சைத்தான் – விமர்சனம்


மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் விஜய் ஆண்டனி.. அனாதையான அருந்ததியை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் திருமணத்துக்குப்பின் விஜய் ஆண்டனிக்கு மட்டுமே கேட்கும் ஒரு குரல் அவரை அவ்வப்போது டார்ச்சர் பண்ணுகிறது.. மேலும் விஜய் ஆண்டனியை ஒரு பைத்தியக்காரன் அளவுக்கு மாற்றிவிடுகிறது.. விஜய் ஆண்டனியின் முதலாளி ஒய்.ஜி.மகேந்திரன் அவரை மனோதத்துவ நிபுணரான கிட்டியிடம் அழைத்து வருகிறார்..

அவர் விஜய் ஆண்டனியை மனோவசியப்படுத்தி கேள்விகளை கேட்டதில் விஜய் ஆண்டனியின் இதற்கு முந்தைய ஜென்மமும் அவரது பூர்வீகம் தஞ்சாவூர் என்பதும் அதில் ஜெயலட்சுமி என்பவர் தான் அவரது மரணத்துக்கு காரணமானவர் என்பதும் தெரிய வருகிறது.

விஜய் ஆண்டனியின் காதில் அடிக்கடி ஒலிக்கும் அந்த குரல் அடிக்கடி வெளிப்படுத்தும் பெயர் தான் ஜெயலட்சுமி.. சிகிச்சையில் இருந்து தப்பி உண்மை தேடி தஞ்சாவூர் செல்கிறார் விஜய் ஆண்டனி.. அங்கு தனக்கு முன் ஜென்மத்தில் நடந்தவை உண்மைதான் என அறிந்துகொள்ளும் விஜய் ஆண்டனியை மீண்டும் சென்னைக்கு அழைத்துவந்து சிகிச்சைக்கு உட்படுத்துகிறார்கள்.

இந்தநிலையில் விஜய் அருந்ததி கடிதம் எழுதிவைத்துவிட்டு காணாமல் போகிறார். அவரைத்தேடி கிளம்பும் விஜய் ஆண்டனிக்கு தனது மனைவி பற்றிய அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது.. அது என்ன, அருந்ததிக்கு என்ன ஆயிற்று, விஜய் ஆண்டனியின் மன நோய் பாதிப்புக்கு உண்மையான காரணம் யார் என்பது க்ளைமாக்ஸ்..

ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லருக்கு உண்டான அத்தனை அம்சங்களும் படம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.. தனக்கு பொருத்தமான கேரக்டர்களையும் கதையை மட்டுமே அவர் தேர்ந்தெடுக்கிறார் என்பதற்கு இந்தப்படம் இன்னுமொரு உதாரணம்.. அமானுஷ்ய குரலால் டார்ச்சருக்கு ஆளாகும் அந்த குழப்பமான கேரக்டரில் வெகு இயல்பாக பொருந்தியுள்ளார் விஜய் ஆண்டனி.. பிளாஸ்பேக்கில் பாரதியார் கெட்டப்பில் மிடுக்கான மீசையுடன் தமிழ் வாத்தியாராக வரும் விஜய் ஆண்டனி கம்பீரமாக காட்சியளிக்கிறார்..

புதுமுகமாக இருந்தாலும் குருவி தலையில் பனங்காய் போல நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர் தான் அருந்ததிக்கு.. தனது இரண்டு கேரக்டர்களையும் தனது நடிப்பால் வித்தியாசப்படுத்தி இருக்கிறார் அருந்ததி. ஆடுகளம் முருகதாஸ், ஒய்.ஜி.மகேந்திரன், கிட்டி இருவரும் படத்தில் மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளனர்.. அம்மாவாக மீரா கிருஷ்ணன், ஆட்டோ ட்ரைவராக நீண்ட நாளைக்குப்பின் விஜயசாரதி மற்றும் சாருஹாசன் ஆகியோரும் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

படம் முழுவதும் நம்மை திகில் மூடிலேயே வைத்திருக்கின்றனர் ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபரயுத்தும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும்.. அதிலும் ‘ஜெயலட்சுமிஈஈஈஈ” என அவ்வப்போது பின்னணியில் எழும் குரல் அடிக்கடி நம் மனதை பிசைகிறது. ‘ஜெயலட்சுமி’ பாடலும் வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளது.

இடைவேளை வரை எந்தவித தொய்வுமின்றி பரபரப்பாக பயணிக்கிறது கதை. இடைவேளைக்குப்பின் வரும் தஞ்சாவூர் எபிசோடும் கூட விறுவிறுப்பாகவே செல்கிறது. ஆனால் கிளைமாக்ஸில் இதெல்லாம் நடப்பது போதை மருந்து மூலமாக என யூ டர்ன் அடித்திருப்பது படத்தின் விறுவிறுப்பை குறைக்கவே செய்திருக்கிறது. வில்லன்கள் பல பெண்களை அடைத்து வைத்து போதை மருந்தை பரிசோதிக்கும் அளவுக்கு பயங்கரமானவர்கள்.. ஆனால் விஜய் ஆண்டனியிடமும் அந்த மருந்தை பரிசோதிப்பதற்காக தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாக அருந்ததியின் திருமணத்தை நடத்துவானேன்..? இப்படி லாஜிக்காக சில கேள்விகள் எழவே செய்கின்றன. ஆனாலும் விறுவிறுப்பான திரைக்கதையால் இரண்டு மணி நேரம் உங்களை இருக்கையிலே கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *