார்.. இறுதியில் ஜி.வி.பிரகாஷையும் பிரகாஷ்ராஜையும் ஒரே நேரத்தில் மாட்டிவிடுவது செம கலாட்டா..

கடைசியில் ஐந்து நிமிடம் மட்டுமே வரும் நான் கடவுள் ராஜேந்திரனின் பங்கு இதில் குறைவுதான். கோவை சரளா வருகிறார்.. போகிறார்.. ரோபோ சங்கரும் சிங்கம்புலியும் ஏன் பிரகாஷ்ராஜும் கூட சேர்ந்துகொண்டு சிம்புவின் பீப் சாங் விஷயத்தை கலாய்த்திருப்பது கொஞ்சம் ஓவர்.. அதுமட்டுமல்ல.. காப்பியடிக்கிறார் என சொல்லாமல் சொல்லும் விதமாக ஹாரிஸ் ஜெயராஜை ஜி.வி.பிரகாஷ் வம்பிழுத்திருப்பதும் ஏனோ..?

ஜி.வி.பிரகாஷின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. காதலன்-காதலி ஊடல், கூடல்தான் எம்.ராஜேஷின் படங்களில் பிரதான அம்சம்.. இந்தப்படத்திலும் அது இருக்கிறது.. ஆனால் முந்தைய படங்களில் கதை என்பது பெயரளவுக்காவது இருக்கும். இந்தப்படத்தில் அதையும் காணோம்.. கிளைமாக்ஸில் பேய் பங்களா, ஆலுமா டோலுமா-ஜிங்குனமணி டான்ஸ் என குழப்பியடித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

படத்தில் ஆங்காங்கே மது பாட்டில்கள் இடம்பெற்றாலும் யாரும் குடிப்பதுபோல காட்டாமல் சமார்த்தியமாக காட்சியமைத்ததற்காக வேண்டுமானால் இயக்குனர் ராஜேஷை பாராட்டலாம்.

கடவுள் இருக்கான் குமாரு (கிக்) – சரக்கே இல்லை.. அப்புறம் கிக் எங்கே இருக்கு..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *