கன்னா பின்னா – விமர்சனம்


சொந்த ஊரில் பெண் கிடைக்காமல் சென்னைக்கு வந்து பெண் தேடும் திருச்சி இளைஞன் படும் பாடு தான் இந்த கன்னா பின்னா’..

இயக்குனர் அறிமுகமாகும் பெண் ஒருவர் தனது படத்துக்காக கதை தேடி நண்பர்கள் குழுவுடன் அலையும்போது அவர்கள் கண்களில் தட்டுப்படும் சுவாரஸ்யமான கேரக்டர் தான் இளைஞன் தியா.. திருச்சியில் இருக்கும் தியாவுக்கு அவனது பெற்றோராக பெண் பார்த்து கல்யாணம் நடத்தி வைப்பது போல தெரியவில்லை.. அதனால் புரோக்கர் மூலமாக பெண் தேட முயற்சிக்கையில் சிக்கல் ஏற்படுகிறது.

இனி சொந்த ஊர் பக்கம் பெண்ணே கிடைக்காத நிலையில் சென்னைக்கு சென்று திருமணம் செய்வதாக சபதம் செய்து பஸ் ஏறுகிறார் தியா.. சிங்கார சென்னையில் அவருக்கேற்ற வாழ்க்கைத்துணை கிடைத்ததா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்து மீதிப்படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்..

கதையின் நாயகன் தியா தான் படத்தின் இயக்குனரும்.. தனக்கு பொருத்தமான கதை இதுதான் என தேர்வு செய்து அதில் ஸ்கோர் பண்ண முயற்சித்திருக்கிறார்.. அவர் பெண் தேடும் படலம் எல்லாம் சிரிப்பலைகள் தான்.. க்ளைமாக்ஸ் வரையில் தான் படும் கஷ்டங்களை நகைச்சுவை ஜூஸாக பிழிந்து கொடுத்திருக்கிறார் தியா.

முதன்மை கதாநாயகியாக வரும் அஞ்சலி ராவுக்கும் நாயகன் தியாவுக்கும் எந்த தொடர்புமில்லை.. சினிமாவில் இயக்குனராக முயற்சிக்கும் பெண்ணாக (காமெடியாகத்தான்) தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறார்.. வில்லனாக வரும் சிவசுப்பிரமணியம் சற்று கவனம் ஈர்க்கிறார். படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் சிலர் ரசித்து சிரிக்க வைக்கின்றனர்.. இன்னும் சிலர் ஜஸ்ட் லைக் தட் கடந்து போகின்றனர்..

ஜெரால்டு ராஜமாணிக்கத்தின் ஒளிப்பதிவும் ரோஷன் சேதுராமனின் இசையும் கன்னா பின்னாவென அலையாமல் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. பேஸ்புக் பற்றி தெரியாதவர் தான் கதாநாயகர் என்பதை சற்றே ஜீரணிக்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.. அதேசமயம் புரோபைல் பிக்சரில் வைக்க படம் தேவை ஏன் நண்பன் சொன்னான் என்று நள்ளிரவு நேரத்தில் ஸ்டுடியோகாரனை எழுப்பி போட்டோ எடுத்து பிரிந்தும் போட்டுக்கொண்டு வருவதெல்லாம் டூமச் டைரக்டர் சார்..

நிறைய இடங்களில் லாஜிக் மீறல்கள் மற்றும் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் தான் படத்தின் பலவீனம்.. இன்னும் காட்சியமைப்புகளிலும் திரைக்கதையிலும் இயக்குனர் தியா கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.