ஒரு அடார் லவ் ; விமர்சனம்


பள்ளி மாணவர்கள் காதலை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம். மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்த படம், அதில் காதானயகியாக நடித்திருந்த பிரியா பிரகாஷ் வாரியரின் திடீர் புகழ் காரணமாக, தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

மாணவன் ரோஷனுக்கு பிளஸ் ஒன் படிக்கும்போதே உடன் படிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் மீது காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஒரு சர்ச்சையான விஷயம் ஒன்றில் சிக்கி ரோஷன் அவமானப்பட, அதன் காரணமாக கோபத்தில் அவருடனான காதலை முறித்துக் கொள்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர்.

அவரை மீண்டும் தன்னிடம் வர வைப்பதற்காக தனது தோழி நூரின் ஷெரீப்புடன் சேர்ந்து காதல் நாடகம் ஆடுகிறார் ரோஷன். அவர் எதிர்பார்த்தது போலவே உண்மை உணர்ந்து பிரியா திரும்பி வருகிறார். அதேசமயம் இந்த காதல் நாடகத்தால் உண்மையாகவே நூரின் மேல் காதல் வசப்படுகிறார் ரோஷன். இறுதியில் யாரை காதலியாக ஏற்றுக்கொண்டார் என்பதுதான் கிளைமாக்ஸ்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருந்தாலும் புதுமுகங்கள் என்பதால் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.. அதேசமயம் ஹைடெக்கான பள்ளியில் படிக்கும் மாணவர்களின் காதல் என்பதால் அதில் பெருமளவு நம்மால் ஒன்ற முடியவில்லை..

படம் வெளியாவதற்கு முன்பே பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியரை இதில் படம் முழுவதும் பார்க்கும்போது ஏனோ டல் ஆகவே தெரிகிறார்.. அதேசமயம் படத்தில் இன்னொரு கதாநாயகியாக வரும் நூரின் ஷெரீப் எதிர்பாராதவிதமாக நம் மனதை கொள்ளை கொள்கிறார்.

விடலைப் பையன் கேரக்டருக்கு ரோஷன் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.. இருந்தாலும் நடிப்பு கொஞ்சம் ஏனோ தானோ என்றுதான் இருக்கிறது.

உடன் வரும் நண்பர்கள் எல்லாமே காதல் காதல் என அலைவதை பார்க்கும்போது இப்படி ஒரு பள்ளி எங்கே இருக்கிறது என கேள்வி கேட்க வைக்கிறது. இதை இயக்குனர் கவனித்து சில நல்ல விஷயங்களையும் உள்ளே புகுத்தி இருக்கலாம்

முழுவதும் பள்ளியில் நடைபெறும் என்பதும் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆனாலும் நூரின் மற்றும் பிரியா இருவரும் நம்மை சோர்வடைந்து விடாமல் காப்பாற்றுகிறார்கள். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்திற்கு சம்பந்தமே இல்லாத, தேவை இல்லாத ஒன்று.. இதை ஏன் இந்த படத்தில் வைத்தார் என்பது இயக்குனர் ஓமர் லுலுவுக்கே வெளிச்சம்.

ரிலீஸாவதற்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டதாலோ என்னவோ, அந்த அளவுக்கு அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல் திணறி இருக்கிறது இந்த படம்

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *