கவலை வேண்டாம் – விமர்சனம்


ஒருகாலத்தில் டபுள் மீனிங் வசனங்களுக்கு பெயர்போன எஸ்.ஜே.சூர்யா, சமீபத்தியா ட்ரெண்டில் டாஸ்மாக் இல்லாமல் படம் இயக்கமுடியாத எம்.ராஜேஷ் இரண்டும் சேர்ந்த கலவையாக ஒரு புதிய இயக்குனர் உருவாகிவிட்டார்.. அவர்தான் இயக்குனர் டீகே.. ஏற்கனவே ‘யாமிருக்க பயமே என்கிற காமெடி படத்தை கொடுத்த அவர்தான், இப்போது கவலை வேண்டாம்’ என்கிற காமெடி, ஸாரி காம நெடி அடிக்கும் படத்தை இயக்கியுள்ளார்.

இருபது வருடங்களாக நட்பாக பழகிவந்த ஜீவாவும் காஜல் அகர்வாலும் காதலில் விழுந்து திருமணம் ஆன இரண்டாவது நாளே சில்லியான காரணத்திற்காக சண்டைபோட்டுக்கொண்டு பிரிகிறார்கள்.. இதற்கிடையே ஜீவாவின் இன்னொரு தோழியான சுனைனா ஜீவாவின் மீது காதலாகி, தன்னை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி அவர் பின்னாலேயே சுற்றுகிறார்.

இந்தநிலையில் இரண்டுவருடம் கழித்து, பாபி சிம்ஹாவை இரண்டாவதாக திருமணம் செய்ய முடிவு செய்கிறார் காஜல். அதனால் ஜீவாவை தேடிவந்து டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போடும்படி கேட்கிறார்.. ஜீவாவோ தன்னுடன் மனைவியாக ஒரு வாரம் குடும்பம் நடத்தும்படியும் அதன் பிறகுதான் கையெழுத்து போடுவேன் எனவும் நிபந்தனை விதிக்கிறார்.

இந்த ஒரு வார காலத்தில் இருவருக்குள்ளும் மனமாற்றம் நிகழ்ந்ததா.. இல்லை அவரவர் பாதையில் சென்றார்களா என்பது க்ளைமாக்ஸ்.

ஜீவாவின் கேரக்டர் வடிவமைப்பு இன்னவென்று புரிந்துகொள்வதற்கே நமக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.. ஆனால் அந்த கேரக்டரை சரியாக உள்வாங்கி நடித்திருக்கும் ஜீவாவை பாராட்டியே ஆகவேண்டும். ஜாடிக்கேத்த மூடியாக படபட பட்டாசாக வெடிக்கும் காஜலும் அவரது கேரக்டருக்கு பொருத்தமான நபராகத்தான் இருக்கிறார். அதேசமயம் ஓவர் ஆக்டிங்கை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். ஆனால் திரைக்கதையின் சுழலில், கதாபாத்திர வடிவமைப்பில் இருவரும் செமையாக அடி வாங்குகிறார்கள்..

தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா என்கிற நடிகரை இப்படியா ஒப்புக்கு சப்பாணியாக வீணடிப்பார்கள்..? இருந்தாலும் கிடைத்த கேப்பில் ஸ்கோர் பண்ணுகிறார் மனிதர். சுனைனாவும் தன பங்கிற்கு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆர்ஜே பாலாஜி, பாலசரவணன், மயில்சாமி, மனோபாலா, மதுமிதா என காமெடி ஏரியாவில் பலர் கைகோர்த்து களம் இறங்கி நம்மை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ரீ என்ட்ரி மந்த்ரா வில்லித்தனம் காட்ட முயற்சித்து பல்ப் வாங்குவது ‘செம’..

ஆனால் படம் முழுவதும் விரவிக்கிடக்கும் இரட்டை அர்த்தகாட்சிகளும், வசனங்களும் அவ்வப்போது சிரிக்க வைத்தாலும், ஓரளவுக்கு மேல் ஓவர் டோஸ் ஆகி முகம் சுளிக்க வைக்கின்றன. அதிலும் காஜல் மேல் ஜீவா வாந்தி எடுப்பது, போலீஸ் ஸ்டேஷனில் பாலாஜி கக்கா போவது, சின்னப்பையன் ஒருவன் இளம்பெண்ணிடம் லிப் கிஸ் வாங்க முயற்சிப்பது எல்லாம் நமக்கே வாந்தி வரவைக்கும் ரகம்.

அதிலும் கோழிக்குஞ்சு விற்பவனிடம் இருந்து காஜல் அகர்வால் அதை வாங்கி பார்ப்பதற்காக வைக்கப்பட்ட கேமரா கோணம் இருக்கிறதே இதைவிட ஆபாசமாக ஒரு காட்சியை படமாக்க முடியுமா என்பது தெரியவில்லை. இப்படி நாட்டுக்கு தேவையான பல பயனுள்ள விஷயங்களை இதில் உள்ளே நுழைத்திருக்கிறார் இயக்குனர் டீகே. ஆர்ஜே பாலாஜியால் தனுஷ், சிம்பு இருவரையும் கிண்டல் பண்ணாமல் காமெடி பண்ண தெரியாதா..? ஒருநாள் செமத்தியாக வாங்கிக்கட்ட போகிறார்.

‘யாமிருக்க பயமே’ என்கிற காமெடி ஹாரர் படத்தை இயக்கிய டீகேயின் அடுத்தபடம் என்கிற எதிர்பார்ப்பு தான் படத்திற்கு பிளஸ்.. ஆனால் படத்தில் அந்த எதிர்பார்ப்பை தக்கவைத்திருக்கிறாரா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்.. இளசுகளை இந்தப்படம் கவர்ந்தாலும் குழப்பான திரைக்கதையாலும் சென்சாருக்கு தப்பிய, தப்ப முயன்று கட்டான வசனங்களாலும் நம்மை கவலைப்படவே வைத்திருக்கிறார் இயக்குனர் டீகே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *