ரங்கூன் – விமர்சனம்


சௌகார்பேட்டையில் நகைக்கடைகாரர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சியா நகை வியாபாரத்தில் நொடிந்துபோய் சங்கத்திற்கு இரண்டுகோடி ரூபாய் பணம் கட்டவேண்டியநிலையில் இருக்கிறார். இந்த நேரத்தில் அப்பாவை இழந்து, அம்மாவையும் தம்பியையும் காப்பாற்ற வேண்டிய சூழிலில் இருக்கும் கௌதம் கார்த்திக் சியாவின் உயிரை காப்பாற்ற அவரை தன்னிடமே வேளைக்கு சேர்க்கிறார் சியா..

அதன்பின் கௌதாமின் திறமையால் வியாபாரம் உயர கடன்களை அடைக்கிறார் சியா. அடுத்ததாக சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட தயாராகும் அவர் மிகப்பெரிய அளவில் தங்கத்தை பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அதை மொத்தமாக விற்று பணமாக்கி வர கௌதமிடம் கொடுத்து ரங்கூனுக்கு அனுப்பி வைக்கிறார்.

ஆனால் ரங்கூனில் பணமாக மாற்றிய மறுநாளே அந்த பணம் காணாமல் போகிறது. குற்ற உணர்வுடன் ஊர் திரும்பு கௌதம் நண்பர்களுடன் சேர்ந்து சியாவுக்கு சேரவேண்டிய பணத்திற்கு மாற்றுவழியில் இறங்குகிறார்.. குதம் நினைத்தபடி எல்லாம் சரியாக நடந்ததா..? ரங்கூனில் பணம் காணமல் போனது எப்படி..? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என காதல், நட்பு, துரோகம் என அனைத்தையும் கலந்து முடிவு சொல்லியிருக்கிறார்கள்.

வடசென்னை பையனாக தன்னை மாற்றிக்கொண்டுள்ள கௌதம் கார்த்திக்கின் நேர்மையான உழைப்பும் காதல், சென்டிமென்ட், ஆக்சன் காட்சிகளில் நேர்த்தியான நடிப்பும் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. அவரது முந்திய படங்களுடன் ஒப்பிடுகையில் இது அவரை வேறு ஒரு ஆளாக மாற்றியிருக்கிறது.. கீப் இட் அப் கௌதம்..

கௌதமின் காதலியாக புதுமுக நாயகி சனா, நடாஷா எனும் கேரக்டரில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக முத்தக்காட்சிகளில், கெளதம் கார்த்திக்கை போன்றே . ரசிகர்களையும் உசுப்பேத்தியிருக்கிறார். கௌதமுடனான காதல் காட்சிகளில் குறும்பு கொப்பளிக்கிறது.

படத்தின் மிக முக்கிய பாத்திராமான சியா எனும் குணசீலனாக தங்க நகை வியாபாரி கேரக்டரில் மிரட்டியிருக்கிறார் மலையாள குணச்சித்திர நடிகர் சித்திக்.. நேர்மையான போலீஸ் அதிகாரியாக முன்னாள் ஹீரோ ஆனந்த், நட்புக்காக உயிரை விடும் நாயகனின் கேங் நண்பர் மற்றும் மைத்துனர் அத்தோக்குமார் (லல்லு), பணத்திற்காக அதே நட்பை பலி கொடுக்கும் ‘டிப்டாப்’ சசி (டேனியல்), ஹெட் கான்ஸ்டபிள் – பிள்ளையார் எனும் மணிவண்ணன், ஹீரோவின் தந்தையாக சில காட்சிகளே வரும் ரென்னிஸ், லஞ்ச லாவண்ய போலீஸாக ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி, ஆகிய அனைவரும் அசத்தியிருக்கின்றனர்.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்துக்கு உயிர் கொடுக்கிறது. அனீஸ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் பர்மாவின் அன்றைய ரங்கோன், இன்றைய யங்கோனின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டிருக்கும் விதம் அருமை தங்க மார்க்கெட்டின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டு இருப்பதால் காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் கூடவே செய்கிறது..

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியை இயக்கியவர் என்பதால் படத்தையும் காமெடிப்படமாகத்தான் இயக்கியிருப்பார் என நினைத்தால் ‘கோல்டு ராக்கெட்’ பின்னணியில் ஒரு விறுவிறுப்பான படத்தை கொடுத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.