புறம்போக்கு என்கிற பொதுவுடமை – விமர்சனம்

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அரசு நடத்தும் தாக்குதலை எதிர்த்து போராடும் போராளி ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.. தனடனையை நிறைவேற்றும் பொறுப்பு ஜெயில் அதிகாரியான ஷாமிடம் ஒப்படைக்கப்படுகிறது. தூக்கில் போடும் தொழிலாளியான விஜய்சேதுபதி ஏற்கனவே சிலரை தூக்கில் போட்டுள்ளதால் அடிக்கடி மனநலம் பாதிக்கப்பட்டு இனிமேல் யாரையும் தூக்கில் போடமாட்டேன் என மறுக்கிறார்.

ஷாம் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், ஆர்யாவின் இயக்கத்தை சேர்ந்த கார்த்திகா அவரை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைக்க முயற்சி எடுக்கிறார். கார்த்திகாவின் திட்டத்துக்கு ஒத்துழைப்பு தர சம்மதிக்கும் விஜய்சேதுபதி, ஷாமின் வேண்டுகோளுக்கு சம்மதிக்கிறார். யாருடைய திட்டம் வென்றது என்பதைவிட, நீதி வென்றதா என்பதற்கு இறுதியில் விடை சொல்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.

மூன்று ஹீரோக்கள், ஒரு ஹீரோயின்.. ஒரு வலுவான கதைக்குள் இவர்கள் நால்வருக்கும் சம வாய்ப்பு தருவது என்றால் அதற்கு தனித்திறன் வேண்டும்.. அதை வெகு லாவகமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.

படம் முழுவதும் ஒரு போராளிக்குரிய அமைதியான பார்வையுடனும் மென்மையான ஆனால் அழுத்தமான பேச்சுடனும் ஆர்யாவை பார்க்க முடிகின்றது. பிளேபாய் இமேஜை விட்டுவிட்டு இன்னொரு தளத்திற்குள் நுழைய ஆர்யாவுக்கு இந்தப்படம் அடித்தளம் போட்டு தந்துள்ளது என்றே சொல்லலாம்.

விஜய்சேதுபதிதான் கொடுக்கிற பாத்திரத்தில் செம்மையாக புகுந்து கொள்வாரே.. இதில் ஒருவரை தூக்கில் தொங்கவிடுபவனின் மனநிலை எப்படி பேதலிக்கும் என்பதை அழுத்தமாக பிரதிபலித்திருக்கிறார். ஆர்யாவுக்கு உதவும் காட்சிகளில் ஷாமிடம் மாட்டிக்கொள்வாரோ என ஒவ்வொரு காட்சியிலும் பதைபதைப்பையும் ஏற்படுத்துகிறார்.

மூன்று ஹீரோக்களுக்கு சம வாய்ப்பு என்றாலும் ஜெயிலராக வரும் ஷாம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அந்த மெக்காலே கதாபாத்திரமாகவே மாறிப்போய்விடுகிறார். இதுபோல கனமான கேரக்டர்களும் கதைகளும் கிடைத்தால்தான் ஷாமிற்குள் ஒளிந்திருக்கும் உண்மையான நடிகன் உற்சாகத்துடன் வெளிப்படுவான் போல.

போராளி குயிலியாக வரும் கார்த்திகாவுக்கு மட்டும் அந்த கேரக்டரின் கனத்தை தாங்கமுடியவில்லை என்பதும் தனது செயற்கையான நடிப்பால் முலாம் பூசியிருக்கிறார் என்பதும் நன்றாகவே தெரிகிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை சிறைச்சாலை காட்சிகளுக்கு மட்டுமல்ல, நம் மனதிற்கும் கனம் ஏற்றுகிறது.

சிறைச்சாலைக்கு செல்ல விரும்பாத நேர்மையாளர்கள் சிறை என்றால் இப்படித்தான் இருக்கும் என கற்பனை பண்ணி வைத்ததற்கு தனது ஒளிப்பதிவால் உருவம் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். ஜனநாதன் நான்கு வருடங்கள் இடைவெளிவிட்டு படம் எடுத்தாலும் கூட அவருக்கான இடம் தமிழ்சினிமாவில் ஏன் அப்படியே இருக்கிறது என்பது இந்தப்படத்தை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது.

சமகால அரசியலை, வெளிநாடுகள் நமது நாட்டின் மீது செலுத்தும் மறைமுக ஆதிக்கத்தை இலைமறை காயாக இல்லாமல், நேரடியாகவே சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். இவற்றை சொல்லும் தைரியம் தனக்கு இருக்கிறது என்பதை புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தின் மூலமாக மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிய வைத்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.