பொதுவாக என்மனசு தங்கம் – விமர்சனம்


புகழ் போதைக்கு அடிமையானவர் பார்த்திபன். பக்கத்து ஊர் கோவிலில் தன்னை அவமதித்துவிட்டார்கள் என்பதற்காகவே அந்த ஊரில் இருக்கும் பலருக்கு நல்லது செய்வதாக கூறி தூரத்து நகரங்களுக்கு வேலை வாங்கி தந்து அனுப்பி வைக்கிறார் பார்த்திபன். இதனால் அந்த ஊரில் மக்கள் தொகை குறைகிறது. இதனை காரணம் காட்டி அந்த ஊருக்கு வரவேண்டிய அரசின் திட்டங்களை தனது ஊருக்கு மாற்றிக்கொள்கிறார் பார்த்திபன்.

சில வருடங்களுக்கு பிறகு இளைஞனாக வளரும் உதயநிதி தனது ஊர் எந்த வசதியும் இல்லாமல் இருப்பது கண்டு சில நல்ல முயற்சிகளில் இறங்குகிறார். இருந்தாலும் அவை ஊராரின் கோபத்திற்கே அவரை ஆளாக்குகின்றன.

இந்தநிலையில் பார்த்திபனின் தங்கையை ஏழை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதையும், அதன் காரணமாக தனது தங்கை வசிக்கும் ஊர் என்பதால் தனது சொந்தப்பணத்தை செலவழித்து அந்த ஊருக்கு பார்த்திபன் வசதிகள் செய்து கொடுத்ததும் உதயநிதிக்கு தெரிய வருகிறது.

அதனால் பார்த்திபன் மகளாகிய நிவேதாவை தான் திருமணம் செய்துகொண்டால், தனது ஊருக்கும் அதே வசதிகள் கிடைக்குமே என நினைத்த உதயநிதி, நிவேதாவை கொஞ்சம் கொஞ்சமாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார்.

பார்த்திபனுக்கு இந்த விஷயம் தெரியவர இப்போது இருவருக்குமான சதுரங்க ஆட்டம் ஆரம்பிக்கிறது. இதில் வெற்றி யாருக்கு என்பது க்ளைமாக்ஸ்.

இதுவரை நகரத்து இளைஞனாகவே வலம்வந்துகொண்டிருந்த உதயநிதி பக்கா கிராமத்து இளைஞனாக உருமாறி இருக்கிறார். முறுக்கு மீசையுடன், அவரது பாடி லாங்குவேஜும் இதில் டோட்டலாக மாறி இருக்கிறது. தனது கிராமத்துக்கு நல்லது செய்வதற்காக சூரியுடன் அவர் சேர்ந்து அடிக்கும் கலாட்டாக்கள் செம அலப்பறை. பார்த்திபனுக்கும் அவருக்குமான மோதலை வெகு நாகரிகமாக கையாளும் காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார் உதயநிதி.

எந்த முக்கியத்துவமும் குறையாமல் இன்னொரு ஹீரோ ரேஞ்சிற்கு, டீசன்ட்டான வில்லனாக வரும் பார்த்திபன், படத்தில் கலகலப்பிற்கான பொறுப்பில் பாதி பங்கை எடுத்துக்கொள்கிறார். யாருக்கும் பாதிப்பில்லாமல் இப்படியும் வில்லத்தனம் பண்ண முடியும் என பார்த்திபனின் கேரக்டர் மூலமாக ஒரு புது அத்தியாயம் எழுதியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தளபதி பிரபு.

கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ்.. சராசரி கிராமத்துப்பெண் வேடத்தில் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். பார்த்திபன் இருக்கும்போது சூரி என்ன பண்ண முடியும் என நம்மை யோசிக்க விடாமல் பார்த்திபனையே அடிக்கடி கலாய்த்து செம அப்ளாஸ் அள்ளுகிறார் சூரி. பார்த்திபன் உதயநிதியிடம் பேசும்போது, ‘ஒரு காரை ஒன்பது காரா ஆக்கு.. நாலுபேருக்கு வேலை கொடு” என ஒரு புளோவில் அட்வைஸ் பண்ண, “அப்போ மீதி அஞ்சு கார் ட்ரைவர் இல்லாம சும்மா நிக்குமே” என பார்த்திபனுக்கே ரிவீட்டை திருப்புவது திருநெல்வேலிக்கே கொடுத்த அல்வா..

ரொம்ப நாட்கள் கழித்து ஒரு படம் முழுவதும் வரும் கேரக்டராக மயில்சாமியை பார்க்க முடிவது ஆச்சர்யம் பிளஸ் ஆனந்தம். பார்த்திபனின் ட்ரைவராக படம் முழுவதும் கொடுத்த வாய்ப்பை சோடையில்லாமல் பயன்படுத்தி இருக்கிறார் மனிதர். ‘மொட்ட ராஜேந்திரன்’ ஒரு காட்சியில் மட்டுமே வருவது கொஞ்சம் ஏமாற்றம் தான். விவேக் பிரசன்னா, உதயநிதியின் அம்மாவாக ரமா, நமோ நாராயணன், சன் டிவி பெரைரா உட்பட இன்னும் சிலரும் சரியான தேர்வென நிரூபிக்கிறார்கள்.

இமானின் இசையில் இதிலும் இரண்டு பாடல்கள் ஹிட்டாகும் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது. சூர்யாவின் ஒளிப்பதிவில் நூறு சதவீத கிராமத்து நேர்த்தி. இரண்டு கிராமங்களுக்கு இடையேயான குலசாமி பங்கீடு விஷயத்தை, எந்தவித கலவரமும் இல்லாமல் மிக அழகாக கையாண்டு நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் இயக்குனர் தளபதி பிரபு. குறிப்பாக பார்த்திபனின் கேரக்டரை அவர் வடிவமைத்த விதமும், வில்லத்தனத்தை இப்படி பாசிட்டிவாகவும் பண்ணலாம் என காட்டிய விதமும் அவரது ‘மாத்தி யோசி’ சிந்தனையை தெளிவாக காட்டியுள்ளது.

இந்த படத்தின் மூலம் உதயநிதி ஒரு ஜனரஞ்சகமான ஹீரோவாக உருவெடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *