நாடோடிகள் 2 – விமர்சனம்


படத்தின் நாயகன் சசிகுமார் சமூக அக்கறை உள்ளவர். மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக சாதியை கடுமையாக எதிர்கிறார்.

சசிகுமாருக்கு ஆதரவாக அஞ்சலி, பரணி மற்றும் பெரியவர் ஒருவர் செயல்படுகின்றனர். ஜாதியற்ற இளம் தலைமுறையை உருவாக்க நினைக்கிறார் சசிகுமார். ஆனால் அவர் சார்ந்த ஆதியில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்புகின்றன. இதனால் சொந்த தாய்மாமா உள்பட யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள்.

இவ்வாறு இருக்கையில், தன்னை தேடி வந்து யாராவது பெண் கொடுத்தாலே போதும் என்ற மனநிலையில் இருக்கிறார் சசிகுமார். இந்த சூழலில், சசிகுமார் சாதியைச் சேர்ந்த பெண்ணான அதுல்யா ரவியை அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்தன்று இரவு சசிகுமாருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன? சாதியற்ற இளம் தலைமுறை என்ற சசிகுமாரின் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சசிகுமார் நாடோடிகள் படத்தில் பார்த்ததைப் போல் இருக்கிறார். அதே துறு துறு நடிப்பு. சசிகுமார்-அஞ்சலி இடையேயான காதல் காட்சிகள் நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

செங்கொடி எனும் கதாபாத்திரத்தில் வரும் நாயகி அஞ்சலி, போராட்டத்தில் இறங்கி குரல் கொடுக்கும் தைரியமான பெண்ணாகவும், சசிகுமாருக்கு பக்கபலமாகவும் இருக்கிறார்.

இதேபோல், பரணியின் கதாபாத்திரத்தை எதார்த்தமாக வடிவமைத்துள்ள விதம் சிறப்பு. காதலர்களாக வரும் அதுல்யா ரவி, இசக்கி மற்றும் போலீசாக வரும் திருநங்கை நமீதா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

சாதி ஒழிப்பு என்பதை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் சமுத்திரகனி. தொடர்ந்து பல்வேறு நல்ல கருத்துகளை தனது படங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார் சமுத்திரக்கனி.
இந்தப்படத்திலும் அந்த கடமையை செவ்வனே செய்துள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கின்றது. ஏகாம்பரத்தின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.

மொத்தத்தில் ‘நாடோடிகள் 2’ படத்தின் மூலம் சாதிக்கு எதிராக தனது சாட்டையை சுழற்றி உள்ளார் இயக்குனர் சமுத்திரக்கனி.