மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் – விமர்சனம்


நாயகன் ஆரவ் ஒரு தாதா. அடிதடி சண்டை என்று அந்த ஏரியாவிற்கே தாதாவாக இருக்கிறார். ஆரவின் தாயாக நடிகை ராதிகா. ஆரவ் தனது தாயான ராதிகாவை மதிக்காமல் இருக்கும் மகனாக இருக்கிறார். ராதிகாவோ ஆரவ்வை வைத்து ஊரில் இருப்பவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார்.

சாயாஜி ஷிண்டே ஒரு அரசியல்வாதி. ஒரு குறிப்பிட்ட கட்சியில் இருக்கும் அவருக்கு ஆதரவாக நாயகன் ஆரவ் செயல்பட்டு வருகிறார். சாயாஜி ஷிண்டே இருக்கும் அதே கட்சியில் இருப்பவர் ஹரிஷ் பெராடி. ஆரவை கொலை செய்தால் தான், கட்சியில் தான் முன்னேற முடியும் என்று நினைக்கிறார் ஹரிஷ் பெராடி.

இது ஒரு புறம் இருக்க, கல்லூரி ஒன்றில் ஒருவரை அடிக்கிறார் நாயகன் ஆரவ். ஆரவின் துணிச்சலை பார்த்து காதலில் விழுகிறார் நாயகி காவ்யா. ஆனால் ஆரவிற்கோ காதலில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. இந்நிலையில் அக்கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவர் காவ்யாவை காதலிக்கிறார். ஆனால் அவர் மிகவும் கோழை.

இச்சூழ்நிலையில் காவல்துறையினர் என்கவுண்டர் மூலம் ஆரவை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். ஆனால் என்கவுண்டரின் போது அந்த கோழையான மாணவர் சிக்கி இறந்து விடுகிறார். அது மட்டுமல்லாது அவரின் ஆவி ஆரவின் உடம்பிற்குள் செல்கிறது. இதன் பிறகு படம் வேகமெடுக்கிறது.

துணிச்சலுடன், வீரனாக, ஏரியாவிற்கே தாதாவாக இருக்கும் ஆரவ் உடம்பினுள் கோழையான ஒருவரின் ஆவி சென்றவுடன் அவரது வாழ்க்கை எப்படி மாறுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் ஆரவ் பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். நாயகி காவ்யா அழகாக வந்து செல்கிறார். சாயாஜி ஷிண்டே தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

ராதிகா சுருட்டு பிடிப்பது, புல்லட் ஓட்டுவது என வித்தியாசமாக நடித்துள்ளார்.

நல்ல கதையை தேர்வு செய்துள்ள இயக்குநர் சரண் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கே.வி.குகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சைமன் கே.கிங்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

மொத்தத்தில் ‘மார்க்கெட் ராஜா’ ரசிக்க வைக்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *