மணல்கயிறு-2 ; விமர்சனம்


34 ஆண்டுகளுக்கு முன் விசுவின் இயக்கத்தில் எஸ்.வி.சேகர் நடித்து வெளிவந்த சூப்பர்ஹிட் படமான ‘மணல் கயிறு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இன்றைய ட்ரென்ட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து வெளியிட்டுள்ளார்கள். முதல் பாகத்தில் நடித்த விசு மற்றும் எஸ்.வி.சேகர் இதிலும் ஆஜர்.. படத்தின் கதை..?

தான் போட்ட எட்டு நிபந்தனைகளில் ஒன்றுக்கு கூட ஒத்து வராத பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார் என்பதால் விசு மீது இத்தனை ஆண்டுகளாக தீராத வெறுப்பில் இருக்கிறார் எஸ்.வி.சேகர். இப்போது அவரது மகள் பூர்ணாவோ, தனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றதும் அப்பா அந்தக்காலத்தில் போட்ட கண்டிஷன்களை விட அதிரடியான எட்டு கண்டிஷன்களை போடுகிறார்.

இந்த எட்டு கண்டிஷன்களிலும் அடங்காத ஒரு மாப்பிள்ளையான அஸ்வின் சேகருக்கு இதே பூர்ணாவை பெண் பார்த்து திருமணம் நடத்தி வைக்கும் பொறுப்பு மணமகன் மூலமாகவே விசுவக்கு வந்து சேர்க்கிறது.. திருமணமும் நடந்துவிடுகிறது.. அதன்பின் வெடிக்கும் பூகம்பங்களும் அதை கதாநாயகன், விசு, எஸ்.வி.சேகர் உள்ளிடோர் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவை சிறிதும் குறையாமல் சொல்லியிருக்கிறார்கள்.

பூர்ணா போடும் நிபந்தனைகளுக்கு எந்த சம்மந்தமுமில்லாது எட்டுக்கும் ஏகப் பொருத்தம் என தன்னைக் காட்டிக்கொள்ள, அஸ்வின் செய்யும் தகிடுதித்தங்கள், சாகசங்கள் நகைச்சுவை தான். என்ன ஒன்று அவர் தனது உடம்பை இன்னும் குறைத்திருக்கலாம்.

எஸ்.வி.சேகரின் செல்ல மகளாக பூர்ணா, அவரை மாதிரியே அவர் போடும் எட்டு கண்டீஷன்கள் மாதிரியே அசத்தல். நடிப்பில் நன்றாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார். எஸ்.வி.சேகர்- விசு காம்பினேஷனை பற்றி சொல்லவா வேண்டும்.. துணுக்கு தோரணங்களால் இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரி அதிர வைகிறார்கள்.

தரணின் இசையில் சொல்லிகொல்லும்படி பெரிதான ஈர்ப்பு இல்லை. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு கண்களில் ஒற்றிக் கொள்ளும் காட்சிப் பதிவு. மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட இயக்குனர் மதன்குமார் சமீபத்திய சமூக, அரசியல் நிகழ்வுகளை நக்கல், நையாண்டியாக படத்தை நகர்த்தியிருக்கிறார். படமாக்களில் சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும் படம் முழுவதும் ரசித்து சிரிக்கும்படியாக காட்சிகள் நிறைய அமைந்திருப்பது படத்திற்கு பலமே.