பட்டாஸ் – விமர்சனம்

படத்தின் நாயகன் தனுஷ் ஒரு குப்பத்து பகுதியில் வாழ்ந்து வருகிறார். சின்ன சின்ன திருட்டுகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் தனுஷ். நாயகன் தனுஷ் வசிக்கும் அதே பகுதியில் வசித்து வருகிறார் மெஹரின் பிர்சாடா. நாயகி அதிகமாக சம்பாதிப்பதால் அந்த ஏரியாவிலேயே அதிகமாக அராஜகம் பண்ணி வருகிறார். இவருடைய ஆட்டத்தை அடக்க திட்டம் போடுகிறார் தனுஷ். அவர் எங்கு வேலை செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள முனைகிறார் நடிகர் தனுஷ். கிக் பாக்ஸிங் கிளப் ஒன்றில் நாயகி மெஹரின் பிர்சாடா பணிபுரிவதை தெரிந்து கொள்கிறார். இந்த கிக்பாக்ஸிங் கிளப்பை நவீன் சந்திரா நடத்திவருகிறார்.

கிக் பாக்ஸிங் கிளப்பிற்கு செல்கிறார் நடிகர் தனுஷ். அங்கே இருக்கும் பொருள்களை திருடி அந்த பழியில் நாயகி மெஹரின் பிர்சாடாவை சிக்க வைக்கிறார் தனுஷ். இதனால் மெஹ்ரினின் வேலைக்கு ஆபத்து வருகிறது. ஒரு கட்டத்தில் தனுஷிடம் கிக் பாக்ஸிங்கில் இருக்கும் சர்ட்டிபிகேட் ஒன்றை எடுத்து வரும்படி மெஹ்ரின் உதவி கேட்க, அவரும் அங்கு செல்கிறார்.

இந்நிலையில் ஜெயிலில் இருந்து வரும் சினேகா கிக் பாக்ஸ் கிளப்பின் உதவியாளர் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். அப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இந்த தீ விபத்தில் இருந்து சினேகாவை காப்பாற்றுகிறார் தனுஷ். தனுசை பார்த்த சினேகா அதிர்ச்சி அடைகிறார்.

தனுஷை பார்த்த சினேகா ஏன் அதிர்ச்சி அடைந்தார்? நவீன் சந்திராவை ஏன் கொலை செய்ய முயற்சி செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் நடிகர் தனுஷ். தந்தை மகன் என்று நடிப்பில் வித்தியாசத்தை காட்டி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளார் தனுஷ். முதற்பாதியில் கலகலவென்று நகைச்சுவையில் அசத்தி இருக்கும் நடிகர் தனுஷ் படத்தின் இரண்டாம் பாதியில் அடிமுறை என்னும் தற்காப்புக் கலையை சொல்லித்தரும் ஆசானாக ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளார்.

சினேகா தனது நடிப்பில் மட்டுமல்லாமல் சண்டைக் காட்சியிலும் அசத்தியுள்ளார்.

மற்றொரு நாயகி மஹரின் பிர்சாடா கொடுத்த வேலையை கனகச்சிதமாக செய்துள்ளார். அழகு பதுமையாக வந்து செல்கிறார். முனீஸ்காந்த்தின் காமெடி படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. நவீன் சந்திராவின் வில்லத்தனம் ரசிகர்களை மிரள வைக்கிறது.

அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில் குமார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். நம்மிடம் இருந்து தோன்றிய கலைகள் பிரிந்து வேறொரு பெயரில் உருவாகி பிரபலமாகி இருக்கிறது. நம்மிடம் இருக்கும் கலையை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சொல்லிய இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும்.

விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் ஓம் பிரகாஷின் கேமரா சிறப்பாக விளையாடி இருக்கிறது.

மொத்தத்தில் பட்டாஸ் சிறப்பான வெடி.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *