லென்ஸ் – விமர்சனம்


இன்று இணையதளத்தில் செயற்கையாக அல்லாமல் இயற்கையாக திருட்டுத்தனமாக படம்பிடிக்கப்பட்ட அப்பட்டமான பாலியல் காட்சிகள் இடம்பெறுகின்றன.. அதை ரசித்து பார்ப்பவர்களுக்கு அது ஒரு அரைமணி நேர பொழுதுபோக்கு மட்டுமே.. ஆனால் அந்த வீடியோவில் சம்பந்தப்பட்டவர்களுக்கோ..? அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது..

இந்த அதிரவைக்கும் மையக்கருத்தை எடுத்துக்கொண்டு இந்த லென்ஸ் படத்தை இயக்கியுள்ளார் புதியவர் ஜெயபிரகாஷ். மேலும் மனைவி இருக்கும்போதே வீட்டின் அறைக்கதவை பூட்டிக்கொண்டு இணையதளத்தின் மூலம் முகமறியா பெண்களிடம் சல்மான்கான்களாக நடமாடும் சில வக்கிர மனித மிருகங்களையும் அவர்களின் பின்னணியையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இந்த ‘லென்ஸ்’ படம்.

இணையதளத்தில் புதிது புதிதாக பெண் நட்பு தேடுபவர் ஜெயபிரகாஷ் திருமணமான இளம் மனைவி மிஷா கோஷல் வீட்டில் இருந்தாலும், அறையை பூட்டிக்கொண்டு இணையதளத்தில் அப்படி ஒரு பெண்ணுடன் ஆபாசமான வீடியோ சாட்டிங்கில் சல்மான்கான் முகமூடி அணிந்து ஈடுபடுகிறார்..

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பெண் மூலம் ஆனந்த் சாமி என்கிற இன்னொரு ஆண் விரித்த வலையில் சிக்கிக்கொள்கிறார் ஜெயபிரகாஷ். அவரது அந்தரங்க விஷயங்கள் ஆனந்த் சாமியிடம் சிக்குகிறது. ஆனால் அவற்றை வைத்துகொண்டு பணமோ அல்லது வேறு எதுவும் பொருளோ கேட்காமல். தான் தற்கொலை செய்துகொள்வதை ஜெயபிரகாஷ் லைவாக பார்க்கவேண்டும் என்று பிளாக்மெயில் செய்கிறார் ஆனந்த்சாமி.

இப்படி ஒரு வித்தியாசமான பிளாக் மெயிலின் பின்னணி என்ன என்பதை சில அதிரவைக்கும் முடிச்சுக்களுடன் விளக்குகிறது மீதிப்படம்.

படத்தை இயக்கியுள்ள ஜெயபிரகாஷ் நாயகனாகவும் ஆனந்த் சாமி என்கிற புதுமுகம் அவரை மிரட்டுபவராகவும் நடித்திருக்கிறார்கள். அனால் கதையோட்டத்தில் ஹீரோ வில்லனாகவும் வில்லன் ஹீரோவாகவும் மாறும் அளவுக்கு காட்சிகள் இருப்பதுடன் இருவரும் மிக திறமையாக நடித்துள்ளனர். குறிப்பாக ரகுவரன் சையில் இருக்கும் ஆனந்த் சாமி, பக்குவப்பட்ட நடிப்பால் நம்மை கவர்கிறார். ஆனந்த் சாமியின் மனைவியாக வரும் வாய்பேசமுடியாத அஸ்வதி லால் முடிவு நம் மனதை கனக்க வைக்கிறது.

இணையதளம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி அதில் உலவும் வக்கிர மிருகங்களின் முகத்திரையையும் கிழித்து இருக்கும் இந்தப்படம் இன்றைய இளைஞர் சமுதாயத்தினர் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.. அதேசமயம் கமர்ஷியல் த்ரில்லராகவே இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஜெயபிரகாஷ். இதன் முக்கியத்துவம் கருதித்தான் இயக்குனர் வெற்றிமாறன் இந்தப்படத்தை தனது பேனரில் ரிலீஸ் செய்திருக்கிறார்