பஞ்சராக்ஷரம் – விமர்சனம்


பஞ்சராக்ஷரம் என்ற படத்தின் தலைப்பிற்கேற்ப படம் ஐவரை மையமாக வைத்து நகர்கிறது. அதே போல் நீர், நெருப்பு, காற்று, வானம், பூமி ஆகிய ஐம்பெரும் பூதங்களை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி வைரமுத்து.

சந்தோஷ் பிரதாப் (வானம்) ஆராய்ச்சியாளர், கோகுல் (தீ) இசைக்கலைஞர், அஸ்வின் ஜெரோமி (பூமி) பந்தய வீரர், நாயகியாக வரும் மதுஷாலினி (காற்று) எழுத்தாளர், சனா அல்டாப் (நீர்) மனிதாபிமான பெண் ஆகிய ஐவரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள்.

இவர்கள் ஐந்து பேரும் ஒரு திருமண விழாவில் சந்தித்து நட்பாகிறார்கள். விழாவில் இருந்து ட்ரிப் செல்லும் இவர்களுக்கு பஞ்சராக்ஷரம் என்ற புத்தகம் கிடைக்கிறது.

இந்த புத்தகத்தை படிக்கும் இவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அது என்ன பிரச்சனை? அதை ஐந்து பேரும் எப்படி சமாளித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். அதனால் நல்லதே நினைப்போம். என்ற கருத்தை வலியுறுத்தி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர். நல்லவர்களிடம் ஒரு கெட்டதும், கெட்டவர்களிடமும் ஒரு நல்லதும் இருக்கும் என்ற எதார்த்தத்தை சொல்லியிருப்பது சிறப்பு.

படத்திற்கு பெரிய பலம் சுந்தர மூர்த்தியின் இசை. இவரின் பின்னணி இசையோடு யுவாவின் ஒளிப்பதிவோடு படத்தை பார்க்கும் போது திரில்லிங்கான உணர்வு கொடுக்கிறது.

மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக வெளிவந்திருக்கிறது இந்த ‘பஞ்சராக்ஷரம்’.