ஓ மை கடவுளே – விமர்சனம்


படத்தின் நாயகன் அசோக் செல்வனும் ரித்திகா சிங்கும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். அவர்கள் இருவரும் வளர்ந்து வாலிப வயதை அடைந்த பின்பும் அவர்களுக்கிடையேயான நட்பு தொடர்கிறது. இந்நிலையில் ரித்திகா சிங் நண்பனாக இருக்கும் அசோக் செல்வன் கணவராக வந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கருதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அசோக் செல்வனிடம் கேட்கிறார். நாயகன் அசோக் செல்வனும் ஒரு சிறு தயக்கத்துடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் நேரத்தில் இவர்களது வாழ்வில் குறுக்கிடுகிறார் அசோக் செல்வனின் இன்னொரு சிறுவயது தோழியான வாணி போஜன்.

அசோக் செல்வனும் வாணி போஜன் நெருங்கி பழகுவது நாயகி ரித்திகா சிங்கிற்கு பிடிக்கவில்லை. மேலும் வாணி போஜன் அசோக் செல்வனை விட இரண்டு வயது மூத்தவர்.

இதனால் அசோக் செல்வனுக்கும் ரித்திகா சிங்குக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு விரிசல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ரித்திகா சிங் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்.

இதனால் மன உளைச்சலில் இருக்கிறார் நாயகன் அசோக் செல்வன். அப்போது அவர் முன்பு தோன்றுகின்றனர் கடவுளான விஜய் சேதுபதியை ரமேஷ் திலக்கும்.

அப்போது யாரிடமும் சொல்லக்கூடாது என்கிற நிபந்தனையுடன் அசோக் செல்வனுக்கு இன்னொரு வாழ்க்கை தருகின்றனர். அந்த வாழ்க்கையில் ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் ஆகிய இருவருடனும் பழகுகிறார் அசோக் செல்வன். இறுதியில் யாரை திருமணம் செய்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

இரண்டு பெண்களிடம் சிக்கி தவிக்கும் நாயகனாக அசோக் செல்வன் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார். வெகுளியான தோழியாகவும் திருமணத்திற்கு பின் கணவரை சந்தேகப்படும் மனைவியாகவும் கதாபாத்திரத்துடன் பொருந்தியிருக்கிறார் நாயகி ரித்திகா சிங்.

கடவுள்களாக வரும் விஜய் சேதுபதியும், ரமே‌‌ஷ் திலக்கும் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியிருக்கின்றனர்.

பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஒரு காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து.

மொத்தத்தில் காதல் கலாட்டாவாக வெளிவந்துள்ளது ‘ஓ மை கடவுளே’.