கர்ணன் ; விமர்சனம்


தனுஷ் வசிக்கும் பொடியன்குளம் என்கிற ஊர் மக்கள், தங்களுக்கென ஒரு பேருந்து நிறுத்தம் கூட இல்லாமல், சாதி பிரச்சனை காரணமாக, பக்கத்து ஊர் பேருந்து நிறுத்தத்தில் சென்றும் பஸ் ஏற முடியாமல், வெளியூர் சென்று வருவதற்கு ரொம்பவே சிரமப்படுகின்றனர் தங்கள் சமூகத்தில் உள்ளவர்கள் படித்து அரசாங்க வேலைக்கு சென்றால் தான் தங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என நம்பும் தனுஷின் தாத்தா லால், அவரை போலீஸ் தேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்.

இந்த சமயத்தில் தங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை பார்த்து பொங்கி எழும் தனுஷ், ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கூட ஏற்ற மறுத்து நிற்காமல் செல்லும் ஒரு பேருந்தை அடித்து நொறுக்குகிறார். இதனால் நட்டி நடராஜ் தலைமையில் அந்த ஊருக்குள் போலீஸ் நுழைகிறார்கள். ஆனால் பேருந்து உரிமையாளரும் ஊர் மக்களும் சமாதானமாக சென்று விட்டாலும், போலீஸ் அதிகாரியான நட்டிக்கு இது கௌரவப் பிரச்சனையாக மாறுகிறது

அந்த ஊர் மக்கள் சிலரை, விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அடித்து உதைத்து சித்ரவதை செய்கிறார் நட்டி. இந்த தகவலை கேள்விப்பட்ட தனுஷ் தனது ஆட்களுடன் சென்று காவல்நிலையத்தை துவம்சம் செய்கிறார் இந்த நிலையில் தனுஷுக்கு ஆயுதப்படையில் போலீஸ் வேலை கிடைத்திருப்பதாக உத்தரவு வருகிறது போலீஸ் மீண்டும் ஊருக்குள் வரலாம் என எதிர்பார்க்கும் ஊர்மக்கள், தனுஷின் வேலைக்கு எந்தவித பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என, அவரை வற்புறுத்தி வேலைக்கு கிளம்ப வழியனுப்பி வைக்கின்றனர்.

தனுஷ் கிளம்பிச் சென்ற கொஞ்ச நேரத்தில் ஆயுதப்படை போலீசாருடன் ஊருக்குள் நுழைகிறார் நட்டி நட்ராஜ் போலீசின் கோரத்தாண்டவத்தை ஊர் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுகிறார். ஊர்மக்கள் இந்த தாக்குதலில் இருந்து தப்பித்தார்களா..? இந்த விபரம் தனுசுக்கு தெரியவந்து, தனது மக்களை காப்பாற்றினாரா..? பேருந்து நிறுத்தம் வேண்டுமென்கிற குறைந்தபட்ச அடிப்படை உரிமையை அந்த ஊர் மக்களால் பெற முடிந்ததா என்பது மீதிக்கதை.

கடந்த 25 வருடங்களுக்கு முன்பு மருதுபாண்டி, வாட்டாக்குடி இரணியன் என ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் வீரர்களின் கதைகள் படமாக்கப்பட்டு வந்தன அதேசமயம் தற்போதும் கூட அப்படி ஒரு வீரன், தனது இன மக்களுக்காக போராட வேண்டிய தேவை இப்போதும் இருக்கிறது இருந்தாலும் தொண்ணூறுகளில் இந்த கதை நிகழ்வதாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

மேலே சொன்ன கதையை படித்து பார்க்கும் அனைவருக்குமே, படத்தைப் பார்க்கும்போது, தனுஷை தவிர இந்த கதாபாத்திரத்திற்கு, வேறு ஒரு சரியான நடிகரை நினைத்துப் பார்க்க முடியாது என்பதை உணர்வார்கள். அந்த அளவுக்கு தொட்டால் பற்றி கொள்வது போல, எந்நேரமும் விண்ணில் பாய தயாராகும் ராக்கெட் போல கோபமும் வீராவேசமுமாக அந்த கதாபாத்திரமாகவே மாறி போயிருக்கிறார் தனுஷ். இன்னொரு பக்கம் காதலி ரஜிஷா விஜயனுடன் ரொமான்ஸ் பண்ணுவதாகட்டும், தனது தாத்தா லால் உடன் சேர்ந்துகொண்டு லூட்டி அடிப்பது ஆகட்டும்.. கலகல பக்கத்திலும் எந்த குறையும் வைக்கவில்லை தனுஷ்.

