சகா ; விமர்சனம்


தனது வளர்ப்புத்தாயை சொத்துக்காக கொன்ற அவரது தம்பியை கொலை செய்துவிட்டு நண்பன் பாண்டியுடன் சேர்ந்து சிறை செல்கிறார் சரண். சிறைக்குள் ஏற்கனவே ரவுடித்தனம் பண்ணும் பிருத்வியின் பகையை சம்பாதிக்கிறார்கள் இருவரும்.

இதனால் ஏற்படும் மோதலில் பாண்டியை கொல்கிறார் பிருத்வி. இந்த நிலையில் சரணுக்கு ஜெயிலில் இன்னொரு நண்பனாக வருகிறார் கிஷோர். கிஷோர் விரும்பும் பெண்ணை வேறு ஒருவன் தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொள்வதாக கிஷோரிடம் சவால் விட்டுப் போகிறான்.

தனது காதலியை காப்பாற்ற சிறையில் இருந்து தப்ப முயற்சி செய்கிறார் கிஷோர். தனது நண்பனை கொன்று விட்டு விடுதலையாகி சென்ற பிருத்வியை கொல்வதற்காக தானும் தப்பிக்க நினைக்கிறார் சரண். ஆனால் இதற்கு இடையூறாக வந்து சேர்கிறார் இன்னொரு இளம் கைதியான ஸ்ரீராம்.

ஒருகட்டத்தில் சமரசம் ஆகி மூவரும் சேர்ந்து திட்டமிட்டு சிறையிலிருந்து தப்ப முயற்சிக்கின்றனர் இதற்கு இடைஞ்சலாக இருக்கும் சிறை வார்டன் தீனாவை தாக்கிவிட்டு தப்பிக்கின்றனர். இன்னும் சில போலீசார் துரத்த ஆரம்பிக்க அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஸ்ரீராமை கீழே தள்ளிவிட்டு, அதை கேடயமாக பயன்படுத்தி சரணும் கிஷோரும் தப்பிக்கின்றனர்.

அவர்களைத் தேடி வாடர்ன் தீனா ஆவேசத்துடன் கிளம்ப, கொஞ்ச நேரத்தில் ஸ்ரீராமும் ஜெயிலிலிருந்து தப்பிக்கிறார்.. வெளியே சென்ற சரண் கிஷோர் ஆகியோரால் தாங்கள் எதற்காக வந்தோமோ அதை சாதிக்க முடிந்ததா..? இல்லை தீனாவின் கையில் இவர்கள் சிக்கினார்களா..?

தாங்கள் தப்பிப்பதற்காக தன்னை மாட்டிவிட்ட இவர்கள் மீது கோபத்துடன் வெளியே வரும் ஸ்ரீராம் இவர்களை என்ன செய்தார்..? மேலும் ஸ்ரீராம் எதற்காக தப்பிக்க முயற்சி செய்தார் என பல கேள்விகளுக்கு மீதி கதை விடை சொல்கிறது.

கோலிசோடா ‘பசங்க’ கூட்டத்தை மீண்டும் இந்த படத்திற்காக ஒன்றுல் கூட்டியுள்ளார்கள். ஓரளவு மெச்சூர்டான முகத்தோற்றத்துடன் இருக்கும் இவர்கள் அந்த டீன்-ஏஜ் குற்றவாளிகள் கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்துகிறாகள்.

வடசென்னை படத்தில் கெத்து காட்டிய சரண் இந்த படத்தில் ஆச்சரியப்பட வைக்கிறார். பால் வடியும் அவளது முகம் தான் அந்த கேரக்டரோடு கொஞ்சம் பொருந்த மறுக்கிறது இது மற்ற மூவருக்கும் சேர்த்த் தான்.

சிறைக் காட்சிகள் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளன வில்லனாக பிருத்வி ஓரளவு கொடூர முகம் காட்டி தனது தேர்ச்சி நியாயப்படுத்துகிறார். வாடர்னாக வரும் தீனா உக்ர மூர்த்தியாக வில்லத்தனம் காட்டி டெரர் ஏற்றுகிறார்.

போலீஸ் என்றாலும் அவனும் மனிதன் தானே என காய்ந்த நிலத்தில் ஈரமாக கை தென்னவனின் கதாபாத்திரம் நேர்த்தியான வடிவமைப்பு. கதாநாயகிகளாக ஆய்ரா, ஆரோஹி மற்றும் நீரஜா ஆகியோர் பரவாயில்லை ரகம். இதில் சரண் மற்றும் அவருக்கு ஏற்படும் எதிர்பாராத காதல் எபிசோட் ரசிக்கும்படியாக இருக்கிறது.

படிக்கும் வயதில் முறையாக ஆதரவு காட்ட யாருமில்லாத இளம் சிறார்கள் எப்படி தடுமாறி, தடம் மாறி குற்றவாளிகளாக மாறி. அவர்களது வாழ்க்கை எப்படி திசைமாறி எங்கேயோ போய்விடுகிறது என்பதை ஒரு சமூக விழிப்புணர்வு கருத்தாக சொல்லியிருக்கிறது இந்த சகா. அதற்காக இயக்குனர் முருகேஷை ஒருமுறை பாராட்டி விடலாம்.