காவியன் – விமர்சனம்


படத்தின் நாயகன் ஷாம், ஒரு காவல் துறை அதிகாரி. தமிழ்நாட்டில் பணிபுரியும் ஷாம் பயிற்சிக்காக அமெரிக்கா செல்கிறார். ஷாமுடன் ஸ்ரீநாத்தும் அமெரிக்கா செல்கிறார். இருவருக்கும் அமெரிக்க காவல்துறை அதிகாரிகள் பயிற்சி அளிக்கின்றனர்.

நம்ம ஊர் போலீஸ் அவசர எண் 100 போல, அமெரிக்காவில் 911 என்ற எண் போலீஸ் அவரச உதவி எண்ணாக இருக்கிறது. அந்த கால் சென்டரில் பணிபுரிகிறார் நாயகி ஸ்ரீதேவிகுமார்.

இந்நிலையில் மர்ம நபர் ஒருவரால் பெண் ஒருவர் பாதிக்கப்படுவதாக 911க்கு போன் வருகிறது. அந்த போனை பேசும் ஸ்ரீதேவி, அந்த பெண்ணுக்கு உதவ நினைக்கிறார். ஆனால் அந்த பெண் மர்ம நபரால் கடத்தப்பட்டு இறந்து போகிறார். இதனால் வருத்தப்பட்டு வேலையை விட்டு செல்கிறார் ஸ்ரீதேவி குமார். இதையறியும் நாயகன் ஷாம், ஸ்ரீதேவியை சமாதானம் செய்து மீண்டும் வேலையில் சேர வைக்கிறார்.

சில நாட்களிலேயே மற்றொரு நாயகியாக இருக்கும் ஆத்மியா, அதே மர்ம நபரால் பாதிக்கப்படுகிறார். அதே போல் ஸ்ரீதேவிக்கு போன் வர, ஷாம் அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

இறுதியில் ஆத்மியாவை ஷாம் காப்பாற்றினாரா? பெண்களை கடத்தும் அந்த மர்ம நபர் யார்? எதற்காக அவர் அப்படி செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

புறம்போக்கு, தில்லாலங்கடி ஆகிய படங்களை தொடந்து போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ஷாம். ரொம்ப கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். இலங்கை பெண்ணாக நடித்திருக்கும் ஆத்மியாவை காரிலேயே அதிக நேரம் கட்டி வைத்திருக்கிறார்கள். வில்லனிடம் மாட்டிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளில் பரிதாபப் பட வைக்கிறார்.

மற்றொரு நாயகியாக வரும் ஸ்ரீதேவி குமார், திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷாமுடன் பயணிக்கும் ஸ்ரீநாத்தின் காமெடி பெரியதாக எடுபடவில்லை. அதற்கான வாய்ப்பும் சரியாக அவருக்கு கொடுக்கப்படவில்லை.

இயக்குனர் பார்த்தசாரதி நல்ல கிரைம் கதையை, முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கி இருக்கிறார். திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஷ்யாம் மோகனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.

மொத்தத்தில் ‘காவியன்’ நடுத்தரமானவன்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *