கண்ல காச காட்டப்பா – விமர்சனம்


நாடு முழுவதும் பணத்தட்டுப்பாட்டால் தவித்துக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் அதனை மறந்து சிரிக்க வைக்கும் விதமாக ஹவாலா மோசடியை வைத்து காமெடியாக வெளிவந்திருக்கும் படம் தான் இந்த ‘கண்ல காச காட்டப்பா’.. பல வருடங்களாக சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்த மேஜர் கௌதம் (மேஜர் சுந்தர்ராஜனின் மகன்) முதன்முதல் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் இது…

தமிழ்நாட்டில் உள்ள மந்திரி ஒருவர் மலேசியாவுடனான புதிய திட்டம் ஒன்றில் நூறுகோடி ரூபாய் கொள்ளையடிக்கிறார்… மலேசியாவில் உள்ள அந்தப்பணத்தை கொலம்பியா வங்கிக்கு மாற்ற ஏற்பாடு செய்கிறார். இதற்காக தனது உதவியாளர் மூலம் விச்சு என்பவரை மலேசியா அனுப்புகிறார்..

மலேசியாவில் விச்சுவுக்கு இந்தப்பணத்தை மாற்றும் வேலையில் உதவும் சாந்தினி, லோக்கல் திருடர்களான கல்யாண், யோகிபாபுவுடன் கூட்டணி சேர்த்து அந்தப்பணத்தை லவட்ட முயற்சிக்கின்றனர்.. இந்நிலையில் .வேலைவெட்டியில்லாமல் சுற்றும் அரவிந்த் ஆகாஷ் விச்சுவுக்கு பாடிகார்ட் ஆகிறார். ஆனால் அவரது தாத்தா, எம்.எஸ்.பாஸ்கருடன் சேர்ந்து லோக்கல் பிக்பாக்கெட் திருடியான அஸ்வதி அந்தப்பணத்தை அடிக்க முயற்சிக்கிறார்.

இந்தநிலையில் மந்திரியின் பதவி பறிபோக, அந்தப்பணத்தை கைப்பற்ற டிடெக்டிவ் ஒருவரை மலேசியா அனுப்புகிறார் மந்திரி… ஆனால் மலேசியாவில் இந்த மொத்தக்கும்பலும் சேர்ந்து பணத்தை பங்குபோட திட்டமிடுகின்றனர்.. மந்திரியும் மலேசியாவுக்கு விரைகிறார்.. கடைசியில் இந்த நூறு கோடி யாருக்கு சொந்தமானது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

காமெடி கதையை படமாக்கி இருக்கும் மேஜர் கௌதம், இயக்குனர் சுந்தர்.சியுடன் பல வருடங்கள் இணைந்து பயணித்ததாலோ என்னவோ அவர் பாணியிலேயே காமெடி காட்சிகளை தோரணமாக்கி தொங்கவிட்டுள்ளார்.

நூறு கோடி ரூபாய் பணத்தை அடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அனைவரும் தங்களது விதவிதமான நடவடிக்கைகளால் சிரிக்க வைக்கின்றனர்.. அரவிந்த் ஆகாஷுக்கு இதில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு.. பயன்படுத்தி இருக்கிறார்.. ஸ்டைலிஷான சாந்தினி பணத்துக்காக அவ்வப்போது பச்சோந்தியாக மாறும் நடிப்பில் சபாஷ் வாங்குகிறார்.

அழகு அஸ்வதி ரசிக்க வைக்கிறார்.. எதுகை மோனை வசனங்களால் பின்னி பெடலெடுக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.. கல்யாண் மாஸ்டரை பார்க்கும்போது மறைந்த வில்லன் ‘தங்கப்பல்’ பிரபாகரை ஞாபகப்படுத்துகிறார்.. யோகிபாபுவின் காமெடி நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது… குணச்சித்திர நடிகரான விச்சு தனது நீண்டகால நண்பர் என்பதால் அவருக்கு படம் முழுதும் வரும் முக்கியவேடம் கொடுத்துள்ளார் கௌதம். அதை அவரும் சரியாகவே பயன்படுத்தியுள்ளார்..

மலேசியாவில் படமாக்கப்பட்டு இருந்தாலும், நம்ம ஊர் நேட்டிவிட்டியை விட்டு விலகாமல் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் மேஜர் கௌதம்.. குறிப்பாக மலேசிய முருகன் கோவிலில் படமாக்கப்பட்டுள்ள அந்த பத்து நிமிட காட்சிகள் பரவசம். படம் சூப்பர் ஹிட்டாகிறதோ இல்லையோ, இரண்டு மணி நேரம் ரசிகர்களை போரடிக்காமல் சிரிக்க வைக்க அவர் எடுத்திருக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லவேண்டும்.