ராஜா ரங்குஸ்கி – விமர்சனம்


போலீஸ் கான்ஸ்டபிள் சிரிஷ் (ராஜா), நவீன குடியிருப்பு பகுதி ஒன்றுக்கு தினசரி ரோந்துப்பணிக்கு செல்லும்போது சாந்தினியை (ரங்குஸ்கி) பார்த்து காதலாகிறார். ஒரு விஷயத்தை வேண்டாம் என்று சொன்னால் வீம்புக்கு அதை செய்பவர் சாந்தினி. அதனால் அதே ரூட்டில் சென்று அவரை கரெக்ட் பண்ணுவதற்காக யாரோ மர்மநபர் பேசுவதுபோல் அடிக்கடி சாந்தினியை மிரட்டி, சீரிஸுடன் பழகாதே என்கிறார். இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகி சாந்தினியும் சிரிஷின் காதலை ஏற்றுக்கொள்கிறார்.

ஆனால் வில்லங்கமே அப்புறம்தான் ஆரம்பிக்கிறது. சிரிஷ் மிரட்டியது போன்றே போனில் அந்த நபர் வழக்கம்போல சாந்தினியை விட்டுவிடுமாறும் இப்போது தொடர்ந்து சிரிஷை மிரட்டுகிறான். தான் விளையாட்டாய் பண்ணிய விஷயம் யாருக்கு தெரிந்திருக்கும் என சிரிஷ் ஆராய்வதற்குள், அந்த குடியிருப்பில் சிரிஷுக்கு பழக்கமான அனுபமா குமார் கொல்லப்படுகிறார்.. மர்மநபர் ஆதாரங்களை சிரிஷுக்கு எதிராக திருப்புகிறான்.

போலீஸ் பார்வையில் இருந்து சிரிஷ் தப்பித்தாலும், சி.பி.ஐ விசாரணை அதிகாரி ஜெயக்குமாரின் சந்தேக பார்வை சிரிஷ் மேல் விழுகிறது. அதற்கேற்றவாறு அடுத்தடுத்து சில கொலைகள் நடக்க, சிரிஷ் தான் கொலைகாரன் என முடிவு காட்டுகிறார் ஜெயக்குமார். போலீசில் இருந்து தப்பித்து நண்பன் வினோத்துடன் சேர்ந்து துப்புத்துலக்கும் சிரிஷுக்கு இந்த கொலைகளுக்கான காரணமும் இதன் பின்னனியில் யார் இருக்கிறார்கள் என்கிற விபரம் தெரிவரும்போது அதிர்ச்சி அவருக்கு மட்டுமல்ல பர்வையாளர்களாகிய நமக்கும் தான்.

சாந்தினி சிரிஷின் காதலை ஏற்கும் வரை வழக்கமான கதையாக நகரும் இந்தப்படம், மர்ம நபர் ஒருவன் மிரட்ட ஆரம்பிக்கும்போது வேகம் எடுக்கிறது. அந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து சிரிஷ் ஓடியிருக்கிறார். கதைக்கேற்ற தேர்வு என்பதால் சிரிஷின் டென்ஷனிலும் அனுதாபத்திலும் நாமும் உடன் நிற்பது போன்ற உணர்வை தனது நடிப்பால் ஏற்படுத்தி விடுகிறார்.

கொஞ்ச நேரம் வந்துபோனாலே தூள் கிளப்பும் சாந்தினி, இதில் படம் முழுக்க செமையாக ஸ்கோர் பண்ணுகிறார். குறிப்பாக க்ளைமாக்சில் ரசிகர்களை அதிரவைக்கிறார் சாந்தினி. சிபிஐ அதிகாரியாக வரும் ஜெயக்குமார் கொலை வழக்கை புதிய கோணத்தில் அணுகுகிறார் என்றாலும், அவரது கேரக்டரை அவ்வளவு பில்டப் ஆக காட்டியிருக்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வியும் எழவே செய்கிறது.

இவர்களை தாண்டி நம் கவனம் ஈர்ப்பவர்கள் இருவர் இருக்கின்றனர். ஒருவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் புதுமுகம் விஜய் சத்யா. இன்னொருவர் சிரிஷின் நண்பனாக போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் கல்லூரி வினோத். விஜய் சத்யா தனது கெத்தான நடிப்பால் அசரடிக்கிறார். குறிப்பாக சிபிஐ அதிகாரி ஜெயக்குமாருக்கு வேண்டா வெறுப்பாக அவர் ஒத்துழைக்கும் காட்சிகள் சூப்பர். கல்லூரி வினோத், தனது கவுன்ட்டர்கள் மூலம் அவ்வப்போது கைதட்டலை அள்ளுகிறார். இனி இந்த இருவரையும் தேடி வாய்ப்புகள் வரும் என நம்பலாம்.. அனுபமா குமார் இருவிதமான நடிப்பை வழங்கி கதைக்கு திருப்பம் ஏற்படுத்துகிறார்.

படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ரொம்பவே பக்கபலம். பாடல்களில் சுமையை குறைத்துக்கொண்டு, பின்னணி இசையில் விறுவிறுப்பு கூட்டுகிறார். அதேபோல யுவாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு தூணாக இருக்கிறது.

ஆரம்பம் முதல் இறுதிவரை கதையை மர்மமாக விறுவிறுப்பாக நகர்த்திடுவதில் தரணீதரன் தனது வேலையை கச்சிதமாக செய்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.. குறிப்பாக க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் நாம் யூகிக்க முடியாத ஒன்று. அதேசமயம் சில இடங்களில் லாஜிக் இடிப்பதையும் சொல்லியாகவேண்டும். தான் சிக்கிவிட கூடாது என சிசிடிவி காட்சியை அழிக்கும் சிரிஷ், அதை கொஞ்சம் கவனமாக பார்த்திருந்தால் கொலைகாரன் யாரென முன்கூட்டியே கண்டுபிடித்திருக்கும் வாய்ப்பு இருப்பதை க்ளைமாக்சில் நம்மால் உணரமுடிகிறது. அதேதான் சிபி ஐ அதிகாரி விசாரணையிலும் குறையாக தெரிகிறது.

ஆனால் அதெல்லாம் க்ளைமாக்ஸில் தான் என்பதால் படத்தின் ஓட்டத்திற்கு அது எந்தவித தடையையும் ஏற்படுத்தவில்லை. மொத்தத்தில் விறுவிறுப்பான மர்ம நாவல் படித்ததது போன்ற ஒரு உணர்வை தருகிறது இந்த ராஜா ரங்குஸ்கி