பகிரி – விமர்சனம்


இன்றைய தேதியில் சமூகத்தின் மேல் அக்கறையுள்ள சாதாரண மக்களை அச்சுறுத்தும் விஷயங்கள் இரண்டு… ஒன்று அழிந்துவரும் விவசாயம்.. மற்றொன்று அழிய மறுக்கும் மதுக்கடை.. இந்த இரண்டு பிரச்சனைகளையும் ஒன்றிணைத்து ‘பகிரி’ படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்..

விவசாயத்தையே உயிர்மூச்சாக நினைக்கும் தந்தைக்கு, அதற்கு நேரெதிரான குணமுள்ள மகனாக பிரபு ரணவீரன்.. தந்தையின் பிடிவாதத்திற்காக விவசாய படிப்பு படித்திருந்தாலும் கூட, ‘நாஸ்மாக்’கில் (டாஸ்மாக் தாங்க) சூப்பர்வைசர் வேலைக்கு சேர்ந்துவிடவேண்டும் என்பது ஆசை.. இல்லையில்லை லட்சியம் என்றே சொல்லலாம். காரணம் அதுவும் அரசாங்க வேலைதானே என்பது அவரது வாதம்.

அதன் முதல் படியாக பாரில் சப்ளையராக வேலைக்கு சேர்கிறார் ரணவீரன். தனது சித்தப்பா மாரிமுத்து மூலமாக அரசியல்வாதியை பிடித்து நாஸ்மாக் சூப்பர்வைசர் வேலைக்கு முயற்சி செய்ய, அவரோ போஸ்டிங் போட எட்டு லட்ச ரூபாய் கேட்கிறார்.. ஆனால் விவசாயியான ரணவீரனின் தந்தையோ மகன் அந்த வேலைக்கு போவதை விரும்பாததோடு, அந்தப்பணத்திற்காக நிலத்தை விற்கச்சொல்லும் மகனையும் வீட்டைவிட்டு துரத்துகிறார்.

இந்த நிலையில் மாவுக்கடை நடத்தும் ஏ.வெங்கடேஷின் மகளான ஷார்வியாவுடன் ரணவீரன் காதலில் விழ, இவரது வேலைக்கு தேவைப்படும் பணத்தை ஷார்வியாவும் அவரது அம்மாவும் தருகிறார்கள்.. மேலும் நாஸ்மாக் கடை வைக்க ஊருக்குள் இடம் கிடைக்காத நிலையில் தங்களது வீட்டையே கதைக்காக விட்டுத்தருகிறார்கள். இந்தநிலையில் தான் அரசாங்கத்தின் அதிரடியான உத்தரவு ஒன்று வருகிறது.. அது என்ன…? அதனால் யாருக்கு என்ன பாதிப்பு என்பது க்ளைமாக்ஸ்.

குடியால் மக்கள் ஒரு பக்கம் அழிவை தேடிக்கொண்டிருக்க, அரசுவேலை என்கிற பகட்டால் விவசாயத்தை இளைஞர்கள் புறக்கணிக்க இதன் தீவிரத்தை சொல்லவந்திருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன், அனால் கொஞ்சம் ரூட் மாறி, டாஸ்மாக் கடையில் வேலைக்கு சேர விரும்புவன், அங்கே வேலைபர்ப்பவன் சந்திக்கும் சவால்களை கதைகதையாக சொல்லியிருக்கிறார். கூடவே அவ்வப்போது விவசாயம் பற்றிய விழிப்புணர்வு தண்ணீரை தெளித்துவிட்டு, கதைச்செடி வாடாமல் பார்த்துக்கொள்ள முயன்றிருக்கிறார். அதற்காவே அவரை நாம் பாராட்டலாம்

கதை என்ன கேட்கிறதோ அதற்கான பொருத்தமான நாயகனாக தெரிகிறார் பிரபு ரணவீரன்.. நாஸ்மாக் ஆரம்பித்த காலத்தில் அங்கே வேலை வாங்குவதற்கு படித்த ஒவ்வொரு இளைஞனும் எப்படி அலைந்திருப்பான், அதை தக்கவைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்திருப்பான் என்பதை நம் கண் முன்னால் நிறுத்துகிறார்..

நாயகி ஷார்வியா துறுதுறு பெண்ணாக அசத்துகிறார்.. அவருக்கும் அவரது அம்மாவுக்குமான கெமிஸ்ட்ரி கலக்கல் தான் போங்கள்.. இருவரும் சேர்ந்து வீட்டு மாப்பிள்ளையாக போகிறவருக்காக ஒயின்ஷாப் வைக்க இடம் தேடுவது சூப்பருங்க.. அதிலும் அந்த அம்மா கேரக்டரை ரவிமரியா ரவுண்டு கட்டுவது, அதற்கு அவரது கணவரான ஏ.வெங்கடேஷையே துணைக்கு வைத்துக்கொள்வது என காமெடியில் ஒரு புது ரூட்டை பிடித்திருக்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி அந்த அம்மா கேரக்டர் ‘செம’..

அரசியல்வாதியான டிபி.கஜேந்திரன் 3 சிம் கார்டு போட்டு பேசும்போது கலகலப்பூட்டுகிறார்.. உள்ளூர் அரசியல்வாதியான ராஜனின் தந்திரம், அவரது வலது கையாக வரும் மாரிமுத்துவின் சாதுர்யம் எல்லாமே ரசிக்க வைக்கின்றன.. ‘நாஸ்மாக்கிற்கு இடம் தேடச்சொல்லும் அந்த அதிகாரி கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு சில அரசியல் கட்சிகளை, ஒரு சில பிரபல அரசியல்வாதிகளை மறைமுகமாக நக்கல், நய்யாண்டி, விமர்சனம் செய்து படமாக்கியுள்ள விதம் ரசிக்க முடிகிறது. மது விலக்கு விஷயத்தில் அரசியல் கட்சிகளுக்குள் இருக்கிற சுயநல விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதுடன், மதுபான கடைகள் மூலம் வருமானத்தைப் பெருக்க அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை, அதிலிருக்கிற லஞ்ச லாவண்யங்களை புட்டுப்புட்டு வைத்திருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.. ஆனால் ‘பகிரி’ என்கிற தலைப்புதான் கதைக்கு பொருந்தவே இல்லை. அதேபோல திரைக்கதையை சற்று மாற்றியிருந்தால் மக்களிடம் விவாதத்திற்குரிய படமாக மாறியிருக்கும்.