மகாமுனி – விமர்சனம்

நடிகர் ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் மகாமுனி. ஸ்டுடியோ கீரின் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து தருண்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது

மகா, கால் டாக்சி டிரைவராக பணி புரிகிறார். இவரது மனைவி இந்துஜா. இவர்களுக்கு பள்ளிக்குச் செல்லும் ஒரு மகன். மிகவும் ஏழ்மையான குடும்பம். இவர் பணத்திற்காக அரசியல்வாதியான இளவரசுவை எதிர்க்கும் ஆட்களை கொலை செய்வதற்கு திட்டங்களைப் போட்டு கொடுக்கிறார். இளவரசு, அருள்தாஸ், மதன் குமார், இவர்களுக்கு உதவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜி.எம்.சுந்தர் ஆகியோர் கூட்டணியாகி மகாவை என்கவுண்டரில் கொல்ல சதி செய்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு கதாபாத்திரமான முனி, தனது அம்மா ரோகிணி உடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரி முடித்துவிட்டு இயற்கை விவசாயம் செய்வதோடு டியூஷனும் எடுக்கிறார். ஜர்னலிசம் படிக்கும் மகிமா, ஆர்யாவை காதலித்து வருகிறார். இது மகிமாவின் தந்தை ஜெயப்பிரகாஷுக்கு தெரிய வருகிறது. சாதிவெறி பிடித்த ஜெயப்பிரகாஷ் முனியை கொல்ல திட்டமிடுகிறார்.

மகா, முனி இருவரை கொலை சதி துரத்துகிறது. இருவரும் தப்பித்தார்களா? இருவருக்கும் என்ன தொடர்பு? மகாவின் குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

ஆர்யா மகாதேவன், முனிராஜ்என இரட்டை வேடத்தில் அச்சு அசலாக மாறுபட்ட நடிப்பை கொடுத்து வாழ்ந்து இருக்கிறார்என்றால் மிகையாகாது.

இந்துஜா சராசரி அடியாளின் மனைவி எந்த மனநிலையில் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பாரோ அதை பிரதிபலித்து சிறப்பாக செய்திருக்கிறார்.

படத்தில், விவசாயம், கல்வி, ஜாதி, நடுத்தர வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள், கணவன்-மனைவி இடையேயான உணர்வுகள், ஆசிரியருக்கு உண்டான பண்புகள், கடவுள் பற்றிய உரையாடல் என அனைத்தையும் நீண்ட விவாதம் ஆக்காமல் ஆங்காங்கே அழகாய் அளவாய் சொல்லியிருப்பது இயக்குனரின் சிறப்பு.

அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு மகா, முனி இருவரது வாழ்வியலையும் அழகாக பிரிக்கிறது. தமனின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. சாபு ஜோசப்பின் படத்தொகுப்பில் சில காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

மௌனகுரு படத்திற்கு பிறகு இயக்குநர் சாந்தகுமார் கனமான கதையால் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.