ராட்சசி – விமர்சனம்


பள்ளிக்கூடம், மாணவர்கள் சீர்திருத்தம் என்கிற கருத்தை மையப்படுத்தி இதற்கு முன் சில படங்கள் வந்திருந்தாலும் இந்த ராட்சசி திரைப்படம் அவற்றிலிருந்து எப்படி வித்தியாசமாக பார்க்கலாம்.

அரசு பள்ளிகளிலேயே, கிட்டத்தட்ட மோசமான நிலையில் இயங்கும் ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார் ஜோதிகா. மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை தவிர மற்ற எல்லா வேலையையும் செய்யும் ஆசிரியர்கள், தங்கள் இஷ்டம்போல பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள், பள்ளிகளுக்குள்ளேயே லாரியை கொண்டுவந்து அரசியல் கூட்டத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் அரசியல்வாதிகள் என ஒரு ஒழுங்கு இல்லாத சூழலில் கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாகத்தை சீர்திருத்தி பள்ளிக்கூடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் ஜோதிகா.

இதனால் பணி செய்யாமல் டிமிக்கி கொடுத்த ஆசிரியர்களின் கோபம், ஜாலியாக பொழுதை போக்க நினைத்த மாணவர்களின் வெறுப்பு, தனியார் பள்ளிகளின் பொறாமை, அரசியல்வாதிகளின் ஆத்திரம் என எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார் ஜோதிகா. இதுபோக பள்ளிக்கூடத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிப்பதற்காக அவர் எடுக்கும் நடவடிக்கைகள் கல்வித்துறை அதிகாரிகள் கட்டத்திலேயே கடுப்பை கிளப்புகிறது.

இவர்களை எல்லாம் சமாளித்து மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவர்களையும் ஓரணியில் சேர்க்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக போலீசாரால் கைது செய்யப்படுகிறார் ஜோதிகா. அவர் எதற்காக கைது செய்கின்றனர் இந்த விஷயத்தில் மாணவர்கள் பொதுமக்கள் ஆசிரியர்கள் தங்கள் பங்காக ஜோதிகாவிற்கு காட்டியது விசுவாசமா இல்லை வெறுப்பா என்பது கிளைமாக்ஸ்.

36 வயதினிலே படத்துக்கு பிறகு ஜோதிகா நடித்த அடுத்தடுத்த படங்கள் அவருக்கு மன நிறைவை தனது இருக்கலாமோ என்னவோ, அதன்பிறகு இந்த ராட்சசி படத்தில்தான் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தன்னுடைய ஆதிக்கத்தை அழுத்தமாக நிலைநாட்டியிருக்கிறார் ஜோதிகா. விஜயகாந்த் பாணியில் தன்னை அறிமுகப்படுத்தி கொள்வதாகட்டும் ரஜினி பாணியில் அவரது பிளாஷ்பேக் காட்சிகள் எடுத்துக்காட்டுவதாகட்டும், மாணவர்களிடம் அன்பு, ஆசிரியர்களிடம் கண்டிப்பு, அரசியல்வாதிகளிடம் கோபம் கலந்த துணிச்சல் என விதம் விதமான விவரமான நடிப்பால் நம்மை காட்சிக்கு காட்சி ஆச்சரியத்தை விட்டு மீள முடியாமலேயே வைத்திருக்கிறார் ஜோதிகா. இப்படி ஒரு தலைமை ஆசிரியை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் இருந்துவிட்டால் தனியார் பள்ளிகளில் கொட்டம் தானாக அடங்கிவிடும். அதற்காகவே இந்த படத்தை பொதுமக்கள் தவறாமல் பார்க்க வேண்டும்.

இந்த படத்தில் ஆசிரியர்களாக நடித்து உள்ளவர்கள் குறிப்பாக உதவி தலைமை ஆசிரியராக ஈகோவால் முறுக்கிக் கொள்ளும் கவிதா பாரதி மற்றும் வழக்கு எண் முத்துராமன் பிடி மாஸ்டராக காமெடியில் அசத்தும் சத்யன், சாந்தமான பள்ளி ஆசிரியையாக பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் ஒரு இயல்பான பள்ளிக்கூடத்திற்குள் நாம் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை இழுப்பதற்கு என்னென்ன தகிடுதத்தங்கள் செய்ய வேண்டுமோ அதை அனைத்தையும் செய்வதன் மூலம் தன்னை ஒரு தனியார் பள்ளி கரஸ்பாண்டன்ட் ஆகவே கச்சிதமாக நிரூபித்திருக்கிறார் ஹரிஷ் பெராடி. அரசியல்வாதியாக வரும் அருள்தாஸ் கலெக்டராக வரும் நபர் அனைவருமே தங்களது கதாபாத்திரத்தின் மதிப்பு அறிந்து மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆட்டோ ட்ரைவராக வரும் மூர்த்தி பள்ளிக்கூட அவலங்களை போகிறபோக்கில் தெறிக்க விடுகிறார். ஜோதிகாவின் தந்தையாக வரும் நாகி நீடு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இறுதியில் நம்மை பரிதாபம் கொள்ள செய்து வருகிறார்.

படம் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை சவால்கள் மேல் சவால்களாக ஜோதிகா எதிர்கொள்வதாக திரைக்கதை ஷான் ரோல்டனின் பின்னணி இசையுதன் சேர்ந்து தனது திசை மாறாமல் விறுவிறுப்பாக பயணித்திருக்கிறது. ஒரு மோசமான நிலையில் இருக்கும் பள்ளிக்கூடமும் அது படிப்படியாக எப்படி பொலிவடைகிறது என்பதையும் தனது ஒளிப்பதிவு மூலம் பிரமிக்க வைக்கும் விதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய். பாரதி தம்பியின் வசனங்கள் கூர்மை. ஒரு நல்ல சமூக பொறுப்புடன் கூடிய அதேசமயம் விறுவிறுப்பான ஒரு கமர்சியல் படமாகவே இந்த ராட்சசியை உருவாக்கியுள்ள இயக்குனர் கௌதம் ராஜை, ராஜ மரியுதையுடன் நாம் வரவேற்கலாம்.