மெர்க்குரி ; விமர்சனம்


வித்தியாசமான படங்களை கொடுக்கும் கார்த்திக் சுப்பராஜின் புதிய படைப்பு.. பட முழுதும் எந்த வசனங்களும் இல்லாத ‘பேசும்’ படமாக எடுத்துள்ளார்.. ஏன்.. எதற்காக..? அது ரசிகர்களை கவர்ந்துள்ளதா..? பார்க்கலாம்.

காது கேளாத, வாய்பேச முடியாத நண்பர்கள் சிலர் தாங்கள் படித்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காரில் திரும்புகின்றனர். வழியில் அவர்களது கவனக்குறைவால் பாதையில் நடந்துசெல்லும் பார்வையற்றவரான பிரபுதேவா மீது காரை ஏற்றி விடுகின்றனர்.. இந்த விபத்தில் பிரபுதேவா இறந்துவிட, அவரை அருகில் உள்ள ஒரு பாழடைந்த பேக்டரியில் புதைத்து விடுகின்றனர்..

ஆனால் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளில் நண்பர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர்.. இதற்கு கரணம் யார்..? மீது உள்ளவர்களால் இதிலிருந்து தப்பிக்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

இதுநாள் வரை நடனம், காமெடி, துறுதுறு பேச்சு என்று கலகலப்பான நபராகவே அறியப்பட்ட பிரபுதேவா இதுவரை ஏற்றிராத கதாபாத்திரம். மிரட்டலான ஒப்பனையுடன் வந்து நடுங்க வைக்கிறார். எந்தவிதக் குறையும் சொல்லமுடியாத அளவுக்கு நடிகர்களைத் தேர்வு செய்திருக்கிறார், இயக்குநர். எண்ணிக்கை குறைவு என்றாலும் அந்தந்த கேரக்டர்களுக்கு நடிகர்கள் பக்காவாகப் பொருந்தியிருக்கிறார்கள். சைகை மொழி, முகபாவங்கள் மூலம் சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா என 5 நண்பர்களும் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். அதிலும், இந்துஜாவின் நடிப்பு இயல்பும் அழகுணர்ச்சியும் மிக்கதாக ஈர்க்கிறது.

பேய்க்கு ஏன் கண் தெரியாது என்கிற காரணமும் தெளிவாக இல்லை. பார்வையற்ற ஒருவரால் இந்துஜா எப்படி தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டார்? தெரியாமல் செய்த தவறுக்காக அந்த இளைஞர்கள் ஏன் அவ்வளவு ஆக்ரோஷமாக பழிவாங்கப்படுகின்றனர்? என்பதெல்லாம் தெளிவாக கூறப்படவில்லை.

படத்தின் ரியல் ஹீரோ சந்தோஷ் நாராயணன்தான் இடையிடையே வேலை செய்தது போய், இதில் முதலிலிருந்து இறுதிவரை எங்கும் எதிலும் அவர் ராஜ்ஜியம் தான். ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா கோணங்கள் படத்தின் தன்மையைவிட்டு விலகாமல் பார்த்துக்கொள்வதுடன் படத்தின் கலர் டோனும் கதைசெல்லும் மனநிலைக்கு ஏதுவாக இருக்கிறது.

ஹாரர் படமாக இருந்தாலும் அதிலும் ஒரு மெசேஜை உள்ளே நுழைத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.. சமீபத்திய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை நுட்பமாக உணர்த்துகிறது. கடைசியில் போகிற போக்கில் காட்டப்படுகிற சிலைடுகள், இது வெறும் திகில் படமல்ல என்பதை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கிறது.