கத சொல்லப் போறோம் விமர்சனம்

சின்ன வயசுல ஏன்..? சில நேரம் வளர்ந்தும் கூட, நம்ம தம்பி தங்கைகளுக்கு நம் பெற்றோர் வாங்கிக் கொடுக்கும் சாக்லேட்டில் இருந்து அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் சுய நலத்தோடு மட்டுமல்லாமல் அவர்களது நேரங்களையும் தனதாக்கிக்கொள்கிறோம்…

ஒரு குறிப்பிட்ட வயதினை அடைந்து அறிவுமுதிர்ச்சி அடைந்த பிறகு, அவற்றை நினைத்துப் பார்த்து நிஜமாகவே வருந்துவோம். ஒருவேளை பல்வேறு காரணங்கள் வேலைப்பளுக்கள் ஆகிவற்றுக்கிடையே சிக்கிக்கொண்டோமானால் அதற்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.

அறிமுக இயக்கு நர் கல்யாண் இயக்கத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் கதசொல்லப்போறோம் படம் பார்த்திர்களானால், நிஜமாகவே ஒரு நிமிடம் உங்களுக்கு அழுகை வரும். நாம் எவ்வளவு சுய நலமாக இருந்திருக்கிறோம் – இருக்கிறோம் என்பது புரியும்.

ஒரு குழந்தை, என்ன ஒரு எட்டு வயது குழந்தைக்கு இருக்கும் அந்த தியாகம் – சகிப்புத்தன்மை கூட நமக்கு இல்லையே என்கிற உணர்வுகளோடும் கணத்த இதயத்தோடும் வெளியே வருவோம்.

ஷிபானா, ரவீனா, ஜெனி, அரவிந்த் ரகு நாத், அர்ஜுன் ஆகிய குழந்தைகளுடன் ஆடுகளம் நரைன், விஜயலட்சுமி,அக்‌ஷரா, காளிவெங்கட் , பசங்க சிவகுமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் குழந்தைகளின் குறும்பும் குதூகலங்களும் தான் என்றாலும், நரைன் – தனது மனைவி பெற்றெடுத்த குழந்தையை பிரசவ ஈரம் காயும் முன்னே – சீம்பால் குடிக்கும் முன்னே பறிகொடுப்பதில் இருந்து – அந்த குழந்தையை காவல்துறை உதவியுடன் தேடுவது என்கிற விறுவிறுப்பான திரைக்கதையையும் அதனுடன் இணையாக பயணிக்கவைத்து அனைத்து தர்ப்பினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு படமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

பவனின் இசையில் வரும் பாடல்கள் , முழுக்க முழுக்க குழந்தைகளுக்கானது என்பதால் , இரட்டிப்புத்துள்ளல் ரகம்.

சிறப்பான கதைக்களம் இருக்கும் போது , இன்னும் கொஞ்சம் அதிக மென்க்கெட்டிருக்கலாம் என்றாலும், தனக்குக் கொடுக்கப்பட்ட வசதிகளை வைத்துக்கொண்டு ஒரு உணர்ச்சிபூர்வமான கதையை அழகாகச் சொல்லியிருக்கிறார் கல்யாண்.