நிசப்தம் – விமர்சனம்


செய்தித்தாள்களில் பிஞ்சுக்குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் செய்தியை பற்றி அவ்வப்போது படித்திருப்போம்.. ‘ப்ச்’ என உச் கொட்டிவிட்டோ அல்லது இவனுங்களை எல்லாம் தூக்கில் போடவேண்டும் என குமுறிவிட்டோ அடுத்த பக்கத்தை புரட்ட ஆரம்பித்து விடுவோம்.. ஆனால் இந்த பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பிஞ்சுக்குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்.. நிம்மதியை தொலைத்த அந்த குடும்பத்தின் அடுத்த கட்ட நகர்வுகளில் ஏற்படும் வலி என்ன என்பதை நம்மால் எளிதில் உணர முடியுமா..? ‘நிசப்தம்’ படம் சொல்ல வருவதும் அதைத்தான்.

மிடில் கிளாஸ் தம்பதியான அஜய் – அபிநயா தம்பதியின் எட்டு வயதே நிரம்பிய மகள் சாதன்யா. ஒரு அடை மழை நாளில் பள்ளிச் செல்லும் அந்த சிறுமி ஒரு காமக்கொடூரனால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறாள். அதன்பின் வரும் நாட்களில் அப்பாவே என்றாலும் ஆண்களைக் கண்டால் அய்யோ அம்மா.. என அலறும் நிலைக்குத் தள்ளப்படும் சாதன்யா அந்த துயரத்தில் இருந்து மீண்டாரா? அதற்கு மருத்துவமும், பெற்றோரின் பாசமும் எப்படி துணை நிற்கிறது..? குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைத்தது என பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்தப்படம்..

பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமியின் மனநிலையை சிறுமி சாதன்யா, அந்த கதாபாத்திரமாகவே மாறி கேரக்டரை உள்வாங்கி மிகச்சரியாக செய்திருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸில், கொடூரனை கோர்ட்டில் கொலை செய்ய ஓடும் தன் அப்பாவை தடுத்து “அப்பா வேணாம்பா நீங்க வேணும்ப்பா… நீங்க இருந்தா போதும்ப்பா..” என்று கதறும் காட்சிகளில் நம்மை உலுக்கி எடுத்து விடுகிறார் சிறுமி சாதன்யா.

சிறுமியின் தந்தையாக தனது குழந்தை பாலியல் துன்பத்துக்கு ஆளான பிறகு, ஒரு தந்தையாக அக்குழந்தையை சகஜ நிலைக்கு கொண்டு வர போராடும் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார் நாயகன் அஜய். சிறுமியின் தாயாக அபினயா தனது திறமையான நடிப்பால் ஒரு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாக பதற வைத்திருக்கிறார்.

நிறைய காட்சிகள் இல்லாவிட்டாலும் கூட உதவி ஆணையராக வரும் கிஷோர், நேர்மையான போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டியிருக்கிறார். ஆனாலும் ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்ததற்காக கிஷோருக்கும் பாராட்டுக்கள் சென்று சேரத்தான் வேண்டும். சிறுமியின் மனநிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் மருத்துவர் ருதுவின் பாத்திரமும் அதில் அவரது பங்களிப்பும் கச்சிதம்.

சிறுமிக்காக வாதாடும் வக்கீலாக வரும் ஏ.வெங்கடேஷ், நாயகனுடைய நண்பராக வரும் பழனி மற்றும் அவருடைய மனைவியாக வரும் ஹம்சா உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். சமீபகாலமாக இதுபோன்ற பாலியல் வன்முறைகள் தமிழகத்திலும் தலைதூக்கியிருக்கும் வேளையில், இதை இயக்கியுள்ள இயக்குனர் மைக்கேல் அருண் கவனிக்க வைத்திருக்கிறார்

குறிப்பாக ஒரு விழிப்புணர்வு படமாகவும், அதேசமயம் தவிர்க்க இயலாமல் இப்படி சம்பவங்களை எதிர்கொள்ளும் குழந்தைகளின் பெற்றோர்கள் நிதானமாக வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு நகரவேண்டிய அவசியத்தையும் இந்தபடத்தில் மிக ஆழமாக பதிவுசெய்திருக்கிறார் மைக்கேல் அருண்

குடும்பத்தினர் அனைவரும் இந்தப்படத்தை பார்ப்பது அவர்களின் விழிப்புணர்வையும் எச்சரிக்கை உணர்வையும் அதிகரிக்கும் என்பதே இந்தப்படத்தின் வெற்றியாக கருதப்படும்..