நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்


குறும்படத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தியவர்கள் சினிமாவிற்குள் நுழைந்த காலம் போல, தற்போது யூட்யூபில் பிரபலமானவர்கள் சினிமாவிற்குள் நிலையில் தருணம் இது அப்படி.. ஒரு குழுவினரின் முயற்சிதான் இந்தப் படம். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்களா..? பார்க்கலாம்.

நாயகன் ரியோ ராஜ் மற்றும் அவரது நண்பன் விக்னேஷ் காந்த் இருவரும் யூட்யூப்பில் ஓரளவு பிரபலமானவர்கள்.. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருக்கும் அவர்களுக்கு எதிர்பாராத விதமாக மிகப்பெரிய கோடீஸ்வரர் ராதாரவியை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. ராதாரவி இவர்கள் இருவருக்கும் மூன்று டாஸ்க்குகளை கொடுக்கிறார்.

முதலாவதாக இவர்கள் இருவரும் ஒரே நாளில் தமிழகம் முழுக்க பிரபலமான பேசப்படவேண்டும்.. இரண்டாவதாக பைத்தியக்காரன் போன்ற ஒருவனை இடைத்தேர்தலில் நிற்க வைத்து அவனை எம்எல்ஏ ஆக்க வேண்டும்.. மூன்றாவதாக ரயில்வே நிலையத்தில் ஒரு பெண்ணை கொள்ள வருபவனிடம் இருந்து அவளைக் காப்பாற்ற வேண்டும்..

முதல் இரண்டு டாஸ்க்குகளையும் நண்பர்கள் இருவரும் வெற்றிகரமாக முடித்து விடுகின்றனர். மூன்றாவதாக ரயில் நிலையத்தில் கொல்லப்படப்போகும் பெண் யார், கொல்ல வருபவன் யார் என தெரியாத நிலையில் இவர்களால் அந்த பெண்ணை காப்பாற்ற முடிந்ததா..? இப்படி ஒரு டாஸ்க்கை ராதாரவி இவர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன..? இதில் ராதாரவியின் பின்னணி என்ன என்பது மீதிப்படம்..

நாயகனாக நடித்திருக்கும் ரியோ ராஜ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.. அவ்வளவு தானே தவிர, ஒரு ஹீரோவாக தன்னுடைய சுயத்தை எங்கேயும் வெளிப்படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை.. அதனை உணர்ந்தோ என்னவோ படம் முழுதும் அவருடன் வருகிற மாதிரியான கேரக்டரில் விக்னேஷ் காந்த்தை இணைத்துள்ளனர்.. ஆனாலும் அவரும் தன் பங்கிற்கு காமா சோமாவென்று காமெடி என்கிற பெயரில் நம்மை சோதிக்கிறார்.

வழக்கமான டிபிக்கல் கதாநாயகி பாத்திரம் என்றாலும் நாயகியாக அறிமுகமாகியுள்ள ஷெரின் காஞ்ச்வாலா, தான் வரும் காட்சிகளில் எல்லாம் ஓரளவு நம்மை ரசிக்க வைக்கிறார்.. அரசியல்வாதியாக வரும் நாஞ்சில் சம்பத் எபிசோட் ஓரளவு சுவாரசியமாக இருந்தாலும் அரசியலில் இப்படியெல்லாமா நடக்கிறது என்கிற விதமாக காதுகளில் மூலம் மூலமாக பூச்சுற்றுகிறார்கள்..

ராதாரவி வழக்கம்போல இந்த படத்தில் சற்று வித்தியாசப்படுத்தினாலும் அவர் கொடுக்கும் மூன்று டாஸ்க்குகளுக்கான காரணத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. மயில்சாமியின் எதார்த்தமான கதாபாத்திரம் வழக்கம்போல சபாஷ் பெறுகிறது.. சுட்டி அரவிந்த் எதற்காக இந்த நிலைக்கு ஆளாகிறார் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

யுகே செந்தில் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் என்றாலும் அதை படக்குழுவினர் பயன்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்கிற டைட்டிலை எதற்காக வைத்தார்கள் என்பது கடைசிவரை படம் பார்க்கும் நமக்கு தெரியவில்லை.. கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே சமூக விழிப்புணர்வுடன் இருப்பதற்காக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலனை பாராட்டலாம்.. ஆனால் அதற்காக முதலில் இருந்து இவர்கள் ஆடிய போங்கு ஆட்டத்தை நம்மால் ரசிக்க முடியவில்லை என்பதே உண்மை

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *