சாமி² – விமர்சனம்


15 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘சாமியின் கதையும் அதன் முடிவும் உங்களுக்கு தெரியும். இந்த இரண்டாம் பக்கத்தை முதல் பாகத்துடன் கோர்த்திருக்கிறார்களா, அல்லது புதிதாக கதை சொல்லியிருக்கிறார்களா..? பார்க்கலாம்.

பிரபல தாதா பெருமாள் பிச்சையை கொன்றுவிட்டு அவர் தலைமறைவானதாக சித்தரிக்கிறார் ஆறுச்சாமி விக்ரம். அவர் வேறு ஊருக்கு மாறிய நிலையில் ஒருவருடம் கழித்து தனது தந்தை என்ன ஆனார் என கண்டுபிடிக்க இலங்கையிலிருந்து வந்த அவரது மகன் ராவண பிச்சை (பாபி சிம்ஹா), விக்ரம் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராஜேஷை நெல்லைக்கு தந்திரமாக வரவழைத்து கொன்று குவிக்கிறார். ஐஸ்வர்யா இறந்த பின் பிரசவித்த குழந்தையுடன் டில்லியில் வந்து செட்டில் ஆகின்றனர் டெல்லி கணேஷ்-சுமித்ரா தம்பதி.

தங்களது திருநெல்வேலி வாழ்க்கை குறித்து சொல்லாமலேயே பேரன் விக்ரமை (ராம்சாமி) வளர்க்கின்றனர். . ஐ.ஏ.எஸ் பரீட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் விக்ரம், மத்திய மந்திரி பிரபுவுக்கு செகரெட்டரியாக வேலை பார்க்கிறார். ஐ.ஏ.எஸ்.பாஸாகி ட்ரெய்னிங் சென்ற விக்ரம், பயிற்சி முடிந்ததும் திடீரென ஐபி.எஸ்ஸை தேர்வு செய்கிறார். ஏதேச்சையாக அவருக்கு திருநெல்வேலிக்கே போஸ்டிங்கும் போடப்படுகிறது.

பேரன் போலீஸ் அதிகாரி ஆனது கண்டு அதிர்ச்சியாகும் தாத்தா டெல்லி கணேஷ் மூலமாக தனது தந்தையின் வரலாறு தெரியவர அதீத கோபத்துடன் நெல்லைக்கு வருகிறார் இந்த ராம்சாமி. ராவண பிச்சையையும் அவரது சகோதரர்கள் ஜான் விஜய், ஓ.ஏ.கே சுந்தர் ஆகியோரையும் என்ன கதிக்கு ஆளாக்குகிறார் என்பது மீதிக்கதை.

15 வருடங்களுக்கு பிறகும் துடிப்பு குறையாத அதே விக்ரமை இதிலும் பார்க்க முடிகிறது. முதல் பாகத்தில் ஆறுச்சாமியாக அசத்திய விக்ரம், இதில் ராம்சாமியாக ரணகளம் பண்ணுகிறார். மைதி, ஆக்ரோஷம் என இருவித நடிப்பால் தனது கேரக்டர் மூலம் இந்த இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் மனதில் நச்சென பதிய வைக்கிறார்.

ராவண பிச்சையாக தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டுள்ளார் பாபி சிம்ஹா. விக்ரமுக்கு சமமாக முக்கியத்துவமும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எதிரிகளை கொள்ளும் ஸ்டைலே தனி என்றால், கடைசியில் அவருக்கு கிடைக்கும் தண்டனையும் யாரும் யூகிக்க முடியாதது. இனி நல்ல வில்லன் கேரக்டர்களை தேர்ந்தெடுத்தால் பாபி சிம்ஹாவின் எதிர்காலம் வளமாகும்..

மந்திரி மகளாக வரும் கீர்த்தி சுரேஷ், ஹரியின் நாயகிகளுக்கு உரிய இலக்கணங்கள் எதையும் விட்டுவிடாமல் அழகாக பிரதிபலித்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் த்ரிஷாவுக்கு பதிலாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்ச நேரமே என்றாலும் பாந்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

மத்திய அமைச்சராக கொஞ்சம் வில்லத்தனம் கலந்து கெத்து காட்டி, பின் பாசமான அப்பாவாக சரண்டராகும் வேலை பிரபுவுக்கு புதிதா என்ன..? அசத்தியிருக்கிறார். வழக்கமான ஹரி பட அம்மாக்களின் டெம்ப்லேட்டில் அச்சு அசலாக பொருத்திக்கொள்கிறார் ஐஸ்வர்யா. பாபி சிம்ஹாவின் அண்ணன்களாக ஜான்விஜய், ஓ.ஏ.கே.சுந்தர் இருவருமே சரியான தேர்வு..

கூட்டணி இல்லாவிட்டால் சூரி நன்றாகவே தடுமாறுகிறார். அவருக்கு வேலை குறைவுதான் என்றாலும் ஏதோ சமாளிக்கிறார். இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ்கான் என இந்த பாகத்திற்கு தேவையான புதிய ஆட்களும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் அதிரூபனே மற்றும் புது மெட்ரோ ரயிலு பாடல்கள் அசத்துகின்றன. பிரியன் மற்றும் வெங்கடேஷ் அங்குராஜின் ஒளிப்பதிவு ஹரியின் வேகத்தை கணக்கிட்டு பரபரவென வேலை பார்த்துள்ளது.

படத்தின் முக்கிய பலமே, முந்தைய பாகத்தின் கேரக்டர்களை இந்தப்படத்திலும் அழகாக இணைத்தது தான். அதேபோல பெருமாள் பிச்சைக்கு ஒரு குடும்பம் இருப்பதாக தனது கற்பனைக்கு அழகாக உருவம் கொடுத்துள்ளார் இயக்குனர் ஹரி. தேவையில்லாத காட்சிகள் என எதையுமே படத்தில் ஹரி திணிக்கவில்லை என்பதும் படத்தின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணம். இடைவெளிக்கு முன்னர் என்ன வேகமோ, அது இரண்டாம் பாதியிலும் குறையாமல் இறுதி வரை நகர்த்தி சென்றிருக்கிறார் ஹரி, பாபி சிம்ஹாவுக்கு சவால் விட்டு அவர் காரியங்களை சாதிக்கும் காட்சிகள் எல்லாம் திரும்ப படம் பார்க்க தூண்டு ரகம்.

மொத்தத்தில் இந்த சாமியும் ரொம்பவே வேகமும் விவேகமுமாகத்தான் வந்திருக்கிறார்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *