பாரிஸ் ஜெயராஜ் – விமர்சனம்

ஏ-1 என்கிற வெற்றிப்படத்தை கொடுத்த சந்தானம்-ஜான்சன் கூட்டணியின் அடுத்த படம் தான் இந்த பாரிஸ் ஜெயராஜ்

கானா பாட்டு பாடுவதையே புல்டைம் வேலையாக செய்து வருபவர் சந்தானம். அவரது அப்பா பிருத்விராஜ் ஒரு வக்கீல். கல்லூரிக்கு கானா பாடப்போன இடத்தில் அனைகா சோட்டியின் மீது காதலாகிறார் சந்தானம். காதலுக்கு பிரச்சனையே இல்லாமல் கைகூடப்போகும் சமயத்தில் வில்லனாக வந்து நிற்கிறார் சந்தானத்தின் அப்பா.. ஏனென்றால் சந்தானத்தின் காதலிக்கும் அவர்தான் தந்தை.. அப்படியானால் சந்தானத்தின் காதல் என்ன ஆனது ?

எவ்வளவு ட்ராபிக் இருந்தாலும் நடைபாதையில் மட்டும் ப்ரீயாக நடந்து செல்ல முடியும் அல்லவா, அதுபோலத்தான் சந்தானத்துக்கென செட்டாகும் கதை, கதாபாத்திரம், ஒன்லைன் பஞ்ச் என இந்தப்படத்திலும் பாதுகாப்பான பயணம் மேற்கொண்டுள்ளார் சந்தானம். இதிலும் தந்தையையே கலாய்ப்பது, நண்பர்களை வாருவது என எதிலும் குறை வைக்கவில்லை. சிரிக்க வைக்கவும் தவறவில்லை.

சந்தானத்தின் காதலியாக, இல்லையில்லை சகோதரியாக நடித்திருப்பதால் என்னவோ, அவருக்கும் அனைகா சோட்டிக்கும் மீட்டரை தாண்டாத காதல் காட்சிகள் மற்றும் வசனங்களை வைத்துள்ளார்கள் என்றே தெரிகிறது. வழக்கான அப்பாவி காதலியாக அனைகா ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறார்.

சந்தானத்தின் தந்தையாக வரும் பிருத்விராஜ், யார்யா இந்த மனிதர், இத்தனை நாளா எங்கிருந்தார் என கேட்கும் விதமாக சந்தானத்துக்கு இணையாக படத்தை தாங்கி பிடிக்கிறார். மொட்ட ராஜேந்திரனின் பழிவாங்கும் படலமும் ரசிக்க வைக்கிறது..

சந்தோஷ் நாராயணனின் இசையில் கானா பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. சிரிக்க வைப்பது என முடிவெடுத்து விட்டதால், சந்தானத்தின் தந்தைக்கு மட்டுமல்ல, இடைவேளைக்குப்பின் ரசிகர்களின் தலையிலும் டென்சனை ஏற்றி, ஆனால் அதையும் சிரித்து ரசிக்கும்படி செய்திருக்கிறார் இயக்குனர் ஜான்சன்.

ஜாலியாக சிரிக்க சந்தானம் படத்துக்கு போ என மீண்டும் ஒருமுறை தாராளமாக சொல்லலாம். ,February 14, 2021 11:32 PM