கண்டேன் காதல் கொண்டேன் – விமர்சனம்

கல்லூரியில் படித்து வரும் நாயகன் பாலா ஒருநாள் நாயகி அஸ்வினியை பார்க்கிறார். நாயகிக்கு நாயகனை பார்த்தவுடனேயே பிடித்துப்போய்விடுகிறது. அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். ஒருகட்டத்தில் நாயகனுக்கும் அவள் மீது காதல் வருகிறது. இந்நிலையில், பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவளான நாயகியின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது.

இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கொடைக்கானலுக்கு செல்கிறார்கள். அங்கு சென்று பதிவு திருமணம் செய்துகொள்ள நினைக்கும் பட்சத்தில், 15 நாட்கள் கழித்துதான் அவர்கள் பதிவு திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த 15 நாட்களுக்குள் இருவருக்கும் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் இரண்டு பேருக்கும் மனக்கசப்புகளும் வருகிறது.

இதையெல்லாம் மீறி இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நாயகன் பாலா ஏற்கெனவே சின்னத்திரையில் தொகுப்பாளராக பார்த்தவர்தான். தற்போது பெரிய திரையில் நடிகராக புரமோஷன் ஆகியிருக்கிறார். நாயகனுக்குண்டான அம்சங்கள் இருந்தாலும், நடிப்பில் இன்னும் கொஞ்சம் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை.

நாயகி அஸ்வினிக்கு வழக்கம்போல் தமிழ் சினிமாவில் வந்துபோகின்ற கதாநாயகி வேடம்தான் என்றாலும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகனின் நண்பனாக வரும் இளைஞர் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு. வேறு எந்த கதாபாத்திரங்களும் சொல்லும்படி எதுவும் இல்லை.

இயக்குனர் வெங்கட் ஜி.சாமி குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை மட்டுமே ஒரு காதல் கதையை எடுக்க முனைந்திருக்கிறார். முன்பாதி கலகலப்பாக நகர்ந்தாலும், பிற்பாதி இழுஇழுவென இழுக்கிறது. முன்பாதியில் காட்டிய கவனத்தை பிற்பாதியில் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

இயக்குனர் வெங்கட் ஜி.சாமி
இசை நகா தத்தா
ஓளிப்பதிவு சுரேஷ் தேவன்

நாகா தத்தாவின் இசையில் பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் தேவைக்கேற்றார்போல் அமைத்திருக்கிறார். சுரேஷ் தேவனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது.