நண்பேன்டா – விமர்சனம்

விரட்டி விரட்டி காதலிக்க ஒரு காதலி, உதவி செய்ய கூடவே ஒரு நண்பன் என்கிற உதயநிதியின் ரெடிமேட் பார்முலாவில் இருந்து விலகாமல் வந்திருக்கும் அவரது மூன்றாவது படம் தான் ‘நண்பேன்டா’.

தஞ்சையில் இருந்து திருச்சிக்கு வரும் உதயநிதிக்கு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி பேங்கில் வேலை பார்க்கும் நயன்தாராவை கண்டதுமே காதல். தான் தேடிவந்த நண்பன் சந்தானத்தின் வீட்டிற்கு எதிரிலேயே நயன்தாரா குடியிருக்க, சிரமப்பட்டு காதலை வளர்க்கிறார் உதயநிதி.

காதல் கைகூடுவது போல வந்தாலே நம் ஆட்களுக்குத்தான் மண்டைக்கனம் ஏறிக்கொள்ளுமே. அப்படித்தான் நயன்தாரா தனது சென்சிடிவ் ஆன பிரச்சனையை பற்றி மனம் திறந்து சொல்ல, அதன் சீரியஸ்நெஸ் புரியாமல் உதயநிதி கேலி செய்ய, அதுவே காதலுக்கு ஆப்பும் வைத்துவிடுகிறது. பிறகென்ன.. கெஞ்சல், மிஞ்சல், கொஞ்சல் என இறுதியில் சுபம் போடுகிறார்கள்..

சட்டை ஒரே அளவுதான்.. ஆனால் கலர் தான் வேறு என்றும் சொல்லும் விதமாக முந்தைய இரண்டு படங்களில் பார்த்த அதே உதயநிதி தான் இதிலும்.. கூடுதலாக டைமிங் காமெடியில் கொஞ்சம் மேலே வந்திருப்பதோடு ஆக்சனையும் லைட்டாக தொட்டிருக்கிறார். தேங்காயை உரிக்கும்போது அது குடுமியில்லாமல் இருக்குமா..? அது போலத்தான் சந்தானம்.. ஆல் ஏரியாவிலும் அய்யா எகிறி அடித்தாலும் அடியில் முன்பிருந்த வீரியம் குறைந்தது போல ஒரு பீலிங்..

நடிக்கிறதுக்கு வெயிட்டான ரோல் இல்லை என்றாலும் நயன்தாரா வரும் காட்சிகளில் எல்லாம் உதயநிதிகூட சேர்ந்து நாமும் பாத்துக்கிட்டே இருக்கலாம் போலத்தான் இருக்கிறது. குறிப்பாக அவர் வெட்கப்படும் காட்சிகள் அவருக்கு பிளஸ்.. அவர் அடிக்கடி வெட்கப்பட்டுக்கொண்டே இருப்பது தான் மைனஸ்.

சந்தானத்தின் காதலியாக புது போஸ்டிங்கில் ஜமாய்க்கிறார் ஷெரின். போலீஸ் மிடுக்கு காட்டும் கருணாகரனின் சலம்பலும் ரசிக்க வைக்கிறது. நான் கடவுள் ராஜேந்திரனிடம் தான் ரசிகர்கள் இப்போது நிறைய எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்களே.. அவரது கேரக்டரை இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டியிருக்கலாம்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ஐந்து பாடல்கள் இருபது நிமிடத்தை கடினமாக கடத்த, நீராம்பல் பூவே பாடல் மட்டும் சுகம் தருகிறது. கலகலப்பான படம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை தான். ஆனால் உதயநிதியின் முந்தைய படங்களின் சாயலே இதிலும் இருப்பதுதான் குறை. ஆக வரும் படங்களில் உதயநிதி புது ரூட்டில் கால் வைத்தால் தான் திரையுலகில் அவரது எதிர்காலம் தடங்கலின்றி அமையும் என்பது நமது கருத்து.