நட்புனா என்னனு தெரியுமா – விமர்சனம்


ஒரே தேதியில் பிறந்த கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் மூன்று பேரும் நண்பர்களாக வளர்கிறார்கள். பெரிய அளவில் படிப்பு ஏறாததால் தண்டமாக ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு திடீரென ஞானோதயம் ஏற்பட்டு திருமணத்தை நடத்தித்தரும் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள்.

காதல் பக்கமே போகாத இந்த மூவரில் ராஜு மட்டும் ரம்யா நம்பீசனை கண்டதும் காதல் கொள்கிறார். அவரை இம்ப்ரெஸ் செய்வதற்காக சில விஷயங்கள் செய்து நண்பர்களுக்கும் தேவையில்லாத சிக்கலை இழுத்துவிடுகிறார்.

இந்த நிலையில் தனது காதலை ரம்யா நம்பீசனிடம் ராஜூ சொல்லப்போகும் நிலையில் எதிர்பாராத விதமாக கவின் குறுக்கே புகுந்து ரம்யாவிடம் தனது காதலை சொல்கிறார். முதல் முயற்சியிலேயே அது ஓகே ஆகிவிடுகிறது.

இதைத்தொடர்ந்து கவின் தங்களை ஏமாற்றிவிட்டதாக நண்பர்களுக்குள் பிளவு ஏற்படுகிறது. கவின் தன் காதலை சொன்னதுமே முன்பின் அறிமுகம் இல்லாத ரம்யா நம்பீசன் ஏன் அதை ஏற்றுக் கொள்கிறார், பிரிந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று கூட இவர்களது காதல் உதவியாக இருந்ததா என்பது மீதிக்கதை.

ஆகா ஓகோ கதை இல்லை என்றாலும் சொன்ன விதத்தில் அழகாக சொல்லி மனதிற்குள் புன்னகைக்க வைக்கிறார்கள் மொத்த படக்குழுவினரும். அலட்டிக்கொள்ளாத நடிப்பால் கவர்கிறார் நாயகன் கவின்.

அவருக்கு சற்றும் சளைக்காமல் சலம்பல் பண்ணி சிரிக்க வைக்கிறார் ராஜூ. அருண்ராஜா காமராஜுக்குள் ஒளிந்திருக்கும் நகைச்சுவைக் கலைஞர் இந்த படத்தில் முழுவதுமாகவே வெளிப்பட்டு இருக்கிறார்.

நாயகி ரம்யா நம்பீசன் இந்த கதைக்கு பொருத்தமான தேர்வு என நிரூபித்திக்கிறார். இன்னொரு கல்யாண ஏற்பாட்டாளராக வரும் இளவரசு மற்றும் லோக்கல் தாதாவாக வரும் மன்சூரலிகான், ரம்யாவின் தந்தையாக வரும் அழகம்பெருமாள் விஷம் குடித்தவர்களிடமிருந்து அதை வெளியே எடுக்கும் காக்கா முட்டை பாட்டி என அனைவருமே கச்சிதமான தேர்வு.

நட்பு பற்றிய கதை தான் என்றாலும் ஓவராக அதை பில்டப் செய்யாமல், அதே சமயம் காதலைப் பற்றிய பாடமும் எடுக்காமல் இரண்டையும் அழகாக சமன் செய்திருக்கிறார் இயக்குனர் சிவா அரவிந்த்.

மிகப்பெரிய எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் இல்லாமல் போகிற போக்கில் கதைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்து திரைக்கதையை அமைத்து இருப்பதால் நமக்கு அலுப்பு தட்டவில்லை.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *