கைதி – விமர்சனம்

நாயகன் கார்த்தி ஒரு ஆயுள் தண்டனை கைதி. ஜெயிலில் தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்.

நரேன், போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். நரேன் மற்றும் அவரது குழுவினர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். இதற்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய கும்பலே இருக்கும் என நினைக்கும் நரேன் கைப்பபற்றிய போதைப் பொருட்களை அனைத்தையும் ஒரு இரகசிய இடத்தில் வைத்து பாதுகாக்கிறார். அந்தக் கும்பலையும் பிடிக்க முயற்சிக்கிறார்.

இதை அறிந்த ஐ.ஜி. அந்த கும்பல் போதைப் பொருட்களை மீட்க எந்த காரியத்தையும் செய்வார்கள், ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள் என்று நரேன் குழுவினருக்கு அறிவுரை கூறுகிறார்.

இந்நிலையில் தங்கள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து வைத்திருப்பது நரேன் குழுவினர் தான் என்பது வில்லன்களுக்கு தெரியவருகிறது. தங்களது போதைப் பொருட்களை மீட்டு வர அடியாட்களை அனுப்புகின்றனர் வில்லன்கள்.

அந்த சமயத்தில் தான் ஆயுள் தண்டனை முடிந்து தன்னுடைய மகளை பார்க்கும் ஆவலில் கார்த்தி வெளியில் வருகிறார். ஆனால் கார்த்தியை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜீப்பில் வைத்திருக்கிறது போலீஸ்.

இந்நிலையில், ஓய்வு பெற உள்ள ஐ.ஜி. போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் பார்ட்டி கொடுக்கிறார். இதில் நரேன் குழுவினரும் கலந்து கொள்கின்றனர். அப்போது வில்லன்களின் சதியால் போதை மருந்து கலந்த மதுவை நரேன் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளும் அருந்துகின்றனர். அனைவரும் பிரச்சனையில் சிக்குகிறார்கள்.

இந்தப் பிரச்சனையிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு கார்த்தியின் உதவி தேவைப்படுகிறது. தங்களுக்கு உதவி செய்தால் தான், குழந்தையை பார்க்க அனுமதிப்போம் என கார்த்தியை மிரட்டுகிறார் நரேன். இதையடுத்து நரேனுக்கு கார்த்தி உதவினாரா? போதைப்பொருள் கடத்தல் கும்பலை நரேன் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்திற்கு மொத்த பலமே கார்த்தி தான். செண்டிமென்ட் காட்சியில் கார்த்தி மிளிர்கிறார். ஒரு தந்தையாக தனது மகளை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில் கார்த்தி முகத்தில் காட்டும் பரிதவிப்பு ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

கார்த்தியின் மகளாக வரும் பேபி மோனிகா சிறப்பாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரி வேடத்திற்கு நரேன் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

திரைக்கதை படத்திற்கு இன்னொரு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. பாடல்கள் எதுவும் இல்லாவிட்டாலும் திரைக்கதையின் வேகத்தால் படம் நகர்வதே தெரியவில்லை. சிறப்பாக திரைக்கதை அமைத்த இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும்.

சாம். சி.எஸ்.சின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அனைத்துக் காட்சிகளையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறர் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.

ஆக மொத்தத்தில் “கைதி“ ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து.