மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்


மீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் நயன்தாரா காம்பினேஷனில் நகைச்சுவைப் படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் ரசிகர்களிடம் எந்தவிதமான வரவேற்பை பெற்றுள்ளது பார்க்கலாம்.

கார் கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவர் சிவகார்த்திகேயன். டிவி சீரியல் தயாரிக்கும் கோடீஸ்வரி நயன்தாரா. இருவருக்கும் எதிர்பாராதவிதமாக முட்டல் மோதல் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து நயன்தாராவின் மீது காதலில் விழுகிறார் சிவகார்த்திகேயன். ஆனால் நயன்தாராவோ அவரை உதாசீனப்படுத்துகிறார்.

சில பல நிகழ்வுகளுக்கு பிறகு ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் வீடுதேடி வந்து காதலை சொல்லி வெளிநாட்டில் இருக்கும் தனது உறவினர்களிடம் திருமணத்திற்கு அனுமதி வாங்க அழைத்து செல்கிறார் நயன்தாரா.

அதன்பின் நடந்தது என்ன..? திடீரென சிவகார்த்திகேயன் வீடு தேடி வந்து காதல் சொல்லும் அளவுக்கு நயன்தாராவிடம் என்ன மாற்றம் நடந்தது..? வெளிநாட்டிற்கு சிவகார்த்திகேயனை அழைத்துச் சென்றபோது அங்கே என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

சிவகார்த்திகேயன் வழக்கம்போல தனது துருதுரு நடிப்பில் எந்தவித குறையும் இல்லாமல் பங்களிப்பு செய்திருக்கிறார். அதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் விழலுக்கு நீர் இறைத்துக் கதையாக சுவாரசியமே இல்லாத கதையும் திரைக்கதையும் அவரது உழைப்பை வீணடித்துவிட்டன.

நயன்தாராவும் ஜஸ்ட் லைக் தட் இந்த கேரக்டரை தூக்கி சாப்பிடுகிறார். அதேசமயம் நயன்தாரா சிவகார்த்திகேயன் ஜோடியை பார்க்கும்போது நயன்தாராவின் சீனியாரிட்டி நம் மனதில் வந்து வந்து ஒரு சிறிய உறுத்தலை படம் நெடுக கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

ராதிகா வழக்கமான ராஜேஷ் பட செண்டிமெண்ட் அம்மாவாக நடிப்பில் குறை வைக்கவில்லை. தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ சங்கர், சதீஷ் இத்தனை பேர் படத்தில் இருக்கிறார்கள் ஆனால் பல காட்சிகளில் காமெடி எங்கே என்று கேட்க வைக்கிறது.. ராஜேஷ் படம் என்றாலே காட்சிக்குக் காட்சி கலகலவென நகைச்சுவை தொங்கவிட்டிருப்பார் ஆனால் இந்த படத்தில் தோரணமாக கூட வேண்டாம் நகைச்சுவை பூக்களை கூட செருகி வைக்க மறந்து விட்டார் போல.

காட்சிக்குக் காட்சி சுவாரசியம் காட்டியிருக்க வேண்டிய திரைக்கதையை இயக்குனர் ராஜேஷ் மெத்தனமாக கையாண்டிருக்கிறார் என்றே தெரிகிறது சிவகார்த்திகேயன் இனி வரும் படங்களில் கவனம் கூட்டி நடிக்க வேண்டிய கட்டாயத்தை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது என்று சொல்ல வேண்டும்.