படத்தில் இன்னொரு கதாநாயகன் என்று சொல்லுமளவுக்கு சண்டக்கோழி வில்லன் லால், இதில் இதுவரை நாம் பார்த்திராத, சண்டியர்த்தனம் கொண்ட கிராமத்து வயதான ஒரு பெரியவரின் கதாபாத்திரத்தில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் ஒரு மலையாள நடிகராக இருந்தாலும் தென் தமிழகத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் உடல் மொழியையும் நடை உடை பாவனைகளையும் அழகாக வெளிப்படுத்தி, படம் முடிந்து வெளியே வந்தபின்னும் நம் மனதை விட்டு அகல மறுக்கிறார். குறிப்பாக அந்த ஊருக்கு ஒரு நீதி கிடைப்பதற்காக அவர் செய்யும் தியாகம் நம்மை கண்கலங்க வைக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தனக்கு எதிராக தலை நிமிர்ந்து கூட பேசக்கூடாது என்று நினைக்கிற ஈகோ மனோபாவம் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியாக நட்டி நட்ராஜ் மிகப்பொருத்தமான தேர்வு. ஒரு கிராமத்தின் மீது போலீசாரின் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு, ஒரு சின்ன ஈகோ போதும் என்பதை அவரது கதாபாத்திரத்தின் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகி ரஜிஷா விஜயன் தமிழுக்கு வந்திருக்கும் புது மலையாள வரவு. முதல் படத்திலேயே தனது நடிப்பால் நம்மை கவர்ந்துவிடுகிறார். காதல், கோபம் சரிவிகிதமாக கலந்து தனுசுடன் அவர் செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. அதேபோல கதாநாயகிக்கு சமமாக தனுஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லட்சுமி பிரியா சந்திரமௌலிக்கு, இந்த படம் நிச்சயம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

யோகி பாபு ஒரு சராசரி குணாதிசயம் கொண்ட கிராமத்து இளைஞனாக, அதேசமயம் சூழலுக்கேற்றவாறு பக்குவமாக நடந்து கொள்ளக்கூடிய ஒரு மனிதனாகவும் குணச்சித்திர நடிப்பைப் வெளிப்படுத்தியிருக்கிறார் நகைச்சுவை மட்டுமல்லாமல் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அவரால் தாங்க முடியும் என்பதை மீண்டும் இந்த படத்தில் அவர் நிரூபித்திருக்கிறார்.

கிராமத்தில் உள்ள மனிதர்கள் அனைவருமே, நடிகர்கள் என தெரியாத அளவிற்கு எதார்த்த மனிதர்களாகவே, இந்தப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் குறிப்பாக சாதியை தூக்கிப் பிடித்து வன்மம் காட்டும் அழகம்பெருமாள், தனுஷின் அப்பா பூ ராமு, தனுஷின் அம்மாவாக நடித்திருப்பவர், குதிரை வாங்கிக்கொண்டு அதை வைத்து ஊரை சுற்றி வரும் சிறுவன், பேருந்தின் மீது துணிச்சலாக கல்லெறியும் சிறுவன், தனுஷின் தங்கையாக அவ்வப்போது சாமியாக வலம்வரும் சிறுமி என பலரும் தங்களது ஒவ்வொரு விதமாக நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

படத்தின் மிக முக்கியமான இன்னொரு பலம் சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் பின்னணி இசையும்.. கண்டா வரச்சொல்லுங்க, பாடலையும் விட்ராதீங்க எப்போ பாடலையும் இன்னும் கொஞ்சம் உக்கிரமாக படமாக்கியிருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். 90களில் இருக்கும் தென் தமிழகத்து கிராமத்தை கலை இயக்குனருடன் சேர்ந்து தனது ஒளிப்பதிவில் அச்சு அசலாக வார்த்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். நாமும் அந்த கிராமத்தில் ஒரு மனிதராகவே சுற்றிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவது உண்மையே.

90-களில் ஏற்கனவே ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் இளைஞன் என்கிற படங்கள் வந்துவிட்டாலும், சமீபகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசும் படங்கள் ரொம்ப குறைவாகவே வருகின்றன. அந்தவகையில் பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து, மீண்டும் கர்ணன் படத்தில் அதே தளத்தில் வேறொரு பாதையில் பயணித்திருக்கிறார் மாரிசெல்வராஜ். ஆனால் ஒரு ஊருக்கு பேருந்து நிறுத்தம் வேண்டும் என்பதற்காக போராடும் மக்களுக்கு, போலீஸ் ஒடுக்குமுறை மட்டுமே பிரச்சினையாக இருப்பது போன்றும் அதிகார வர்க்கமும் அரசியலும் அதில் தலையிடாதது போன்றும் விலகி நின்று காட்டியிருப்பது சற்றே நம்பகத்தன்மையை இறக்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *