மீசைய முறுக்கு – விமர்சனம்


இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்து, இயக்கி, பாடல்கள் எழுதி, இசையமைத்துள்ள படம் தான் ‘மீசைய முறுக்கு’…

பள்ளி, கல்லூரி காலங்களை தனது பெற்றோரின் விருப்பபடி கடந்து செல்லும் ஒரு இளைஞன், படித்த படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் தனது எதிர்கால வாழ்க்கையை தான் விரும்பியபடி தேர்ந்தெடுத்துக்கொள்ள முயலும்போது குறுக்கிடும் சங்கடங்களையும் தடைகடந்து சாதிக்கும்போது ஏற்படும் சந்தோஷங்களையும் தான் ‘மீசையை முறுக்கியபடி சொல்லியிருகிறார் ஹிப் ஹாப் ஆதி.

கல்லூரி பேராசிரியர் தம்பதியான விவேக்-விஜயலட்சுமியின் மூத்த மகன் (ஹிப் ஹாப்) ஆதி.. இவரை வெளியூர் இஞ்சினீரிங் கல்லூரியில் சேர்த்து விடுகிறார் விவேக்.. அங்கே தனது பழைய பள்ளித்தோழியான ஆத்மிகாவை கண்டதும் லவ் ராக்கெட் விட்டு, அவரின் காதலை கைப்பற்றுகிறார்.. இடையில் ஆத்மிகா பற்றி தவறான புரிதல் ஏற்பட இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையும் நிற்கிறது.. பின் இருவரும் சமரசம் ஆகும் நிலையில், இவர்கள் காதல் விவகாரம் தெரியவர, ஆத்மிகாவுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகளை ஆரம்பிக்கிறார் அவரது தந்தை..

கல்லூரி முடிந்து வெளியே வரும் ஆதி சென்னைக்கு சென்று இசையில் சாதிக்கப்போவதாக கூறி கிளம்ப, அவரது எதிர்கால குறிக்கோளுக்காக அவரது தந்தையும் காதலியும் ஒருவருட அவகாசம் கொடுக்கிறார்கள்.. ஆனால் ஆதியால் சொன்னபடி ஒரு வருடத்திற்குள் பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை. இதற்கு மேலும் பொறுக்க முடியாதபடி காதலி ஆத்மிகா வீட்டில் கல்யாண நெருக்கடி..

ஆதியின் அப்பா விவேக்கோ மேற்படிப்பு படித்துக்கொண்டே இசை வேலைகளை பார் என்கிறார்.. அப்பாவின் ஆலோசனையை ஆதி ஏற்றுக்கொண்டாரா..? இல்லை தான் விரும்பியபடியே போக நினைத்தாரா..? இந்த சிக்கலில் ஆதியின் காதல் கைகூடியதா..? மீதிப்படம் விடை சொல்கிறது.

ஆஹா ஓஹோ கதையில்லைதான்.. சாதாரண கல்லூரி, படிப்பு, ராக்கிங், கல்ச்சுரல் நிகழ்ச்சி என நாம் பார்த்து பழகிய கதைக்களம் தான்.. ஆனால் இந்தப்படத்தில் ஆதி உருவாக்கிய காட்சிகள் இளமை துள்ளலுடன் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளன..

இயக்குனராக மட்டுமல்ல, ஒரு நடிகராகவும் இந்தப்படத்தில் தன்னை பொருத்திக்கொண்டுள்ளார் ஆதி.. புதுமுகம் என்பவர்களுக்கே உரிய சொதப்பல் எதுவும் இல்லாமல் இயல்பாக அந்த கேரக்டரை பிரதிபலித்திருக்கிறார் ஆதி.. குறிப்பாக இப்போதைய அறிமுக நடிகர்கள் முதல் படத்திலேயே பண்ணும் அலப்பறை அட்ராசிடி என எதுவுமே ஆதியிடம் இல்லாதது படத்துக்கு பிளஸ் பாயின்ட்..

கதாநாயகியாக ஆத்மிகா.. மாணவியாக, காதலியாக மிகையில்லா அழகு, மிகைப்படுத்தப்படாத நடிப்புடன் படம் நெடுக நம்மை கவர்கிறார்.. இன்னொரு நாயகி மணீஷாவாக வரும் மாளவிகாவும் ஒகே தான். ஆதியின் தந்தையாக வரும் விவேக் ஆங்கில வழி கல்வி கல்வி பற்றியும் அந்த பள்ளிகள் பற்றியும் சவுக்கடி கொடுக்கும் இடத்தில் செம க்ளாப்ஸ் வாங்குகிறார்.

படத்தின் மற்ற பாத்திரங்களில் இடம்பிடித்துள்ள பலரும் நாம் யூடியூப் இணையதள நிகழ்ச்சிகளில் பார்த்து பழகிய ஆட்கள் தான். முதன்முதலாக வெள்ளித்திரைக்குள் நுழைந்திருக்கும் இவர்கள் ஒவ்வொருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்தப்படத்தை ஒரு களமாக எடுத்துக்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்கள்..

குறிப்பாக ஆதியின் பால்யகால நண்பன், அடிதடியில் அதிரடி காட்டும் ஆதியின் தம்பி, ஆதியின் சூப்பர் சீனியர் சுதாகர், மற்ற சீனியர்கள், ஆதியின் காதலுக்கு உதவும் அவரது முன்னால் எதிரியான ஆர்ஜே ஷா ரா, திடீர் என்ட்ரி கொடுத்து ஆதியின் இசை வாழ்க்கையில் சுவிட்ச் போட்டு ஒளியேற்றும் ம.க.ப ஆனந்த் என அனைவருமே படத்திற்கு மிகப்பெரிய பலம் தான். கிளப்புல மப்புல உட்பட பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம் தான்.

எந்த இடத்திலும் அலுப்படையாத வைக்காத திரைக்கதை படத்திற்கு பலம்.. காதலை அளவோடு, அழகாக கையாண்டது, படிப்பிற்குப்பின் ஒரு மாணவனின் எதிர்கால வாழ்கையை அவன் விரும்பியபடியே தீர்மானித்துக்கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அழகாக சொல்லி இருக்கிறார் ஆதி..

இன்று கல்லூரி படிப்பை முடித்து வெளியேறும் பல மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்த குழப்பமான கேள்விக்கு தனது வாழ்க்கை சுயசரிதையையே படமாக எடுத்த ஆதியின் சாமர்த்தியம் அவருக்கு கைகொடுக்கவே செய்திருக்கிறது.