பிச்சுவாகத்தி – விமர்சனம்


இனிகோ பிரபாகர், ரமேஷ் திலக், யோகிபாபு மூவரும் தண்ணி அடிப்பதற்காக ஆடு திருடி மாட்டிக்கொண்டு போலீஸில் சிக்குகிறார்கள். ஒரு மாதம் கும்பகோணம் போலீஸ் ஸ்டேஷனில் தினசரி கையெழுத்து போடவேண்டும் என தண்டனை விதிக்கப்பட அதற்காக அங்கேயே தங்குகிறார்கள்.. ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்ய, அந்தப்பணத்திற்காக ஒரு பெண்ணின் செயினை திருடப்போய் அதிலும் மாட்டுகிறார்கள். ஒருவழியாக சேட்டு ஒருவரிடம் பணத்தை அடித்து இன்ஸ்பெக்டர் கணக்கை செட்டில் செய்கிறார்கள்.

ஆனால் இன்ஸ்பெக்டரோ அவர்களை விடுவதாக இல்லை.. ஊரில் இருக்கும் பிரபல ரவுடி ஆர்.என்.ஆர்.மனோகரின் திட்டத்திற்கு உதவ கையாட்களாக இந்த மூவரையும் அனுப்புகிறார். வேண்டாவெறுப்பாக மனோகரிடம் சென்றாலும், அவர் கொடுக்கும் வேலைகளை கச்சிதமாக் செய்து கொடுத்து கிட்டத்தட்ட அவரது வலது கையாகவே மாறி கும்பகோணத்தில் ரவுடியாகவும் பார்ம் ஆகிறார்கள்.. அதேசமயம் இன்னொருபக்கம் தங்களை செயின் திருட்டில் மாறிவிட்ட பெண்ணை பழிவாங்கவேண்டும் என துரத்துகிறார்கள்.

இந்நிலையில் ஒரு மாத தண்டனை காலம் முடிந்ததும், அனைத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப முயற்சிக்கிறார்கள்.. ஆனால் ரவுடியும் போலீஸ்காரரும் இவர்களை விட மறுக்கிறார்கள். கடைசி நாளில் கையெழுத்துப்போட வந்தபோது, ஏதேச்சையாக தனது காதலனுடன் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைய வந்தநிலையில் இவர்களிடம் சிக்குகிறாள் அந்த பெண்.. அந்த பெண்ணை பழிவாங்கினார்களா..? இல்லை நல்லபிள்ளையாக ஊர் திரும்பினார்களா..? போலீசும் ரவுடியும் இவர்களை சும்மா விட்டார்களா என பல கேள்விகளுக்காகன விடைகள் சொல்கிறது க்ளைமாக்ஸ்.

வேலைவெட்டிக்கு போகாமல், தண்ணியடித்துக்கொண்டு ஜாலியாக சுற்றும் இளைஞர்கள் ஒரு சாதாரண வழக்கில் போலீஸ் ஸ்டேஷனில் கால் வைத்தால், அவர்கள் வாழ்க்கை எப்படி திசைமாறி போய்விடுகிறது என்பதை விசாரணை பாணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

இனிகோ, ரமேஷ் திலக், யோகிபாபு டீம் கலகலப்பும் கலாட்டவுமாக செமையாக செட்டாகி இருக்கிறது. யோகிபாபு காட்சிக்கு காட்சி ஓலைப்பட்டாசுகளை கொளுத்தி போட்டுக்கொண்டே நம்மை சிரிக்க வைக்கிறார். ஓபனிங் சீனில் வரும் அந்த கபடி விளையாட்டில் அதகளம் பண்ணுகிறார் யோகிபாபு.

கதாநாயகியாக ஸ்ரீபிரியங்கா.. காதல் காட்சிகளில் குறும்பை காட்டும் அதேசமயம், சோக காட்சிகளில் மனதை கசியவும் வைக்கிறார் படத்தில் இன்னொரு ஜோடியாக வரும் செங்குட்டுவன்-அனிஷா கேரக்டர்கள் படம் முழுதும் நம்மை சோதிக்கின்றனர்.. அவர்களது எபிசோடில் நம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவது பாலசரவணனின் காமெடி தான் காலி வெங்கட் ஜஸ்ட் லைக் தட், எம்.எல்.எம் பிச்னசை தோலுரித்து காட்டிவிட்டு கழன்று கொள்கிறார்.

கெட்ட போலீஸ் அதிகாரிக்கென்றே நேர்ந்துவிடப்பட்டவர் போல படத்துக்குப்படம் நிஜ போலீஸ்காரராகவே மாறிவிட்டர் சேரன் ராஜ், இதிலும் சோடைபோகவில்லை.. ரவுடி தலைவராக வழக்கம்போல் ஆர்.என்.ஆர்.மனோகர் மிரட்டலான நடிப்பு. எதிரிகளுக்கு வில்லனாக வந்தாலும் கலகலப்பூட்டுகிறார் நான் கடவுள் ராஜேந்திரன்.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். சுபாவத்தில் நல்லவர்களாக இருக்கும் நண்பர்கள் மூவரும் சூழ்நிலைக்காக திருடுவதை நானம் ஒப்புக்கொண்டாலும், அதன்பின் அவர்கள் ரவுடிகளாக மாறுவதும், நகை வழக்கில் தங்களை சிக்கவைத்த பெண்ணை கொலைசெய்யும் அளவுக்கு துணிவதெல்லாம் ஏற்புடையதாக இல்லை..

ரெகுலர் செயின் திருடர்களாக இருந்தால் தங்களை மாட்டிவிட்ட பெண்ணை பழிவாங்கும் எண்ணம் தலைதூக்குவது இயல்பு.. நல்லவர்களாக இருக்கும் இவர்களுக்குள் அந்த குரூர என்னத்தை இயக்குனர் தவறாக விதைத்து, இவர்களது கேரக்டர்களை சிதைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

அதேபோல எம்.எல்.ஏவையே போட்டுத்தள்ள துணியும் இவர்களுக்கு தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய, தொடர்ந்து வற்புறுத்துகிற போலீஸ் இன்ஸ்பெக்டரை போட்டுத்தள்ளுவதா கஷ்டம்.. ஆனால் அதை செய்யாமல் அப்பாவி பெண்ணை துரத்துவதை எல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை.

பிச்சுவாகத்தி – எப்படி பிடித்தாலும் நம் கையையும் கொஞ்சம் பதம் பார்க்கவே செய்கிறது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *