ஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்


ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளரான ரசூல் பூக்குட்டி கதையின் நாயகனாக, அவரது நிஜ கதாபாத்திரமாகவே நடித்துள்ள படம்தான் ஒரு கதை சொல்லட்டுமா. மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் உற்சவத்தை போல கேரள மாநிலம் திருச்சூரில் மிக பிரபலமான திருச்சூர் பூரம் திருவிழாவும் அதன் பின்னணியில் நடக்கும் நிகழ்வுகளும் தான் இந்த படத்தின் கதை.

படங்களுக்கு ஒலி வடிவமைப்பதில் பிஸியாக இருக்கும் ரசூல் பூக்குட்டிக்கு திருச்சூர் பூரம் திருவிழாவின் இயல்பான செண்டை மேள, மங்கள வாத்திய, பாரம்பரிய இசையை துல்லியமாக பதிவு பண்ண வேண்டும் என்பது நீண்டநாள் லட்சியம். அதேசமயம் இதை வியாபாரமாக்கி லாபம் சம்பாதிக்கும் திட்டத்துடன் ரசூல் பூக்குட்டியின் நண்பர் மூலமாக அவரை அணுகுகிறார் தயாரிப்பாளரான ஜாய் மேத்யூ. நட்புக்காக வேறுவழியின்றி அவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, திருச்சூர் பூரம் நிகழ்வை வீடியோ மற்றும் ஆடியோ வடிவில் கொடுப்பதற்கு ஒப்புக்கொள்கிறார் ரசூல் பூக்குட்டி.

பார்வையிழந்த இசையமைப்பாளர் ஒருவரும் இந்த நிகழ்ச்சியில் இணைந்து கொள்கிறார். ஆனால் நாளுக்கு நாள் ஜாய் மேத்யூவின் அடாவடிகள் எல்லை மீறவே கோபமான ரசூல் பூக்குட்டி இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற முடிவு செய்கிறார் ஆனால் சட்டப்படி அது முடியாது என ரசூலை மிரட்டுகிறார் ஜாய் மேத்யூ. அதேநேரம் இன்னொரு பக்கம் ஆயிரக்கணக்கான பார்வை இழந்தவர்கள் இந்த திருச்சூர் பூரம் திருவிழாவை ஒலி வடிவில் கேட்டு மகிழ ஆவலாக இருப்பது ரசூல் பூக்குட்டிக்கு தெரியவருகிறது.

இதனால் தனது கோபத்தை கைவிட்டு திட்டமிட்டபடி திருவிழாவின் இசையை ஒலிப்பதிவு செய்யும் வேலைகளில் இறங்குகிறார் ரசூல். ஆனால் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய பிரச்சனை ஒன்று குறுக்கிட்டு அவரது லட்சியத்தையே சிதைக்க முற்படுகிறது. அது என்ன சிக்கல்..? ரசூலால் அதை சமாளிக்க முடிந்ததா..? திட்டமிட்டபடி ஒலிப்பதிவை முடித்தாரா என்பது கிளைமாக்ஸ்.

இசையமைப்பாளர்கள் ஹீரோவானது போக தற்போது ஒலி வடிவமைப்பாளர்கள் கூட நடிக்க வந்துவிட்டார்களே என சாதாரணமாக நினைக்க வேண்டாம். ஒரு சரியான கதையுடன் புதிதாக எந்த கேரக்டரையும் உருவாக்காமல் தனது நிஜ கதாபாத்திரத்தையே இந்த கதைக்குள் அழகாக நுழைத்துக்கொண்டு உள்ளார் ரசூல் பூக்குட்டி. அதனால் அவரை ஒரு கதாபாத்திரமாகவே நம்மால் எளிதாக ரசிக்க முடிகிறது. தன்னுடைய தொழில்துறையில் ஏற்படும் சங்கடங்களையும் எரிச்சல்களையும் சந்தோசங்களையும் ஒவ்வொரு காட்சியிலும் வெகு இயல்பாக பிரதிபலிக்கிறார் ரசூல் பூக்குட்டி.

கதையில் கிட்டத்தட்ட வில்லன் என சொல்லும் வகையில் தயாரிப்பாளராக வரும் ஜாய் மேத்யூ இசையைக் கூட வியாபாரமாக நினைக்கும் மனோபாவத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். பார்வை தெரியாத அந்த இசையமைப்பாளராக வரும் நபர் காட்சிக்கு காட்சி விதம் விதமான முகபாவனைகளால் நம்மை வசியப்படுத்தி விடுகிறார். ஜே மேத்யூ பக்கமிருக்கும் ஆட்களாகட்டும், ரசூல் பூக்குட்டிக்கு உதவி செய்யும் நபர்கள் ஆகட்டும் அனைவருமே பாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர்.. திருச்சூர் பூரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்த திருவிழாவுக்கு நாமேவ் நேரில் சென்றுவந்தது போன்ற ஒரு அற்புதமான உணர்வை ஏற்படுத்துகின்றன.

அதற்கு மிக முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் அனியன் சித்ரசாலா மற்றும் நீல் டி க்யூமா ஆகியோரின் ஒளிப்பதிவும் ஷரத்தின் பின்னணி இசையும் தான். ராகுல்ராஜின் இசையில் பாடல்களும் இனிமையாக இருக்கின்றன.

ஒரு திருவிழாவின் பிரம்மாண்டத்தையும் அதை நேர்த்தியையும் அதன் இசை பாரம்பரியத்தையும் மிக அழகாக ஒரு சுவாரசியமான திரைப்படமாக மாற்றியுள்ளார் இயக்குனர் பிரசாத் பிரபாகர். ஒரு தயாரிப்பாளர் என்கிற நிலையிலும் சேர்த்து அவரை தாராளமாக பாராட்டலாம்

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *