நெருப்புடா – விமர்சனம்


தீயணைப்பு துறையில் சேரவேண்டும் என்கிற லட்சிய வெறிகொண்ட விக்ரம் பிரபு உள்ளிட்ட நண்பர்கள் ஐந்து பேர்.. அரசுவேலை கூடிவரும் நேரத்தில் எதிர்பாராத விதமாக தாதா ஒருவனின் வலதுகையான ரவுடி ஒருவனின் சாவுக்கு காரணமாக ஆகின்றனர்.. விஷயம் தெரிந்து இவர்களை வேட்டையாட துவங்குகிறான் தாதா. நண்பர்களின் கதி என்ன ஆனது என்பது மீதிப்படம்.

தீயணைப்பு வீரருக்கான துடிப்பும் வேகமுமாக செயல்படுகிறார் விக்ரம் பிரபு.. தனது நண்பனை காப்பாற்ற அவர் எடுக்கும் ரிஸ்க்கும், அதிலிருந்து ஒவ்வொரு முறை அவரும் நண்பர்களும் தப்பிப்பது விறுவிறுப்பு.. காதலனை தேடிவந்து காதலிக்கும், காதலுக்கு சிக்கல்கள் இல்லாத கேரக்டரை ஜஸ்ட் லைக் தட் பண்ணிவிட்டு போகிறார் நிக்கி கல்ராணி.

நண்பர்களாக நடித்துள்ள வருண் உள்ளிட்ட நண்பர்களும் துடிப்பாகவே தங்களது நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்கள்.. அவர்களில் இருவர் எதிர்பாரதவிதமாக மதுசூதனை தூக்கியதும் கதை சூடு பிடிப்பது உண்மை.

நல்ல போலீஸ் அதிகாரிகளாக நாகிநீடு, ஆடுகளம் நரேன், விக்ரம் பிரபு அப்பாவாக பாந்தமான கேரக்டரில் பொன்வண்ணன் ஆகியோர் குணச்சித்திர நடிப்பில் மிளிர்கின்றனர். மொட்ட ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஆமாம் அவருக்கு எதற்காக கபாலி என பெயர் வைத்தார்கள்..? ரவுடி மதுசூதன் வழக்கம்போல மிரட்டல்..

க்ளைமாக்ஸில் சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுத்திருக்கும் சங்கீதாவின் கேரக்டர் உண்மையிலேயே ஆச்சர்யம் தான். ஆனால் வலுவான க்ளைமாக்ஸ் அவரால் பலவீனப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. ஷான் ரோல்டனின் இசையில் ‘ஆலங்கிளியே’ பாடல் காதுகளுக்குள் ரீங்காரமிடுகிறது. நெருப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்..

இடைவேளைவிட்டு கால்மணி நேரத்துக்குள் க்ளைமாக்ஸ் வந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தியதாலோ என்னவோ, அடுத்தடுத்து நீளும் காட்சிகள் நம்மை ரொம்பவே யோசிக்க வைத்து தெறிக்க விடுகின்றன.. திரைக்கதையை கொஞ்சம் கவனித்திருக்கலாம். அறிமுக இயக்குனர் அசோக் குமார் தீயணைப்பு வீரர்களின் பின்னணியில் கதையை யோசித்திருப்பது வித்தியாசமானது தான்.. என்றாலும் அவர்களின் தொழில் சார்ந்த பிரச்சனைகளை விட்டு தடம் மாறி, வீரர்களின் பெர்சனல் விஷயங்கள், அதுசார்ந்த பிரச்சனைகள் என திரைக்கதையை தடுமாறி பயணிக்க விட்டதில் சற்று ஏமாற்றமே..