மேற்கு தொடர்ச்சி மலை – விமர்சனம்


கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதி கிராமங்களின் எளிய மனிதர்களின் வாழ்வியலை பதிவுசெய்யும் படம் தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை.

மலைப்பகுதியில் எஸ்டேட் ஒன்றில் குடியிருக்கும் கீழே இருந்து கேரளாவிற்கு போகும் மலைப்பாதையில் உள்ள கிராமங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச்செல்வதுதான் வேலை. கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து சொந்தமாக நிலம் வாங்கவேண்டும் என்பது லட்சியம். அதற்காக திருமணத்தையே தள்ளிப்போடுகிறார்.

ஆனால் திடீரென நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அவரது கனவையே குழிதோண்டி புதைக்கும் நிலைக்கு அவரை கொண்டு செல்கிறது. அதன்பின் அவர் வசிக்கும் எஸ்டேட் பகுதியையே அந்தப்பகுதியை சேர்ந்த பணக்காரர் ஆறுபாலா வாங்கிவிட, ஆண்டனியின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது.

சொந்தமாக கையளவு நிலம் என்பது அன்றாடங்காய்ச்சிகளுக்கு எவ்வளவு பெரிய கனவு என்பதை மனதில் தைக்கும் விதமாக படமாக்கி இருக்கிறார்கள். சில படங்கள் அத்திப்பூத்தாற்போல அவ்வப்போது வந்து செல்லும். அதனாலேயே அதை கொண்டாலும் மனநிலைக்கு நாம் தயாராகிறோம்.

படம் தொடங்கியதும் மலைப்பாதை வழியாக நம்மை அப்படியே கேரளாவுக்குள் மலையேற்றி அழைத்து செல்கிறார்கள்.. உண்மையிலேயே நாமே அந்த பகுதிக்குள் ட்ரெக்கிங் சென்றுவந்த உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. நாம் எப்போதாவது ஒருநாள் பாயாசத்திற்கு பயன்படுத்தும் ஏலக்காய் என்பது மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மக்களின் வாழ்க்கையை எப்படி தீர்மானிக்கிறது என்பதை டீடெயிலாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதில் நடித்துள்ள ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்ட அத்தனை பேரும் நடிப்பு என தெரியாத வகையில் இயல்பாகவே வாழ்ந்துள்ளார்கள். ஆண்டனியின் அம்மா, அவரது மாமா, வயதானாலும் மூட்டையை சுமந்துகொண்டு மலைப்பாதையில் வேகமாக இறங்கும் பெரியவர், டீக்கடை வைத்து பிழைக்கும் கிழவி, உரக்கடை வைத்திருக்கும் நபர், சம்பளம் கொடுக்கும் கங்காணி இவர்களை அனைவரையும் விட முக்கியமாக திருமணமே செய்துகொள்ளாமல் தொழிலாளர் நலனுக்காக வாழக்கையை அர்ப்பணிக்கும் சகாவு அபு வலையங்குளம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

தனது சொந்த பகுதி மக்களின் வாழ்க்கை என்பதாலோ என்னவோ தேனி ஈஸ்வரின் கேமரா ஓவர்டைம் டூட்டி பார்த்திருக்கிறது. இந்த மொத்த கதையையும் தனது பின்னணி இசையால் அழகாக சுமந்து செல்கிறார் இசைஞானி இளையராஜா. மக்களின் வாழ்வியலை படமாக்கினாலும், அது டாக்குமெண்டரி போல ஆகிவிடாமல் கலையம்சத்துடன் மொத்தப்படத்தையும் ரசிக்கும் விதமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் லெனின் பாரதி.

இப்படிப்பட்ட படத்தை தயாரிக்க முன் வந்ததற்காக ஒரு தயாரிப்பாளராக விஜய்சேதுபதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கமர்ஷியல் படமா, வசூலை குவிக்கும் படமா என்கிற ஆராய்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டு பார்த்தால், இந்தப்படம் ஒரு நல்ல இயக்குனரையும் இன்னும் சில நல்ல நடிகர்களையும் அடையாளம் காட்டியிருக்கிறது.